
ஒரு இலக்கில் ஒரு செயலில் ஒரு விஷயத்தில் நாம் முழு கவனம் வைத்து இயங்கினால் எந்தப்பிரச்னையும் இல்லை.
ஒரு செயலில் கவனம் செலுத்த பலருக்கு ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால் சில நுட்பங்களை பயன்படுத்தினால் கவனத்தை ஒருமுகப்படுத்தி வேலையை செய்யவோ அல்லது படிக்கவோ முடியும்.
கவனத்தை ஒருமுகப்படுத்த சில வழிகள்.
கவனச் சிதறல்களை குறைத்தல் மொபைல் போன் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை ஒதுக்கி வைக்கலாம்.
நேரத்தை ஒதுக்குதல்.
ஒரு குறிப்பிட்ட செயலுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் அந்த செயலில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
சுத்தமான சூழல்.
அமைதியான ஒழுங்கமைக்கப்பட்ட சூழலில் வேலை செய்யவோ அல்லது படிக்கவும் செய்யலாம்.
சுய கவனிப்பு.
தியானம் யோகா போன்ற பயிற்சி முறைகள் மூலம் கவனத்தை மேம்படுத்தலாம்.
சரியான இடைவேளைகள்.
சில நேரத்திற்கு பிறகு சிறு இடைவேளை எடுத்துக்கொண்டு மீண்டும் வேலையை தொடரலாம்.
ஆழமான சுவாசம்.
சோர்வாக உணரும்போது கண்களை மூடிக்கொண்டு ஆழமான சுவாசம் எடுப்பது கவனத்தை மேம்படுத்தலாம்.
உடற்பயிற்சி.
உடற்பயிற்சி செய்வது மனதை கூர்மை அடையச்செய்து கவனத்தை மேம்படுத்த உதவுகிறது.
நல்ல தூக்கம்.
போதுமான தூக்கம் மனதை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது.
பழக்க வழக்கங்களை மாற்றுதல்.
சில நேரங்களில் ஒரு பழக்கம் கவன சிதறல்களுக்கு வழிவகுக்கும். வகுக்கும். இந்த பழக்கத்தை மாற்றி கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்.
வேலைகளைப் பிரித்தல்.
பெரிய வேலையை சிறிய வேலைகளாக பிரித்து செய்வது ஒவ்வொரு வேலையும் முழுமையாக கவனம் செலுத்த உதவுகிறது.
நோக்கத்தை வைத்திருத்தல்.
என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்து வைத்திருப்பது கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது.
கூடுதல் உதவி.
கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
இதற்கு உதாரணம் இக்கதை.
ஒரு கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார் அனுபவத்திலும் அறிவிலும் அந்த கிராமத்திலேயே மிகவும் மதிக்கப்பட்டவராக அவர் இருந்தார். எல்லோரும் பிரச்னைகளுக்கு அவரிடம் சென்று ஆலோசனை கேட்பார்கள். ஊரில் என்ன சச்சரவு என்றால் அவர் சொல்லும் தீர்ப்பை எல்லோரும் கேட்பார்கள்.
ஊருக்கு புதிதாக வந்த ஒரு இளைஞன் இந்த கேள்விப்பட்டு அந்த ஆசையுடன் போனான்.
"ஊரில் எல்லோரும் உங்களைப்போல அறிவாளி யாரும் இல்லை என்கிறார்கேளே?" எனக் கேட்டான்.
"ஆமாம், இப்படித்தான் சொல்கிறார்கள்" என்று தன்னைடக்கத்துடன் ஆசிரியர் சொன்னார்.
"மற்றவர்கள் செய்யாத எந்த விஷயத்தை நீங்கள் செய்வதால் உங்களை அறிவாளிகள் என்கிறார்கள்? என்று இளைஞர் கேட்டான்.
"நான் சாப்பிடும்போது, சாப்பிட மட்டும் செய்கிறேன். தூங்கும்போது, தூங்க மட்டும் செய்கிறேன். பேசும்போது, பேசமட்டும் செய்கிறேன் என்றார் ஆசிரியர்.
இளைஞன், குழப்பமாகி, "எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள் அப்புறம் ஏன் அவர்கள் அறிவாளியாக கொண்டாடப்படுவதில்லை? என்றான்.
"அதுதான் இல்லை, நீங்கள் சாப்பிடும்போது உணவின் ருசியை கவனிக்காமல் வேறு ஏதேதோ கவலைகள் பற்றி யோசிக்கிறீர்கள். படுத்ததும் தூங்காமல் அன்றைய நாளில் நிகழ்ந்த மோசமான சம்பவங்களை நினைத்து கவலைப்படுகிறீர்கள்.
ஒருவரிடம் பேசும்போது கூட உரையாடலை கவனிக்க முடியாதபடி வேறு ஏதேதோ சிந்தனைகள் மனதில் ஓடுகின்றன. எதைச் செய்கிறோமோ, அதில் கவனம் வைக்கவேண்டும் என்றார் ஆசிரியர். இளைஞனுக்கு இப்போது அவர் சொல்வதன் அர்த்தம் புரிந்தது.
மற்ற எல்லாவற்றையும் விட இந்த அறிவுரை அனைத்துக்கும் பொருந்தும். அதனால் ஒரு இலக்கில், ஒரு செயலில், ஒரு விஷயத்தில் முழு கவனம் வைத்து இயங்கினால் பிரச்னை எதிலும் இல்லை.