
கோபம் என்பது பலரின் வாழ்வில் முக்கியமான பங்கை எடுத்துக் கொண்டாலும், அந்த கோபத்திற்குள் குணம் இருக்க வேண்டும். அதுவே நம் எண்ணமாக இருக்க வேண்டும். நாவை அடக்க வேண்டும் என்பதை விட, யாருக்கும் பிரச்சனை இல்லாது பேசுதல் வேண்டும் என்பதே சிறந்ததாகும். அதாவது, பேசுவதன் முடிவு தெரிந்து பேசுதல் நல்லது.
ஒரு சிலரை, ஒரு சிலர் இழுத்து விடுதல், தூண்டிவிடுதல் எல்லாம் செய்வர். இது, 'இதுதான் செய்வினை என்பதோ!' என்று நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. பணத்தின் தேவையை புரியாமல் ஆடம்பர செலவுகளில் ஈடுபடும் போதும், பிரச்சனைகளை புரிந்து கொள்ளாமையாலும், சின்னக் குழந்தைகளுக்கு புத்தி சொல்வது போல் சொல்வதுமாக இருக்கும் போதும், மனிதனின் மனதில் தோன்றும் எரிச்சல் காரணமாக, வீட்டில் மோதல் ஏற்படுகிறது. அப்போது ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர்.
ஆண்களோ, பெண்களோ தன்னுடைய சிரமமான வேலைகளை தனியாக இருந்து செய்து விட்டு வீட்டிலுள்ள நபர்களிடம் களைப்பில்லாத முகத்தோடு நல்லதொரு பொலிவான தோற்றத்தை காண்பிக்க வேண்டும். வீட்டிலுள்ளவர்கள்தானே என்று எப்போதும் நிசாரமாக பழகக்கூடாது. 'வாழ்க்கை என்பது எத்தனையோ அடங்கியது. இது மட்டுமா வாழ்க்கை?' என்று நினைத்து விட்டால் கோபம் மறைந்து விடும். ஆத்திரம், அவசரம் என்பது அனைத்தையும் மறக்கச் செய்யும். சமயத்தில் உழைப்பைக் கூட மறக்கச் செய்யும். இங்கே நிதானம் என்பது பெரியது.
மனிதனின் நற்குணத்தை அழிப்பது கோபமாகும். கோபமானது உண்மை நிலையையே மாற்றி விடும் தன்மை உடையது. கோபம் வராமல் இருப்பது என்பது சாத்தியமில்லை. கண்டித்தல் என்ற ஒன்றாவது இருக்க வேண்டும். அதன் விளைவு கோபமாகும் போது அதுவும், பிற நபரிடம் என்று வரும் போது, போடா என்று மனதளவில் ஒரு வார்த்தையோடு போய் விடுவதுதான் நல்லது.
ஒரு காரணத்திற்காக கோபப்பட்டு விட்டு சற்று நேரத்திற்குள் இன்னொரு காரணத்திற்குள் நுழைவர். கடைசியாக எதற்கு கோபப்பட்டோம், எங்கிருந்து தொடங்கியது என்று கூடத் தெரியாமல் திணறுபவர்கள் ஏராளம். இது அவர்களின் இயலாமையை குறிப்பதாகும். கோபமானது தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுப்பதாகும்.
ஒரு நபரின் கோபத்தின் போது இன்னொரு நபர் எரிச்சலாக தோற்றமளித்தால் கூட கோபம் அதிகரிக்கும். இது இயற்கை. பொது அறிவு என்பது, நம்மிடம் மோதுபவரை சமாதானப்படுத்துதலாகும். இதற்கு இப்படி செய்தால் முடிந்து போய் விட்டது, அதற்கு போய் கோபமா என்று கூறி சமாதானப்படுத்த முயல்வது ஆகும்.
ஒரு சிறு தவறு செய்து விட்டாலும் 'தெரியாமல்...' என்று சொல்லி விடுவது நல்லது. விளைவுகளை எப்போதும் நன்றாக யோசித்து பேசுவது நல்லது.
பிழைக்கத்தெரிந்தவர்கள் விட்டு கொடுக்கும் இடத்தில் விட்டு கொடுத்து, பிடிக்கும் இடத்தில் பிடித்து, பேச்சைக் குறைத்து, இடத்தை சரிக்கட்டுவது வழக்கம். மக்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது உள் மனதை புரியும் படி நிதானமாக பேசுவது நல்லது.