
மனம் என்பது நமது உடலில் உள்ள உருவமற்ற ஒரு மந்திர சக்தியாகும். எல்லா செயல்களும் மனதின் எண்ணங்களின் மூலம் தீர்மானிக்கப்பட்டு நடைபெறுகின்றன. உடல்நலக் குறைபாடுகளுக்கு பெரும்பாலும் மனநலக்கோளாறுகள்தான் காரணமாகின்றன. ஆகவே நாம் மனநலம் பற்றி அதிகமாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு எண்ணத்தின் மூலமாக நமது மனம் செயல்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்து முதிய பருவம் வரை பல்வேறு நிலைகளில், பல்வேறு வேற்றுமைகளுடன் மனம் செயல்படுகிறது. நாம் எல்லோரும் நமது எண்ணங்களின் மறு உருவங்கள்.
நமது மனத்தில் எழும் எண்ணங்களின் லட்சியங்கள், உணர்வுகள், ஆசைகள் முதலியவற்றின் தன்மையைப் பொருத்தே நமது இயல்புகள், குணங்கள் உருவாகின்றன. நமது எண்ணங்களுக்கு பின் இருக்கும் ஆக்க வேகம் வாழ்க்கையின் குறிக்கோளை நோக்கியே முடுக்கிவிடப்படுகிறது.
நம்முடைய மனோசக்திகள்தான் நமது சேவகர்கள். நாம் எதிர்பார்க்கும் ஒன்றைத்தான் அவை நமக்கு அளிக்கும். வீணான மனப்போக்கு எல்லாம் பாழான நிலைகளுக்கு தள்ளுகின்றன. நமது எண்ணங்களைக் கொண்டுதான் நம் உடலை ஆக்கிக் கொள்கிறோம் கவலை சூழ்ந்த மனம் துடிப்பதுடன் செயல்பட வாய்ப்பில்லை.
நம்முடைய நலிவான அம்சங்கள் பற்றியோ, குறைபாடுகள் அல்லது தோல்விகளைப் பற்றியோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த நிகழ்ச்சியும் நமது மனமகிழ்ச்சியை பாதிக்கச் செய்யாது என்ற மனத்திண்மையை உறுதிப்பாட்டுடன் கொண்டு செலுத்த வேண்டும். பயம், வெறுப்பு, அவநம்பிக்கை மனதிற்குள் எழ முயற்சித்தால் அந்த எண்ணங்களை அகற்றிவிட வேண்டும்.
எப்போதும் நட்பார்ந்த நேர்மறை எண்ணங்களையே மனதில் புகுத்த வேண்டும். கலகலப்பான, மகிழ்ச்சியான மற்றும் செல்வச்செழிப்பான சிந்தனைகளையே மனதில் உருவகப்படுத்திக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் எதிர்மறையான வேறு ஒன்றையும் உள்ளே வர மனம் அனுமதிக்காது.
ஒவ்வொருவரும் நிச்சயம் வெற்றி அடைவோம் என்று தீவிரமாக நம்புகிறோமோ அந்த மனோசக்தியை அளவிட முடியாது. ஒருவர் முன்னேற்றப்பாதையில் உயர்வதும், தாழ்வுறுவதும் மனோசக்தியின் வெளிப்பாடுகள். வாழ்க்கை பிரச்சினைகள் வெளியில் உருவாவதில்லை. அவைகளை நம் மனதில் உள்வாங்கி பதிய வைத்து தீர்வு செய்கின்றன. பிரச்னைகளை நிதானமாக நேர்மறை எண்ணங்களுடன் எதிர்கொண்டால் பிரச்னைகள் படிப்படியாக மறைய வாய்ப்புண்டு.
இன்றைய போட்டி நிறைந்த அதிவேக வாழ்க்கை முறைகளினால், சிறியவர் முதல் முதியோர்வரை பல்வேறு நிலைகளில் வெளி உலகத்திலும், இல்லத்திலும் தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன் விளைவாக மன அழுத்தம், மன இறுக்கம், மன அதிர்ச்சி, மனச்சோர்வு, கவலை முதலிய மனக் கோளாறுகள் தாக்கி உடல்நிலையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. முடிவில் அதிக ரத்த அழுத்தம், மூளைக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, புற்றுநோய், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.