

"இவன் என் உயிர் நண்பன்", "அவள் என் உடன்பிறவா சகோதரி" என்று நாம் சிலரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும், ஒவ்வொரு ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்திருப்போம்.
ஆனால், என்றாவது ஒரு நாள், நாம் எதிர்பார்க்காத நேரத்தில், அவர்களே நம் முதுகில் குத்தும்போதுதான் அவர்களின் உண்மை முகம் வெளிவரும். மனித உறவுகளில் எவ்வளவு தூரம் இடைவெளி இருக்க வேண்டும், ஏன் அதிக நெருக்கம் ஆபத்தானது என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
மனிதர்கள் பச்சோந்திகள்!
நாம் அனைவரும் ஒரு மாயையில் வாழ்கிறோம். இன்று நம்முடன் சிரித்துப் பேசும் நபர், நாளை அதேபோல இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த ஆடியோ கூறுவதுபோல, மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்கள் நிறத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இன்று உங்களுக்குத் தேவையானவராக இருக்கும் ஒருவர், நாளை அவருடைய தேவை முடிந்ததும் உங்களைக் கழட்டிவிடத் தயங்கமாட்டார். எனவே, ஒருவரின் தற்காலிகமான நல்ல குணத்தைப் பார்த்துவிட்டு, அவரிடம் முழுமையாகச் சரணடைவது முட்டாள்தனம்.
வார்த்தைகளே ஆயுதம்!
அதிக நெருக்கத்தின் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், 'ஓவர் ஷேரிங்' செய்வது. சந்தோஷமாக இருக்கும்போது, உங்கள் பலவீனங்களையும் ரகசியங்களையும் ஒருவரிடம் கொட்டிவிடுவீர்கள். ஆனால், நாளை அவருடன் ஒரு சண்டை வரும்போது, நீங்கள் சொன்ன அதே ரகசியங்களை வைத்துத் தான் அவர் உங்களைத் தாக்குவார். உங்கள் பலவீனம் எதிராளிக்குத் தெரியும்போது, நீங்கள் அவருக்கு அடிமையாகிறீர்கள். எனவே, மனதுக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வாய் திறக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
எதிர்பார்ப்பே ஏமாற்றம்!
நாம் ஏன் அதிக நெருக்கம் கொள்கிறோம்? அவர்கள் நமக்கு உதவுவார்கள், நம்மைப் புரிந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான். ஆனால், நீங்கள் அதிகமாகப் பழகப் பழக, அவர்களிடம் உங்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாகும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது வரும் கோபம், அந்த உறவையே முறித்துவிடும். தனித்து இருக்கப் பழகுபவனே வாழ்க்கையில் ஜெயிக்கிறான். மற்றவர்களைச் சார்ந்திருப்பவர்கள் எப்போதும் ஏமாற்றத்தையே சந்திக்கிறார்கள்.
எல்லை அவசியம்!
எல்லோரிடமும் சிரித்துப் பேசி, இளித்துக்கொண்டு இருந்தால், அவர்களுக்கு உங்கள் மீது மரியாதை இருக்காது. ஒரு வரையறை வகுத்துக்கொண்டு, அதற்குள் யாரையும் அனுமதிக்காமல் இருப்பவர்களே மதிக்கப்படுகிறார்கள். நெருக்கம் அதிகமானால், மரியாதை குறையும் என்பது பழைய மொழி மட்டுமல்ல, நிதர்சனமான உண்மையும் கூட. உங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள, தேவையில்லாத பேச்சுக்களையும், அநாவசியமான பழக்கங்களையும் குறைத்துக்கொள்வது அவசியம்.
அன்பு காட்டுவது தவறல்ல, ஆனால் அது அறிவுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். நெருப்பு குளிருக்கு இதமானதுதான், அதற்காக அதைத்தொட்டால் சுட்டுவிடும். மனித உறவுகளும் அப்படித்தான். குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கும் வரைதான் அது அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.