
பேசுவதற்கு விஷயம் ஒன்றுமே இல்லாத பொழுது பேசாமல் இருப்பது தான் சரி. ஆனால் சிலருக்கு பேசாமல் இருக்கவே முடியாது. வீட்டிலாகட்டும், பஸ் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போதும் பேசிக் கொண்டே வருவது சிலரின் இயல்பாக இருக்கும். அப்படி பேசியே ஆகவேண்டும் என்று எண்ணினால் அருகில் அமர்ந்திருக்கும் நபரிடம் பொள்ளாச்சி போய்ச் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? என்று மெதுவாக பேச்சை ஆரம்பிக்கலாம்.
அவர் கூறும் பதிலை பொறுத்து பேச்சை வளர்த்துக் கொண்டே செல்லலாம். ஓ உங்கள் சொந்த ஊர் அதுதானா? வேலையாகப் போகிறீர்களா? என்று பேச்சை மெதுவாகத் தொடரலாம். எதிராளிக்கும் உங்கள் பேச்சில் ஆர்வம் இருந்தால் சுவாரஸ்யமாக பதில் அளிப்பார். அதற்காக நீங்கள் அனாவசியமாக அவரது சொந்த வாழ்க்கையில் நோண்டி நுங்கெடுக்க முயற்சிக்கக் கூடாது.
வீட்டில் என்றால் பேச்சை தொடர்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. சூடாக ஒரு கப் காபி கிடைக்குமா? என்று ஆரம்பித்து மெதுமெதுவாக பேச்சை வளர்க்கலாம். கணவன் மனைவிக்குள் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றிவிட்டால் இருவருக்கிடையே ஏதோ வெறுப்பு அல்லது கசப்பு இருப்பதாக அர்த்தம்.
ஆனால் இதனை வளர்த்துக் கொண்டு நேரத்தை வீணாக்காமல் உடனடியாக பேசி சமாதானம் ஆகிவிடலாம். உனக்கு பிடிக்கும் என்று இந்த ஸ்வீட் வாங்கி வந்தேன் என்றோ, உங்களுக்கு பிடிக்குமே என்று இந்த டி ஷர்ட் எடுத்தேன் என்றோ சொல்லி சுமுகமாக்கிக் கொள்ளலாம்.
வெளியூர் பயணங்களில் அதுவும் தனியாக பயணம் செய்யும்பொழுது உங்களுக்கு பேச ஒன்றும் இல்லை, மற்றவருக்கும் உங்களோடு பேச ஒன்றும் இல்லை என்றால் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வரலாம். இல்லையெனில் கைப்பேசியில் பொழுதைக் கழிக்கலாம்.
ஆனால் இது எல்லாவற்றையும் விட பேசிக்கொண்டே வருவதில் இருக்கும் சுவாரசியமே தனிதான். உண்மை என்னவென்றால் பெரும்பாலானவர்கள் பேசுவதில்தான் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். பிறர் கூறும் விஷயங்களை காது கொடுத்து கேட்பதில் விருப்பம் காட்டுவதில்லை.
பேசுவதற்கு ஒன்றுமே இல்லாதபோது சிலர் பேச்சை ஆரம்பித்தே ஆக வேண்டும் என்றெண்ணி சொந்தக் கதை, சோகக் கதை, சுயபச்சாதாபம், தனக்கிருக்கும் வியாதி என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். எதிராளியால் எழுந்து ஓடவும் முடியாது; காது கொடுத்து கேட்கவும் முடியாது. எனவே பிறருடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லாத பொழுது பேசாமல் வருவது நல்லது அல்லது சுவாரசியமான விஷயங்களை பேசிக்கொண்டு வரலாம். சிறியவர்களாக இருந்தால் அவர்களுடைய படிப்பு அல்லது வேலையை பற்றி பேசலாம்.
பொதுவான விஷயங்களான வெயில், தண்ணீர் தட்டுப்பாடு, விலைவாசி, பெட்ரோல் விலை உயர்வு என்று பேச்சைத் தொடங்கலாம். சமீபத்தில் படித்த புத்தகத்தைப் பற்றியோ அல்லது திரைப்படத்தைப் பற்றியோ பேசலாம், விவாதிக்கலாம். முடிந்த வரை எதிர்மறையாக பேசுவதை தவிர்த்து விடுவது நல்லது. அடுத்தவர்கள் பேசும்பொழுது உன்னிப்பாக கவனிப்பதும், சொன்னதையே சொல்லாமல் புதிது புதிதாக பேசுவதுமாக இருந்தால் மற்றவர்கள் நம்மோடு பேச்சை தொடர விரும்புவார்கள். நம் பேச்சு மிகவும் இயல்பாக இருக்கவேண்டும்.
பேசுவதற்கு ஒன்றுமே இல்லாத பொழுது பிறருடன் பேச்சை துவக்குகிறேன் என்று அவர்களுடைய வயது, வருமானம் அல்லது அரசியலைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. அதேபோல் பிறருடைய குடும்ப விஷயங்களை தோண்டித் துருவி கேட்காமல் இருப்பதும் நல்லது. பொதுவாகவே பிறருடன் பேச்சை தொடங்குவது என்பது ஒன்றும் பெரிய கடினமான விஷயமாக இருக்காது. ஆனால் அதே சமயம் தேவையற்ற பேச்சுகள் பிரச்னைகள் உருவாவதற்கு காரணமாகலாம். எனவே அளவோடு பேசி வளமோடு வாழ்வதுதான் சிறந்தது.