அடிக்கடி மன்னிப்பு கேட்கும் நபரா நீங்க?

Apology
Apology
Published on

ஒரு தவறை நாம் செய்து விட்டால், அதற்காக மன்னிப்பு கேட்பது என்பது நியாயமானதாகவும் மற்றும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் செயல் தான். இல்லை என்று சொல்லவில்லை. ”மன்னிக்கவும்” என்று நாம் சொல்லும் போது, அது நம்முடைய நல்ல நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. மேலும், நம்மை கண்ணியமாகவும், மரியாதையாகவும் இருக்க வைக்கிறது.

ஆனால், அதுவே உங்களின் நிரந்தரமான இயல்பு நிலையாக மாறும்போது, நீங்கள் எந்தத் தவறும் செய்யாமலேயே மன்னிப்பு கேட்க தோன்றும். இந்த செயல், உங்களுக்கு நம்பிக்கை, அதிகாரம் அல்லது உறுதிப்பாடு இல்லை என்பதை அமைதியாகக் குறிக்கலாம். அது மட்டுமல்லாமல் அடிக்கடி மன்னிப்பு கேட்பதால் மற்றவர்கள் உங்களை பலவீனமானவராக உணரலாம்.

அலுவலக வேலையில் ஒரு மெயிலை நீங்கள் தாமதாக பார்த்தால் அதற்காக கூட மன்னிப்பு ஏன் கேட்க வேண்டும்? தினமும் ஏகப்பட்ட மெயிலும் செய்தியும் வந்து கொண்டே தான் இருக்கும். ஒருவேளை மிக முக்கியமான மற்றும் அவசரமான செய்தியை நீங்கள் தாமதமாக பார்த்தீர்களேயானால், 'மன்னிக்கவும்! இப்போதுதான் நான் மெயிலை பார்த்தேன், தகுந்த பதிலை இப்போது அனுப்புகிறேன்' என்று கூறலாம்.

மற்றபடிக்கு தினசரி வரும் மெயிலுக்கெல்லாம் ஒவ்வொரு முறையும் 'மன்னிக்கவும்' என்று சொல்லும் போது, அது உங்களின் கண்ணியத்தை எடுத்துக்காட்டாது. உங்களை நீங்களே இழிவுப்படுத்துவதாக அர்த்தமாகும். அலுவலகம் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையிலும், தேவைப்படும் போது மட்டும் தான் இந்த சொல்லை உபயோகிக்க வேண்டும்.

“மன்னிக்கவும்” என்ற‌ சொல்லை அடிக்கடி தேவையில்லாமல் உபயோகிக்கும் போது அது நம்மை மற்றவர்களுக்கு பதட்டம், தயக்கம் அல்லது பயம் உள்ள நபராக எடுத்து காட்டுகிறது. ஆகவே, நம்மீது அவர்களுக்கு மரியாதையோ அல்லது மதிப்போ இல்லாமல் போய் விடும். நீங்கள் ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் கூட மன்னிப்பு கேட்க கேட்க மற்றவர்கள் உங்களை தரக்குறைவாக நினைப்பார்கள்.

நீங்கள் ”மன்னிக்கவும்” என்ற வார்த்தையை முற்றிலுமாக நீக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட வேண்டிய இடத்தில் தாராளமாக சொல்லுங்கள். மற்ற இடத்தில் அதை மாற்றி வேறு வழியில் எப்படி நுட்பமாகச் சொல்லாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

1. "சாரி, தாமதமாகிவிட்டேன்” என்பதற்கு பதிலாக , ”காத்திருந்ததற்கு நன்றி” என்று பதில் அளிக்கலாம்.

2.″மன்னிக்கவும், நான் இதில் தலையிடலாமா?” என்பதற்கு பதிலாக, ”நான் ஒரு சிறிய யோசனையைச் சொல்ல விரும்புகிறேன்” என்று எடுத்துரைக்கலாம்.

3. ஒரு கருத்தை ஏற்க மறுத்ததற்கோ அல்லது பகிர்ந்து கொண்டதற்கோ முன்கூட்டியே மன்னிப்பு கேட்காதீர்கள். இது உங்கள் கருத்தை மற்றவர்கள் கேட்பதற்கு முன்பே நிராகரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

மன்னிக்கவும் என்று அடிக்கடி சொல்லும் பழக்கத்தை முறியடிக்க உதவும் வழிகள்:

1. ஒரு நாளைக்கு, நீங்கள் எத்தனை முறை ”மன்னிக்கவும்” என்று சொல்கிறீர்கள் அல்லது எழுதுகிறீர்கள் என்பதைக் கணக்கிடுங்கள். மேலும் எத்தகைய சூழ்நிலையில் அதை கூறினீர்கள் என்பதையும் குறித்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் கூறிய எல்லாம் மன்னிப்பும் நியாயம் தானா? என்று யோசித்து பாருங்கள். அப்படி யோசிக்கும் போது உங்களுக்கே, 'சீ! இதற்கெல்லாம் போய் நான் மன்னிப்பு கேட்டேனா?' என்று நினைக்க தோன்றும்.

இதையும் படியுங்கள்:
மாத்திரைகள் எடுக்கும்போது... கவனமாக இருக்க வேண்டிய உணவுகள்!
Apology

2. நண்பர்களிடையே அல்லது சக ஊழியர்களிடையே அல்லது உற்றார் உறவினரிடையே பேசும் போது 'நன்றி' என்ற வார்த்தையை பயன்படுத்த முயற்சிக்கவும். உங்கள் கருத்தை கூடிய வரையில் நேராக தயக்கமில்லாமல் எடுத்து சொல்லவும்.

3. பொது இடங்களிலோ அல்லது மீட்டிங்கிலோ 'மன்னிக்கவும்' என்று சொல்லாமல், 'சார், என்னுடைய கருத்தை நான் சொல்லலாமா, எனக்கு அவகாசம் கிடைக்குமா?' என்றெல்லாம் மாற்றி கூற‌ முயற்சி செய்யுங்கள்.

உங்களுடைய கருத்தும் எண்ணமும் வலுவாக இருந்தாலும் அடிக்கடி "மன்னிக்கவும்" என்று சொல்லும் போது, அடுத்தவர்களுக்கு உங்கள் மீது அவநம்பிக்கையும் உங்கள் கருத்தின் மீது மதிப்பில்லாமலும் போய் விடுகிறது. ஏதோ ஒரு பெரிய குற்றத்தை செய்த கைதியை போல உங்களை பிரதிபலிக்கிறது இந்த ஒரு வழக்கம். ஆகவே, அடிக்கடி "மன்னிக்கவும்" என்று சொல்லி உங்களை நீங்களே தாழ்வு படுத்தி கொள்ளாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த 4 COMBOSக்கு 'NO' சொல்லுங்க!
Apology

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com