
கோபமும் புயலும் ஒரே மாதிரிதான். அடங்கிய பிறகுதான் தெரியும் நாம் அடைந்த நஷ்டம் எவ்வளவு என்று. பொதுவாக நம்மை கோபப்படுத்தி பார்ப்பவரிடம் பொறுமையாக நடந்து கொள்வதுதான் நல்லது. அவங்க லெவலுக்கு நாம் ஏன் இறங்க வேண்டும் என்று எண்ணி பதிலடி கொடுக்காமல் இருப்பதுதான் சிறந்தது. இல்லையென்றால் நமக்கும் அவருக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். சிலர் நம்மை காயப்படுத்தி, நம்மைச் சீண்டி அதற்கு நாம் எதிர்வினையாற்றும் பொழுது அதில் குளிர் காய நினைப்பார்கள். இவர்கள் இப்படித்தான், இவர்களை திருத்த முடியாது என்று நினைத்துக் கொண்டு நாம் நம் வேலையை பார்க்க வேண்டும். இல்லையென்றால் நமக்கு மன கஷ்டம்தான் மிஞ்சும்.
எதிராளி கோபப்படும் சமயம் அதில் நியாயம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு சென்று விடுதல் நல்லது. அத்துடன் நம் பக்கம் உள்ள தவறையும் சரி செய்து கொள்ளவேண்டும். அப்படி இல்லாமல் சிலர் வேண்டுமென்றே நம்மை கோபப்படுத்துகிறார்கள் என்றால் நாம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் எதுவுமே நடக்காதது போல் மௌனமாகஇருந்து விட்டால் அவர்களால் நம்மை மேற்கொண்டு சீண்ட முடியாது.
ஒரு எல்லை வரைதான் நம்மால் பொறுத்துக்கொள்ள முடியும். அதற்கு மேல் கோபத்தைத் தூண்டினால் நாம் மனதளவில் உடைந்து போவோம் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்கு நாம் எதிர்வினை எதுவும் ஆற்றாமல் மௌனமாக கடந்து செல்வது நல்லது.
நம்மை கோபப்படுத்தி பார்ப்பவர்களிடம் "சிறந்த பதிலடி சிறப்பாக வாழ்ந்து காட்டுவதே". எதற்காக நம்மை கோபப்படுத்தினாரோ அதில் சிறந்து விளங்கி காட்டுங்கள். அதுதான் சிறந்த பதிலடியாக இருக்கும். அப்புறம் அவர்கள் நம் அருகிலேயே வர மாட்டார்கள். பொதுவாக கோபத்தில் மூளை வேலை செய்யாது. கோபத்தை உப்பு போல் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள். குறைத்தால் மரியாதை போய்விடும், கூடினால் மதிப்பில்லாமல் போய்விடும்.
ஒரு சமயம் புத்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் எச்சிலைக் காறி உமிழ்ந்தான். தன்னுடைய மேல் துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்றார். அருகில் இருந்த ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஆனால் வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்துவிட்டார் என்றார். துப்பியவனுக்கு நாள் முழுவதும் குற்ற உணர்வில் உறக்கமே வரவில்லை. அடுத்த நாள் புத்தரைத் தேடிச்சென்று காலில் விழுந்து அழுதான். புத்தர் ஆனந்தாவைப் பார்த்து இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இந்த செயலை செய்துவிட்டார் என்றார். அவனோ நான் துப்பியபோது நீங்கள் ஏன் ஒரு வார்த்தை கூட திட்டவில்லை என்று கேட்க, புத்தரோ நீ எண்ணியதுபோல் நடக்க நான் என்ன உன் அடிமையா? என்று அழகாக பதிலுரைத்தார்.
நம்மை கோபப்படுத்தி பார்ப்பவர்களிடம் நாம் சரியாகத்தான் இருக்கிறோம் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு விளக்கம் கொடுப்பதும் தேவையற்றது. அம் மாதிரியான சமயத்தில் அவர்களை விட்டுத் தள்ளி வந்து விடுவது நல்லது. கோபத்தில் எதையாவது நாம் சொல்லிவிட்டால் அந்த வார்த்தைகளை திரும்பப் பெற முடியாது. அவர்கள் லெவலுக்கு நாம் ஏன் இறங்க வேண்டும். கூலாக அவர்களைப் பார்த்து ஒரு மென்மையான புன்னகையை வீசிவிட்டு நகர்ந்து விட வேண்டியதுதான்.