
எப்பொழுதும் யாருக்காகவாவது எதையாவது உதவிக்கொண்டே இருப்பதுதான் மனிதாபிமானம். உதவுவதற்கு மனம் இருந்தால் போதும். எப்படியாவது உதவி விடலாம். டெல்லியில் கூட்டாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் குளிர்காலம் என்று வந்துவிட்டால் ஒரு குறிக்கோளை நிறைவேற்ற துணிந்து விடுவார்கள்.
அது என்ன குறிக்கோள் என்றால் உறைபணி கொட்டும் டிசம்பர் மாதங்களில் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்கு முடிந்த அளவு பணத்தை சேமித்து, அந்தப் பணத்தை எடுத்துச்சென்று நிறைய போர்வைகள் வாங்கி வருவார்கள். அதை இரவு நேரங்களில் சாலையோரங்களில் துணிமணிகள், போர்வை, ஷால் ஸ்வெட்டர் இல்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்து உதவுவார்கள்.
சிலர் நடுங்கும் குளிரில் அப்படியே உறங்கிக்கிடப்பார்கள். அவர்களை எழுப்பாமல் அவர்கள் மீது இந்தப் போர்வைகளை போர்த்திவிட்டு வருவது கண்கூடு. அதை யார் செய்தார் என்று கூட அவர்களுக்கும் தெரியாது. செய்ததை இவர்களும் வெளிப்படுத்தி பேசமாட்டார்கள். ஆனால் செய்வதை சத்தம் போடாமல் செய்து விடுவார்கள்.
ஒருமுறை காரில் பயணம் செய்துகொண்டிருக்கும் பொழுது, சிக்னலில் ஒரு திருநங்கை யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே, பக்கத்தில் ஒரு சிறுவன் வந்து படிப்பதற்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று கேட்டான்.
அந்த நேரத்தில் அந்த திருநங்கை சிறிதும் யோசிக்காமல் தன் கையில் இருந்த 700 ரூபாய் பணத்தை அந்தப் பையனிடம் கொடுத்துவிட்டு நன்றாகப்படி என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதை பார்த்த நாங்கள் ஸ்தம்பித்து போனோம்.
உதவி என்பது இதுதான். எந்த விதமான லாப நஷ்ட கணக்கும் பார்க்காமல், அது திரும்பி வருமா? வராதா? என்று நினைக்காமல், மனதில் தோன்றுவதை அப்படியே செய்வதுதான். அதற்கு மனது தான் வேண்டுமே தவிர அதிகமான பொருள் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.
அதிகமான பொருட்களை வைத்துக்கொண்டு கொடுக்காமல் இருப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். குறைந்த பொருளை வைத்துக்கொண்டு தேவைக்கு மிஞ்சியதை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் பார்க்கிறோம். அவர்களுக்கு நிறைவைத்தருவது இப்படி கொடுப்பதுதான். நாமும் வழிப் பயணத்தில் இதையெல்லாம் பார்த்து கற்றுக்கொள்வது அவர்களை விட நாம் இன்னும் அதிகம் கொடுப்பதில் வளரவேண்டும்.
அதனால் மனதில் நிறைவு பெறவேண்டும் என்பதற்காகத்தான். "இருப்பதில் கொடுப்பது வேறு. இருப்பதையே கொடுப்பது வேறு" என்பதுதான் அவர்களிடம் இருந்து கற்ற பாடம்.
போட்டி, வெறுப்பு, கோபம், கௌரவம் என இல்லாமல் தட்டிக் கொடுத்தும், விட்டுக்கொடுத்தும், உதவிபுரிந்தும் வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கை மிக அழகாகவும், சந்தோஷமாகவும், நிறைவு உடையதாகவும் இருக்கும்.