
சில வருடங்களுக்கு முன்பு நான் வசித்த அப்பார்ட்மெண்டில் எதிரும் புதிருமாக இரண்டு நண்பர்கள் வசித்து வந்தார்கள். எப்பொழுதுமே இரண்டு குடும்பங்களும் மிகவும் அன்பாகவும், ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் உதவி கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். 21ஆம் தேதி வந்துவிட்டால் அவர்கள் பட்ஜெட்டில் யாருக்கு துண்டு விழுந்தாலும் ,அதில் மற்றவர் உதவி செய்து சமாளிப்பதும் வழக்கம்.
அதுபோல் ஆதரவாக அன்பாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் பொழுது ஒருமுறை நண்பரிடம் ஒருவர் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் வந்தது. கடன் வாங்கிவிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்னைகள் வந்துவிட்டன. கடன் கொடுத்தவரும் வேறு வீடு மாற்றிக்கொண்டு போய்விட்டார். ஒரு வருடம் கழித்து கொடுத்த கடன் வாங்குவதற்காக வீடு தேடி வந்தவருக்கு கோபம் வந்தது.
கடன் கொடுத்து எத்தனை வருடம் ஆயிற்று. நான் மட்டும் என்ன மிகப்பெரிய பணக்காரனா? உங்களைப்போல வசதி இல்லாதவன் தானே! எனக்கும் செலவுகள் இருக்காதா? வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டாமா? ஒரு வருடம் ஆகிவிட்டது. எங்கே அவனை கூப்பிடு என்று மிகவும் கொடூரமாக கத்தி குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
அந்தப் பெண்மணியும் வாங்கண்ணா நாங்க செஞ்சது தப்புதான் அண்ணா. மன்னிச்சிடுங்க. வேண்டுமென்றே உங்களை உதாசீனம் செய்யவில்லை அண்ணா. ஏதோ சூழ்நிலை இப்படி கொடுக்க முடியாமல் நடந்து விட்டது என்று சமாதானமாக கூறி வீட்டிற்குள் அழைத்து டீ சாப்பிட சொன்னார். ஆமா! நான் இங்கே கறி சாப்பிட தான் வந்திருக்கேன். இப்ப டீ ரொம்ப அவசியமா? எங்க அவனை கூப்பிடு என்று கூறினார்.
அந்தப் பெண்மணி மிகவும் பொறுமையாக அண்ணா பணம் எடுத்துக்கொண்டு இப்பொழுதுதான் உங்களை பார்ப்பதற்காக அங்கே வீட்டிற்கு சென்றிருக்கிறார். நீங்கள் அங்கே போய் பாருங்கள். நீங்கள் கோபமாக பேசியதற்காக நான் ஒன்றும் கோபப்பட மாட்டேன். சில நேரம் நெருக்கடியான சமயங்களில் இதுபோல் கோபம் வருவதும் சமாதானம் ஆவதும் மனித இயல்பு தானே.
பாரதிராஜா, இளையராஜாவுக்கு கூட ஒருமுறை கோபம் வந்து சில காலம்தான் பிரிந்து இருந்தார்கள். அதன்பிறகு அவர்கள் சேர்ந்து கொண்டார்கள். ஏனென்றால் அவர்களால் பிரிந்து இருக்க முடியாது. அவர்களின் பால்ய சினேகிதம் அப்படிப்பட்டது. அதுபோல்தான் நம்முடைய உறவுகளும், நட்புகளும். ஆதலால் நான் எதுவும் தவறாக நினைக்க மாட்டேன். எப்பொழுதும்போல் உறவாக இருப்போம். போய் வாருங்கள் என்று கூறினார். அந்த சமாதானப் பேச்சைக் கேட்டுவிட்டு அப்பொழுதுதான் அந்த பெண்மணியின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தார் அந்த நண்பர்.
மூக்கிலிருந்து காது, கழுத்து எல்லாமே ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லாமல் இருப்பதை பார்த்து மிகவும் வருத்தப்பட்டார். நண்பன் இதையெல்லாம் விற்றுதான் நமக்கு பணம் கொடுக்க சென்றிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டு எதுவும் பேசாமல் எழுந்து சென்றார். அதன் பிறகு எப்பொழுதும்போல் இரண்டு குடும்பங்களும் சமாதானமாகவே இருந்தார்கள்.
மறப்பது மற்றும் மன்னிப்பது என்ன என்பதை அப்பொழுதுதான் நான் உண்மையாக புரிந்து கொண்டேன். ஒருவர் பொறை இருவர் நட்பு. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. என்பதை உணர வைத்த உண்மையான தருணம் அதுதான். நாமும் பிறரை மறப்பதும் மன்னிப்பதும் எப்படி என்பதை இதுபோல் நேராக பார்க்கும் சம்பவங்கள்தான் நம்மை நன்றாக செதுக்கி சீர்படுத்துகிறது.
சிலரை பிடிக்காது என்றாலும் வெறுக்க முடியாது...
சிலரை பிடிக்கும் என்றாலும் நெருங்கிட முடியாது...
மறப்பதும் மன்னிப்பதுமாகிய புரிதல் ஒன்றே அன்பை வளர்க்கும்.
சூழ்நிலைகளை அனுசரிக்கப் பழகிக் கொண்டோமானால் இந்த உலகம் நமக்கு ஏற்ற பூஞ்சோலையாக மாறிவிடும்.