
இந்த உலகில் குழந்தைகள் வெகு சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்களுக்குக் கடந்தகால நிகழ்வுகள் குறித்த கவலை இல்லை, எதிர்காலத் தேவைகள் குறித்த அச்சமும் இல்லை. இந்தக்கணத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவர்களின் கோபங்களும் சண்டைகளும் நிரந்தரமானவை இல்லை. இன்னொரு குழந்தையுடன் சண்டை போட்டு விட்டு, சில நிமிடங்களில் இயல்பாக மீண்டும் பேச அவர்களால் முடியும். பெரியவர்கள்தான் அந்த கோபத்தைக் காலம் முழுக்கச் சுமக்கிறோம்.
கோபத்தையும், வெறுப்பையும் சுமக்காமல், இதரப்பொறுப்புகளையும் பெரும் சுமையாக கருதாமல், அறியா குழந்தையின் மனநிலையில் எதையும் நம்மால் அணுக முடிந்தால் போதும். நமக்குச் சுதந்திரம் நிரந்தரமாக கிடைக்கும். எப்படிப்பட்ட சூழலையும் புன்னகையுடன் எதிர்கொள்ள முடியும்.
பிறரை புரிந்து கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளும்போது மனம் சுதந்திரமாக செயல்படுகிறது. கல்வி பெறுவது அறியாமையிலிருந்து விடுதலைக்கு முக்கியமான அங்கமாகும். பிறரின் நலனுக்காக உதவியாக இருப்பதும் மனம் சுதந்திரத்திற்கு காரணமாக இருக்கலாம்.
ஒவ்வொருவரும் தன் கருத்துகளை, தன் விருப்பங்களை வெளிப்படையாகச் சொல்ல முடிகிற சூழல் அமையவேண்டும். அவரின் அந்த கருத்துக்கள் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் ஏற்கப்படவும், மதிக்கப்படவும் வேண்டும்.
இது ஒரு சுதந்திரமான சமூகத்தின் அடையாளம். பீரோவுக்கு ஒரு பூட்டு, அது இருக்கும் அறைக்கு இன்னொரு பூட்டு, வீட்டுக்கு பெரிதாக ஒரு பூட்டு, அதற்கு வெளியே கேட் போட்டு அதில் வலுவான பூட்டு என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்யத் தேவை இருக்காத அளவுக்கு பாதுகாப்புகள் இருப்பது ஒரு தேசத்தின் சுதந்திர வாழ்வை உணர்த்தும். ‘தப்பு செய்தால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது' என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும்போது நெறிப்படுத்தப்பட்ட சுதந்திரம் சாத்தியமாகும்.
சில நேரங்களில் நம்முடைய நலன் கருதியோ, அடுத்தவர்களின் நலனுக்காகவோ, சில விஷயங்களைச் செய்கிறோம். அப்போது நம் கோபத்தையோ, வெறுப்பையோ வெளிபடுத்துவதில்லை. மனதில் இத்தகைய முதிர்ச்சியும் ஒரு வகையில் விடுதலை உணர்வுதான். நம் பலவீனங்களை உணர்ந்து அவற்றை சரிசெய்ய வேண்டிய அவசியத்தை உணர்கிறோம். இந்த மனநிலையும் ஒருவகையில் சுதந்திரம்தான்.
மனச் சுதந்திரம் என்பது யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், எந்த நெருக்கடிகளுக்கும் இணங்காமல், நாம் விரும்பும் இலக்கை அடைவதற்காக நம்மால் உழைக்க முடிகின்ற சூழல், அப்படிப்பட்ட பணியில் நமக்கு நிம்மதியும், நிறைவும் கிடைக்கும். கடுமையான உழைப்புக்கு நடுவில் மனத்தை ரிலாக்ஸ் செய்துகொள்ள குடும்பத்துடன் இனிமையான சுற்றுலா செல்வதற்கு ஒருவரால் முடிகிறது என்றால் அவர் நல்ல பொருளாதாரச் சுதந்திரத்துடன் இருக்கிறார் என கருதப்படுகிறது.
‘இது ஏன் மாறவில்லை, இது எப்போது மாறும் நாம் நினைத்தால் இதை மாற்றிவிடலாம், யாரிடமும் சொல்லாமலே அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளை நாமே தொடங்குவதற்குப் பெயரும் விடுதலையான சுதந்திரம்தான்.
மனம் அச்சமின்றி இருப்பதே உண்மையான சுதந்திரம். அங்குதான் வேறு யாராலும் தொட முடியாத எல்லைகளை மனிதர்கள் தொடுவார்கள். தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் உழைப்பார்கள். உள்ளத்தின் ஆசைகளை உணர்ந்து தங்கள் கடமையை செய்வார்கள் என்றார் ரவீந்திரநாத் தாகூர்.
அனைவரும் இப்படிப்பட்ட சுதந்திரமான வழிகளை கடைபிடித்து வாழ்வில் மனதை சுதந்திரமாக வைத்திருப்போம்.