
ஓரளவு நல்ல வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். இன்றைக்கு இளைஞர்கள் 20,000, 30,000 என சம்பாதித்து எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். இதனால் என் ஹவுஸ் ஓனர் வாடகையை ஏற்றிவிட்டார். எல்லாமே விலை ஏறிவிட்டது என்னைப் போன்றோர் நசுக்கப்படுகிறோம் என்று ஒருவர் புலம்பினார்.
ஒரு சிறிய மரத்தில் குருவி கூடுகட்டி முட்டைகள் இட்டு குஞ்சு பொரித்தது. அடுத்த ஆண்டும் முட்டையிட்டு குஞ்சு பொரித்து. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது தொடர குட்டையாக இருந்த மரம் வளர வளர குருவிகள் கூடு உயரே போய்விட்டது. குருவிக்கு கோபம் வந்து "ஏ, மரமே இப்படி வளர்ந்துகொண்டே போகிறாய். நான் எப்படி என் கூட்டைச் சென்றடைவது. வளர்ந்ததுபோதும். நிறுத்திக்கொள்" என்றது.
உடனே மரம் "உனக்கு முட்டையிட இடம் கொடுத்தேன். குஞ்சு குடும்பம் என்று நீ வளர்வதைப்போல் நானும் கிளை விரித்து வளர வேண்டாமா?. நீ தாழ்வான கிளையில் கூடு கட்டிக்கொள்" என்றது. அந்த முட்டாள் குருவி போலத்தான் நீங்களும். நீங்கள் வளர்ந்ததுபோல் உங்களைச் சுற்றியுள்ள சமூகம் வளரவேண்டாமா. நல்லதோ கெட்டதோ மாற்றம் என்று வந்துவிட்டால் ஒருவரின் வசதிகள் கூடுவதும், மற்றவர் தாழ்த்தப்படுவதும் இயல்பாக நிகழக்கூடியவை. அதற்காக பெரும்பான்மையோர்களுக்கு நலம் விளைவிக்கும் மாற்றத்தை வேண்டாம் என்று நிராகரிக்கலாமா?.
நேற்றுவரை நீங்கள் உங்கள் ஊதியத்தில் நீங்கள் அனுபவித்துக்கொண்டிருந்த பல வசதிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் உங்களுக்குக் கீழ் எவ்வளவோ பேர்கள் இருந்தார்கள். அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்பட்டீர்களா?. அடுத்தவர் வருமானம் உங்களை விட கூடுதலாககி விட்டால் நீங்கள் நசுக்கப்பட்டதாக உணர்கிறீர்களே.
ஒருவர் பிழைப்புக்காக அரேபியா சென்றார். மன்னருக்கு முடிவெட்டும் வேலை அவருக்குக் கிடைத்தது நல்ல ஊதியம். அவர் தன் சேமிப்பை தங்கமாக்கினார். அது சாத்துக்குடி அளவு இருந்தது. அதைத் தன் தொழிற் கருவிப் பெட்டியில் வைத்திருந்தார். ஒருமுறை முடிதிருத்தும் நேரத்தில் மன்னர் "என் ஆட்சியில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்" என்று கேட்டார்.
உடனே இவர் "ஒரு குறையும் இல்லை. ஒவ்வொருவரிடமும் ஓரு சாத்துக்குடி அளவு தங்கமாவது இருக்கிறது" என்றார். மன்னர் இதை தன் அமைச்சரிடம் சொல்லி மகிழ்ந்தார். நாளைக்கும் இதே கேள்வியை கேளுங்கள் என்று கூறிய அமைச்சர் முடி வெட்டுபவரின் தங்கத்தை திருட ஏற்பாடு செய்தார்.
மறுநாளும் அதே கேள்வியை மன்னன் கேட்க "மன்னா சொன்னால் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எங்கும் வழிப்பறிதான். கேவலம் ஒரு சாத்துக்குடி தங்கம் கூட ஒருத்தரிடமும் நிலைப்பதில்லை" என்றார். முடி வெட்டுபவர் தன் நிலைமையை வைத்தே ஒரு ஆட்சியையே முடிவு செய்வது போல்தான் நீங்களும் உங்களை வைத்து சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையும் நசுக்கப்பட்ட தாக தீர்ப்பு எழுதுகிறீர்கள். பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான எண்ணத்தை அனுமதிக்காதீர்கள்.
உங்கள் வசதிகள் குறைந்துவிட்டதற்காக மற்றவரை குறை சொல்வதை நிறுத்துங்கள். எதுவும் முடிந்துவிடவில்லை. உங்கள் நிலையும் மேலும் உயர ஏராளமான வாய்ப்புகளை ஒளித்து வைத்திருக்கிறது. மாற்றத்திற்கு ஏற்றபடி உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எந்தக் கணமும் அப்படியே நிலைத்து நிற்பது இல்லை என்பதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். மாற்றத்தை மனதார ஏற்கத் தயாராக இல்லையென்றால் வலியும் வேதனையும்தான் மிஞ்சும்.