
குறைகளை ஏற்று நிறைவோடு வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்வில் இருக்கும் குறைகளை மட்டுமே கண்டு கொண்டிருந்தால் வாழ்வில் இருக்கும் நிறைகளை காணமுடியாது என்பதற்கு இணங்க, என் உறவினர் ஒருவர் யார் எதை பேசினாலும், அவரை எப்படி கோபப்படுத்தி பேசினாலும் சிரித்த முகத்துடனே கடந்து விடுவார்,
நிறைகளைப் பற்றி மட்டுமே எல்லோரிடமும் பேசுவார். குறைகளைப் பற்றி யாரிடமும் எதுவும் எடுத்துக் கூறமாட்டார். தன் வீட்டிற்கு வரும் உறவினர் மற்றும் நண்பர்களை பேரப்பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தும் பொழுதுகூட அவர்களின் உயர்ந்த பண்புகளை மட்டும் எடுத்துக் கூறுவார். இன்னொரு பக்கம் இருக்கும் குறைகளை ஆராயமாட்டார்.
அதைக் கவனித்துக்கொண்டிருந்த பேரன் ஒருநாள் தன் தாத்தாவிடம் கேட்டான். தாத்தா வீட்டிற்கு வருபவர்கள் அனைவரையும் பற்றி நல்லவிதமாகவே கூறுகிறீர்களே யாரிடமும் குறை இருக்காதா? யாரைப் பற்றியும் இதுவரை குறையாக ஒரு வார்த்தை கூட சொன்னதில்லையே? என்று கேட்டான்.
அதற்கு தாத்தா பதில் அளித்தார். இருக்கும் பா, நிறைகுறைகள் கலந்ததுதான் வாழ்க்கை. குறைகள் இருக்கத்தான் செய்யும்
ஒருவரைப் பற்றி உங்களிடம் கூறும்பொழுது நிறைகளை மட்டும் கூறினால், அவர்களை நல்லவிதமாக மனதில் ஏற்றுக்கொள்வீர்கள். குறைகளை கூறும்பொழுது அவர்களைப் பார்க்கும்பொழுது எல்லாம் அந்த குறைதான் ஞாபகத்திற்கு வரும்.
நிறையை போற்றி அன்பு செலுத்துவதுபோல் ஒருவரின் குறையை போற்றி அன்பு செலுத்த மனம் வராது. பிறரின் குறைகளை ஆராய ஆரம்பித்தோமானால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. வார்த்தை என்பது ஏணி போலத்தான். நாம் அதை பயன்படுத்துவதை பொருத்து நம் மதிப்பை ஏற்றியும்விடும் இறக்கியும்விடும்.
நம் நாக்கின் நுனியில்தான் எல்லா விதமான கௌரவமும், பக்குவமும் பதுங்கி கிடக்கின்றன. எதுவும் அவமானம் இல்லை. அனைத்தையும் அனுபவமாக எடுத்துக்கொள்ளும்வரை.
சிலருக்கு எதையும் சரியா புரிந்துகொள்ளும் பக்குவம் இருப்பதில்லை. நமக்கும் அதை பக்குவமாக எடுத்துக் கூறும் அளவிற்கு பொறுமை இருப்பதில்லை. "வார்த்தை என்பது எப்படி இருக்கவேண்டும் என்றால், நம்மை காயப்படுத்தியவர்களை காயப்படுத்த வாய்ப்பிருந்தும், காயப்படுத்தாமல் கடந்து செல்லும் பக்குவம்" இருக்க வேண்டும். அதைத்தான் நாக்கின் நுனியில் கௌரவம் என்பது.
குறைகளை காணுமிடத்தில் அன்பு அழிந்துபோகும். ஆணவம் பிறக்க ஆரம்பிக்கும். இப்படி அன்பு அழியும் இடத்தில்தான் ஆணவம் பிறக்கிறது. ஆதலால் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டுமானால் பிறரின் குறைகளை கண்கொண்டு காணக்கூடாது. அப்படியே கண்டாலும் கண்ணால் கண்டதை கையால் மறை என்பதற்கு இணங்க நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஆமாம்.
வீசுகின்ற வாசனையை பொறுத்துதான் மலர்களுக்கு சிறப்பு சேரும்..!
பேசுகின்ற வார்த்தைகளைப் பொறுத்துதான் மனிதர்களுக்கு மதிப்பு உயரும்..!
ஆதலால், எல்லாவற்றிலும் உயர்ந்து தகுதிபெற நாக்கின் நுனியில் நம் கவுரவம் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொண்டால் போதும்.