இறைவனாலும் கொடுக்க முடியாத வரம் எது தெரியுமா?

Happy
Enough Mindset
Published on

அகில உலகத்தையும் படைத்து, மக்களை குறையின்றி காத்து வருபவர் இறைவன். அப்படிப்பட்ட இறைவனுக்கு ஒரு நாள் தன் படைப்பினால்  உருவான அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஒரு வினோத ஆசை உருவானது. அதனால் இறைவன் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வானுலகில் இருந்து கீழ் இறங்கி பூலோகத்திற்கு வந்தார்.

அவர் இறங்கிய இடம் மரங்கள் நிறைந்த அடர்ந்த சோலையாகும். அந்த சோலையில் வகை வகையான மரங்கள் இருந்தன. அவர் ஒவ்வொரு மரங்களிடமும் சென்று அவர்களது நிறை குறைகளை கேட்க விரும்பினார். 

முதலில் ஒரு ஆலமரத்திடம் சென்றார். "ஆலமரமே உனக்கு ஏதாவது மனக்குறை இருக்கிறதா?" என்று கேட்டார். ஆலமரம் சொன்னது, "மனிதர்கள்  மத்தியில் எனக்கு பலவித பெருமைகள் உண்டு. நான் மிகப்பெரிய தோற்றத்தை வைத்திருக்கிறேன். பல உயிர்களுக்கு அடைக்கலம் தருகிறேன். இவ்வளவு பெருமையுடைய எனது கனிகளோ மிகவும் சிறியதாக இருக்கின்றன. இவ்வளவு பெருமைகளை தாங்கிக் கொண்டிருக்கும் எனக்கு எனது கனிகளின் அளவு மிகச்சிறியதாக இருப்பது  வருத்தமாக இருக்கிறது." என்று கூறியது. 

கடவுள் அடுத்ததாக வேப்ப மரத்திடம் சென்றார். "வேப்ப மரமே! உனக்கு ஏதாவது மனக்குறை இருக்கிறதா?" என்று கேட்டார். "என்னால் மக்கள் அடையக்கூடிய பயன்கள் பல உண்டு. என் உச்சி முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ பயனே. இருந்தாலும் எனது கனிகளை மக்கள் யாரும் விரும்பி உண்பதில்லையே! அது எனக்கு மிகப் பெரிய மன வருத்தமாக இருக்கிறது." என்று கூறியது. 

இறைவன் அடுத்தபடியாக ஒரு பலா மரத்திடம் சென்றார். "பலாமரமே! உனக்கு ஏதாவது மனக்குறை இருக்கிறதா?" என்று கேட்டார். "நான் எவ்வளவு சுவை மிகுந்தவன்; முக்கனிகளில் ஒன்று என எனக்கு அடையாளமே கொடுத்திருக்கிறார்கள. மக்கள் விரும்பி புசிக்கக்கூடிய அற்புதமான சுவையை கொடுத்த நீங்கள் என் உடல் அமைப்பை  ஏன் முட்கள் போன்று அழகில்லாமல் கொடுத்து விட்டீர்கள? அது எனக்கு மிகப் பெரிய மனக்குறை தான்." என்றது. 

றைவனுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை, தான் நினைத்தது ஒன்று, இங்கே காண்பது வேறொன்றாக இருக்கிறதே என நினைத்துக் கொண்டு கால் போன போக்கில் நடந்து சென்றார். அவர் சுய நினைவின்றி நடப்பதையும் தாண்டி  ஏதோ ஒரு வாசனை அவரது மூக்கை துளைக்க தொடங்கியது.

இந்த வாசனை எங்கிருந்து வருகிறது, மிகவும் அற்புதமாக இருக்கிறதே என்று அந்த வாசனை வந்த இடத்தை நோக்கி கடவுள் நடக்கத் தொடங்கினார். அங்கே சோலையின் வேலி ஓரத்தில் மகிழம்பூ மரம் ஒன்று இருந்தது. அவர் அருகில் செல்லச் செல்ல அந்த வாசனை அந்த மரத்தில் உள்ள பூக்களில் இருந்து தான் வருகிறது என்பதை உணர்ந்து கொண்டார். இறைவன் அந்த மரத்திடம் சென்று, "மரமே, உனக்கு ஏதாவது மனக்குறை இருக்கிறதா?" என்று கேட்டார். உடனே மகிழ மரம், "இறைவா எனக்கு எந்த மன குறையும் இல்லை. நீங்கள் எனக்கு கொடுத்ததே போதும்." என்று கூறியது. 

இதையும் படியுங்கள்:
வெற்றிக்காக நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!
Happy

இறைவனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. "உண்மையிலேயே உனக்கு எந்த மன குறையும் இல்லையா?" என்று மறுபடியும் கேட்டார். "உண்மையிலே எனக்கு எந்த மனக் குறையும் இல்லை; இன்னும் சொல்லப்போனால், என்னுடைய மலரின் வாசத்தால் இந்த சோலையையே நான் தாலாட்டிக் கொண்டிருக்கிறேன். இது நான் ஒரு இனிய இசையை மீட்டுவது போல் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது." என்று கூறியது மகிழமரம். 

இறைவன் வாய்விட்டு கலகலவென சிரித்தார். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று மகிழமரம் கேட்டது. "உலக உண்மையை உணர்ந்து கொண்டேன். அதனால் சிரிக்கிறேன்" என்று கூறினார் இறைவன்.

"இந்த உலகில் உள்ள அனைத்தும் என்னால் படைக்கப்பட்டவையே. ஆடை ஆபரணங்கள், கோபுரங்கள் என எத்தகைய அதிசயத்தையும் என்னுடைய ஒரு கைவிரல் சொடுக்கில் என்னால் நிகழ்த்திக் காட்ட முடியும். ஆனால் போதும் என்ற மனநிறைவான மனதை மட்டும் நான் படைத்த எந்த உயிருக்கும் என்னால் கொடுக்க முடியாது. அப்படி ஒரு மனதை நான் உன்னிடம் பார்க்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் சென்று வருகிறேன்," என்று கூறி புறப்பட்டார். 

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் தைரியம் என்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா?
Happy

மரத்திலிருந்து பூக்கள் விழுந்தாலும் பூக்கள் வாட வாட அதன் வாசனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இது மகிழ மரத்துக்கு மட்டுமே உரிய சிறப்பு. இதைப் போலவே நாமும் நம் வாழ்வில் உள்ள குறைகளை தள்ளி வைத்துவிட்டு நிறைகளை முன்னிறுத்தி வாழ்வை மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்ய வேண்டும்.

போதும் என்ற மனமே ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய செல்வம். அதனால்தான் நம் முன்னோர்கள் 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்று கூறினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com