
இந்த உலகில் எல்லோரும் பிறக்கும்போதே திறமைசாலிகளாக இருப்பதில்லை. பிறவி மேதைகளாக இருப்பவர்கள் மிகச்சிலரே. ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி அடைய திறமை மட்டும் இருந்தால் போதாது. திறமையைவிட மிக முக்கியமானது தீவிரமான, இடைவிடாத பயிற்சி. இதன் முக்கியத்துவத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உளவியலாளர் கே. ஆண்டர்ஸ் எரிக்சன், (deliberate practice) திட்டமிட்ட பயிற்சி ஒரு மனிதனை வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்கிறார். முயல், ஆமை கதை சொல்லும் நீதியும் இதுதான். வேகமாக ஓடக்கூடிய முயல், ஆமை மிக மெதுவாக நகரும் என்று நினைத்துத் தப்புக்கணக்கு போடுகிறது. இடையில் நன்றாக தூங்கி எழுந்து பார்க்கும்போது ஆமை மெதுவாக நகர்ந்து இலக்கை அடைந்து வெற்றி அடைந்து விடுகிறது.
இங்கே ஆமை தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக தன் முயற்சியின் மீது நம்பிக்கை வைத்து இடையறாது செயல்பட்டு வெற்றி அடைந்திருக்கிறது. இதைத்தான் உளவியலாளர்களும் வெற்றியாளர்களும் தீவிரமான திட்டமிட்ட பயிற்சியில் ஈடுபடுபவர்கள் திறமைசாலிகளைவிட வாழ்க்கையில் விரைவில் முன்னேறுகிறார்கள் என்கிறார்கள்.
ஒரு துறையில் முழுமையான திறமைசாலியால் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்று நினைத்து செயலில் ஈடுபடாமல் இருப்பவர்கள் பலர். அதற்குப் பதிலாக சிறிதளவு திறமை இருந்தாலும் தான் விரும்பும் துறையில் ஜொலிப்பதற்கும் ஜெயிப்பதற்கும் தினந்தோறும் இடைவிடாத தீவிரமான, திட்டமிட்ட பயிற்சியில் ஈடுபடும் ஒருவர் தன்னுடைய திறன்களை நன்றாக வளர்த்துக் கொள்கிறார். முழுக் கவனத்துடன் பயிற்சி செய்யும்போது தனது பலவீனங்களை நிவர்த்தி செய்து திறமைகளை கூட்டிக் கொள்கிறார்.
ஒரு செயல் செம்மையாக செய்யப்படுவதற்கு பயிற்சி மிக மிக அவசியம். திறமைசாலியான நபர்கள் பயிற்சி செய்யாமல் வெற்றியடையலாம். ஆனால் அது குறுகிய கால வெற்றியாக மட்டுமே அமையும். அவர்களது முன்னேற்றம் இடையிலேயே தடைப்பட்டு விடும். அதே சமயத்தில் திறமை குறைவாக இருந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடும் ஒருவர் இடைவெளியை சீராக நிரப்பி திறமைசாலிகளை எளிதாக வென்றுவிடுவார்கள். தான் எங்கே தவறு செய்கிறோம், தங்கள் குறைபாடு எது என தீவிரமாக தேடி சரி செய்கிறார்கள்.
மனித மூளையால் கற்றலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் மறுசீரமைக்கவும் முடியும். ஒரு திறமையைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போதும், கவனம் செலுத்தும் போதும் மூளையில் உள்ள நரம்பியல் பாதைகளை பலப்படுத்துகிறது. புதிய அல்லது கடினமான ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபடும் மனிதனுக்கு சிக்கலான மன மாதிரிகளை மூளை உருவாக்கித் தருகிறது. இதனால் அவர்கள் மிகக் கடினமான விஷயத்தைக் கூட கற்றுக்கொள்ள முடிகிறது.
திறமையை மட்டும் நம்பி இருப்பவர்கள் உடனடியாக சமாளிக்க முடியாத ஒரு சவாலை எதிர்கொள்ளும் போது எளிதில் விரக்தி அடையலாம். இதற்கு நேர்மாறாக தொடர்ந்து பயிற்சி செய்து வரும் ஒருவர் போராடுவதையும் தோல்வியடைவதையும் மீண்டும் முயற்சித்தல் என்னும் செயல்பாடுகளுக்கு பழக்கப்பட்டிருப்பார்.
அதனால் அவருக்கு மனஉறுதி அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகமாக இருக்கும். இதனால் அவர்களது செயல்பாடும் சிறப்பாக இருக்கும். எனவே திறமை என்பது ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான திட்டமிட்ட பயிற்சியே அந்த திறமையை ஜொலிக்கவும் வெற்றி வாய்ப்பிற்கு இட்டுச்செல்லவும் முடியும்.