
பணம் வாழ்க்கையை எளிதாக்கும். வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வழி செய்யும். பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியின் பொருள் பணம் இருந்தால் பல காரியங்களை சாதிக்க முடியும். அதாவது காரியங்களை சாதித்துக்கொள்ள பணம் பல வழிகளில் உதவும். பணத்தின் மூலம் பல தேவைகளை நம்மால் நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். பல வாய்ப்புகளைப் பெறவும், பல இடங்களுக்கு செல்லவும் முடியும். பணம் ஒருவருக்கு சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை வழங்குகிறது. அவர்களின் கருத்துகளுக்கு அதிக மரியாதையும் கொடுக்கப்படுகிறது.
'பணம் பத்தும் செய்யும்' இதில் பத்து என்ற சொல் எண்ணில் அடங்காத என்ற வகையில் பொருள் தருகிறது. அதாவது எண்ணிக்கையில் அடங்காத பலவற்றையும் பணம் இருந்தால் செய்துகாட்ட முடியும் என்கிற நேர்மறையான, நம்பிக்கை வாசகமாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக எதை வேண்டுமானாலும் பணத்தால் சாதித்து விடமுடியும் என்று கருதுகிறோம். ஆனால் உண்மையில் பணத்தால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியாது; சில விஷயங்களை பணத்தால் வாங்கவும் முடியாது. உண்மையான அன்பு, பாசம், உறவுகளை பணத்தால் வாங்க முடியாது.
பணம் என்பது ஒரு முக்கியமான கருவிதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில் எல்லாவற்றையும் தந்து விடாது. குறிப்பாக சந்தோஷம், நிம்மதி, ஆரோக்கியம் போன்றவற்றை. சில நேரங்களில் பணம் ஒருவரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். சில நேரங்களில் அது தீயவழிகளிலும் அழைத்துச் செல்லலாம். எனவே பணம் என்பது அனைத்திற்கும் தீர்வு அல்ல. ஆனால் அது பல விஷயங்களை சாதிக்க உதவும் ஒரு கருவி என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
பணம் ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். பாகுபாடின்றி அனைவரின் தேடலும் பணம்தான். கை நிறைய சேர்த்தாலும் முடிவில் கொண்டு போகப் போவது எதுவும் இல்லை என்பதை உணர்ந்தாலும் பணத்தின் மீதுள்ள ஆசை மட்டும் குறைவதில்லை. பணம் நல்லவனை கெட்டவனாக மாற்றும்; கெட்டவனை மக்கள் பார்வைக்கு நல்லவனாக மாற்றும் சக்தி கொண்டது.
ஆண்டியையும் அரசனாக்கும் பணம், அரசனையும் ஆண்டியாக்கும். நம்மை உயர்த்துவதும், தாழ்த்துவதும் பணம்தான். நம் தகுதியை நிர்ணயிப்பதும் பணமே. பணம் இல்லையென்றால் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் பிறர் கண்களுக்கு ஹீரோவாகத் தெரியாமல் ஜீரோவாகத்தான் தெரிவோம்.
அற்பனுக்கு பணம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்றும், கையில் பணம் வந்ததும் தலைகால் புரியாமல் ஆடுகிறான் என்றும் பணம் வந்ததும் குணம் மாறுவதை பற்றி சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் பணத்திற்கென்று தனி குணம் கிடையாது.
அது யாருடைய கையில் இருக்கிறதோ அதைப் பொறுத்து அதற்கு நல்லது தீயது போன்ற குணங்கள் ஒட்டிக்கொள்கின்றன. நல்லவர்கள் கையில் பணம் இருப்பது துளிர் முதல் வேர் வரை பயன்படுகின்ற மரம் ஊரின் நடுவே இருப்பதுபோல் பலருக்கும் பயன்படும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
செல்வத்துப் பயனே ஈதல்தான்! செல்வத்தின் பயன் பிறருக்கு கொடுப்பதுதான். அதாவது ஒருவரிடம் செல்வம் இருந்தால் அதைத் தானே அனுபவிக்காமல் மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுவதே அதன் உண்மையான பயனாகும். செல்வத்துப் பயனே இல்லாதவர்க்கு கொடுப்பதுதான் என்று வள்ளுவர் ஈகை குணத்தை வலியுறுத்தி கூறுகிறார்.
'வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து' என்ற திருக்குறள் வரிகளில் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே ஈகை என்றும், மற்றவை எல்லாம் பயன் எதிர்பார்த்துக் கொடுப்பவை என்றும் வள்ளுவர் கூறுகிறார். செல்வத்தின் பயனை முழுமையாக அடைய, அதை இல்லாதவர்க்கு கொடுத்து உதவுவதே சிறந்தது.