
நாம் எந்தச்செயலை செய்ய ஆரம்பித்தாலும் அரைமனதோடு அந்தச் செயலை செய்தால் அது திருப்தியாக முடியாது. ஒரு சாதாரண வேலையாக இருந்தாலும் அதில் 100% உழைப்பைக் கொடுக்கத் துணியவேண்டும். அப்போதுதான் நிறைவும் திருப்தியும் அதில் கிடைக்கும். அந்த நிறைவும் திருப்தியுமே எதையும் செவ்வனே செய்து முடித்துவிட முடியும் என்ற முழு நம்பிக்கையை அளிக்கும்.
அப்படி எந்த தொழிலையும் முழுநம்பிக்கையுடன் ஆரம்பித்தால் நாளாக ஆக அது நமக்கு மனஉறுதியுடன் கூடிய தைரியத்தையும் கொடுக்கும். இப்படித்தான் மனதைரியம் என்பது படிப்படியாக வளர்ந்து வெற்றிக்கு வித்திடும்.
நம் வாழ்க்கையில் சில சோதனைகள் வரலாம். கஷ்டங்கள் வரலாம். பல பிரச்னைகள் வரலாம். இக்கட்டான சூழ்நிலைகள் வரலாம். போராட்டங்கள் வரலாம். இவை அனைத்தையும் ஒரு விஷயத்தால் நாம் எதிர்கொள்ள முடியும். அதுதான் மனதைரியம் என்பது.
மோசமான தருணங்களை நாம் எதிர்கொள்ளும் சமயத்தில் இந்தப் பிரச்னையை சமாளிக்கும் திறமை நம்மிடம் உள்ளது. இதிலிருந்து மீண்டுவரும் வலிமையும், சக்தியும் என்னிடம் உண்டு என்று நம்மை நாமே முதலில் நம்பவேண்டும்.
ஒவ்வொரு பிரச்னைக்கும் கால அளவு என்பது கண்டிப்பாக உண்டு. பிரச்னைகளில் இருந்து மீள ஒரு சிலருக்கு ஒரு வாரம் ஆகலாம். இன்னும் சிலருக்கு ஒரு மாதம் ஆகலாம். மற்றும் பலருக்கும் ஒரு வருடம் கூட ஆகலாம். என்றாலும் இதுவும் கடந்து போகும் என்று நம்பவேண்டும். நம்பிக்கைதான் மன தைரியத்துக்கு உரமூட்டும் ஆணிவேர்.
எனவே பிரச்னைகளில் இருந்து மீள, மற்றவர்களிடம் ஆறுதல்களைத்தேடி அலையாமல் நமக்கு நாமே ஆசானாக இருந்து வெற்றி பெறவேண்டும்.
செய்யும் வேலை, தொழில், வியாபாரம், கல்வி, கலை என்று எல்லாவற்றையும் என்னால் முடியும் என்ற முழு நம்பிக்கையுடன் செய்ய முற்படுவோம். அந்த நம்பிக்கையே நம்மை கைப்பிடித்து முன்னேறிச்செல்ல தேவையான மனதைரியத்தை கொடுத்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
உறுதியுடன் மனதைரியமாக இருந்தால் நம்பியபடி உயரலாம்! நம்முடைய தைரியம்தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது!