
வாழ்வில் அனைவருமே விரும்பும் ஒரு விஷயம் முன்னேற்றம். நினைத்தவற்றை நினைத்த நேரத்தில் வாங்கும் அளவிற்கு வசதி இருக்க வேண்டும் என்று விரும்புவது மனித இயல்புகளில் ஒன்று. சிலர் படிப்படியாக வாழ்வில் உயர்ந்து தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்பார்கள்.
வேறு சிலரோ மின்னல் வேகத்தில் வாழ்வில் உயர்ந்து அதே வேகத்தில் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்று சிரமப்படுவார்கள். ஆக, முன்னேற்றம் என்பது மாடிப்படிகளில் ஒவ்வொரு படியாக ஏறிச் செல்வதைப்போல இருக்கவேண்டும். லிப்ட்டில் வேகமாகச் செல்லுவதைப்போல இருக்கக்கூடாது.
வேகமாக மேலே செல்லும் லிப்ட் மிகவேகமாக கீழே இறங்கி உங்களை புறப்பட்ட இடத்திற்கு மிக விரைவாகக் கொண்டு சேர்த்து விடும். படிகளில் ஏறிச்சென்று இலக்கை அடைய அதிக நேரம் பிடிக்கும். அதே போல படிகளில் கீழே இறங்கவும் அதிக நேரம் பிடிக்கும். எனவே நமது வாழ்க்கை முன்னேற்றம் என்பது மாடிப்படிகளில் ஏறிச் செல்வதைப் போல படிபடியாக அமைய வேண்டும்.
படிப்படியாக முன்னேறும் போதுதான் வாழ்வில் முன்னேறுவது எவ்வளவு சிரமம் என்பது புரியும். பணத்தின் அருமையும் அப்போதுதான் நன்கு புரியும். பணம் சம்பாதிப்பது பெரிதல்ல. அதை முறையாகக் காப்பாற்றி எப்படி சிக்கனமாக செலவு செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளுபவரே தொழில் துறையில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சம்பாதித்த பணத்தை வீணாக செலவு செய்யாமல் அதை செய்யும் தொழிலில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்து வியாபரத்தை மேலும் மேலும் பெருக்கி உச்சத்தை அடைவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கத்திற்கு மாறாக அதிவேகமாக முன்னேறும் போது ஒருவருக்கு எதுவும் புலப்படாது.
இன்ஃபோசிஸ் எனும் பெயர் தற்போது உலகம் முழுக்க பிரபலமாகிவிட்டது, 1946 ஆம் ஆண்டில் மைசூருக்கு அருகில் அமைந்த சித்தலகட்டா என்ற ஊரில் பிறந்தவர் நாராயணமூர்த்தி. தந்தையார் ஒரு பள்ளி ஆசிரியர். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஐஐடியில் பட்டம் பெறவேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருந்தது. முயன்று படித்தார்.
இந்திய அளவில் பதினோழாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவரால் ஐஐடியில் சேர்ந்து படிக்க இயலாமல் போய்விட்டது. எனவே மைசூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேசிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து அவருடைய விருப்பப்படியே கான்பூர் ஐஐடியில் எம்டெக் படித்து பட்டம் பெற்றார்.
எம்.டெக் பட்டம் பெற்று சில நிறுவனங்களில் பணிபுரிந்த நாராயணமூர்த்தி பின்னர் மும்மையில் இருந்த பட்னி என்ற மென்பொருள் நிறுவனத்தில் ஆலோசகராய் பணியில் சேர்ந்தார். பட்னி நிறுவனத்தில் அவரைப் போலவே துடிப்பான சில இளைஞர்கள் பணிபுரிந்து வந்தார்கள். அனைவருக்குமே சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
நாராயணமூர்த்தி, நந்தன் நிலேக்னி, தினேஷ், கோபாலகிருஷ்ணன், ராகவன், சைபால், அசோக் அரோரா ஆகிய ஏழு நண்பர்களும் இணைந்து ஆளுக்கு பத்தாயிரம் மூதலீட்டில் 1981 ஆம் ஆண்டில் புனே நகரத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். தாங்கள் தொடங்கிய நிறுவனத்திற்கு அவர்கள் சூட்டிய பெயர் “இன்போசிஸ்”. கடின உழைப்பின் மூலமாக இன்போசிஸ் மெல்ல மெல்ல வளர்ந்து அசுர வளர்ச்சி பெற்று இன்று அபார சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
வெறும் எழுபதாயிரம் ரூபாய் முதலீட்டோடு தொடங்கப்பட்ட நிறுவனமான இன்ஃபோசிஸ் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாத்திருக்கிறது. இமாலய வெற்றியை அடைய பணம் பிரதானமல்ல உழைப்பே என்பதை உலகிற்கு நிரூபித்திருக்கும் ஒரு சிலருள் நம் நாராயணமூர்த்தியும் ஒருவர்.
படிப்படியான வெற்றி என்பது தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. குடும்பத்திற்கும் இது பொருந்தும். சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்து எதிர்காலத்திற்குத் தேவையான பொருளை சரியான முறையில் சேமித்து வைப்பவரே நிம்மதியாக வாழ்பவராக இருக்கிறார்.
நம்பிக்கை மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி நம்மைத்தேடி வரும். உழைப்போம். நாமும் உயர்வோம். பிறரையும் உயர்த்துவோம்.