
நாம் ஏதாவது ஒரு வேலையை செய்ய தொடங்கும் முன்பு அதற்கு வேண்டிய உபகரணங்களை சரிவர எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் நறுக்கப் போகிறோம் என்றால் கத்தியை கூர்மையாக்கி கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் தோள்பட்டை வலி இல்லாமல் காய்கறிகளை நறுக்க முடியும். மழுங்கிய கத்தியுடன் வேலையை செய்ய தொடங்கினால் நேரம்தான் நிறைய ஆகும்.
அதனால் காய்கறிகளையும் அழகாக வெட்ட முடியாது. ஒரே அளவாகவும் இருக்காது. அதேபோல் பூத்தொடுக்க போனால், நார் ஒரே அளவாக, சிக்கலில்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் குறிப்பிட்ட நேரத்திற்குள் பூத்தொடுத்து முடிக்க முடியும். இல்லையேல் அந்த நாரில் உள்ள சிக்கலை பிரிக்கவே நீண்ட நேரம் ஆகிவிடும்.
ஆட, பாட, வாத்தியங்கள் வாசிக்க, எழுத, படிக்க அனைத்திற்கும் அதற்கு உரிய பொருட்கள் சரியானபடி இருக்க வேண்டியது அவசியம். அதை எடுத்து வைத்துக் கொள்ளாமல் வேலையை செய்வோம். இடையில் பிரச்னை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று வேலையை செய்ய தொடங்குவோமானால் அது சரிவர நடக்காது.
இடையில் அந்த வேலையை செய்வதற்கு அலுப்பு தட்டும். அடடா! அந்தப் பொருளை அப்பொழுதே எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால் இந்நேரம் அந்த வேலையை சுலபமாக முடித்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றும். அப்படி எண்ணம் ஏற்படும் போதாவது எழுந்து தேவையான பொருளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதும் அதே பொருளை வைத்துக்கொண்டு மல்லு கட்டினால் என்ன ஆகும் என்பதற்கு இதோ ஒரு குட்டி கதை.
ஜென் குரு ஒருவர் காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவன் பெரிய மரம் ஒன்றை அறுத்துக் கொண்டிருந்தான். வியர்த்து போயிருந்த அவன் மிகவும் சோர்வாக காணப்பட்டான்.
அவனிடம் ஜென் குரு உன் கத்தி கூர்மையாக இல்லை. அதை கூர்மையாக்கிவிட்டு வேலையை தொடர் என்றார். அதற்கு அவன் "நான் மாலைக்குள் இந்த மரத்தை வெட்ட வேண்டும். கத்தியை கூர்மையாக்க நேரம் இல்லை" என்றான்.
இப்படி கால நேரத்தை சரியாக கணக்கிடாததால்தான் காலதாமதம் ஆகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அப்படி நாம் திண்டாடும் பொழுது நமக்கு ஒருவர் அறிவுரை சொன்னால் அதையாவது சரியானபடி கேட்டு தெரிந்து புரிந்து நடக்க முயற்சிக்க வேண்டும். அதற்கும் முயற்சிக்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று வாதிட்டால், கால நேரத்திற்குள் செய்யத் துணிந்த வேலையை செய்து முடிக்க முடியாமல் திண்டாடுவோம். காலம் விரயம் ஆனதுதான் மிச்சம்.
ஆதலால் எந்த வேலையை செய்ய தொடங்கினாலும், அதற்கு உரிய அனைத்துப் பொருட்களையும் சரியான முறையில் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு செய்யத் தொடங்குங்கள். அதுதான் செய்யும் வேலையை காலத்திற்குள் முடிக்க கை கொடுக்கும்.