
உண்மையான அழகு என்பது ஒருவரின் உடல் தோற்றத்தை மட்டும் சார்ந்தது அல்ல. அது நேர்மை, நல்ல நடத்தை, மற்றவர்களுடன் நல்ல புரிதலான உறவு, நல்ல குணங்கள் என பல அம்சங்களைக் கொண்டவை. வெளிப்புற தோற்றம் மட்டும் இல்லாமல் ஒருவருடைய உள்ளம், மனம் ஆகியவற்றின் அழகையும் கவனிப்பது சிறப்பு.
எந்த வேலையையும் நேர்மையாக செய்வதும், மற்றவர்களுடன் நேர்மையாக பழகுவதும் மிகவும் அவசியம். மனிதாபிமானம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பொறுமை, கருணை, இரக்கம் போன்ற நல்ல குணங்களை வெளிப்படுத்துவது நம்மை மிகவும் அழகாக காட்டும். அதேபோல் வெளிப்புற தோற்றத்தை மட்டும் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது.
பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையும், மற்றவர்களின் சுக துக்கங்களில் உடன் இருப்பது போன்றவையும் நம் அழகை வெளிப்படுத்தும். வெளித்தோற்றம் என்பது காலப்போக்கில் மாறலாம். ஆனால் உள்ள அழகானது என்றுமே மாறாமல் நிலையானதாக இருக்கும்.
நமது எண்ணம் மற்றும் சிந்தனைகளின் பிரதிபலிப்பு சார்ந்து தான் நாம் காணக்கூடிய விஷயங்கள் அழகாகவோ அழகின்றியோ தோன்றும். வெளிப்புறத் தோற்றம் எப்படியிருந்தாலும் நல்ல எண்ணம் நல்ல சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் அனைவரும் அழகானவர்கள்தான். உண்மையான அழகு என்பது அதுதான். உண்மையான அழகு ஒருவரின் உள்ளார்ந்த பண்புகளில் இருக்கிறது. இது அவர்களின் மனதில் உள்ள நற்பண்புகளின் வெளிப்பாடாக அமைகிறது.
உண்மையான அழகு என்பது உடலோடு தொடர்பானது என்பதை விட உள்ளார்ந்த பண்பு, மனதினுடைய தூய்மை, சுயநலமின்றி அன்பு பாராட்டுதல், பொறுப்பான தன்மை, சுயநலமின்றி செயல்படுதல் போன்றவற்றை வெளிப்படுத்தும். பொதுவாக அழகு என்பது மனசு சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறுவார்கள். ஆனால் வெறும் புற அழகு மட்டும் இல்லாமல் அக அழகும் இருந்தால் கூடுதல் சிறப்புதானே! அகத்தின் அழகே எப்போதும் சிறந்தது.
இதற்கு நரை திரை மூப்பில்லை. எப்போதும் இளமையாகவே இருக்கும். புற அழகு கொஞ்சம் கொஞ்சமாக மாறி மறைந்து போகும். தோலில் சுருக்கங்கள் விழுவதும், நிறம் மங்கிப் போவதும், நரை முடி தோன்றுவதும், வழுக்கை விழுவதும், பற்கள் காணாமல் போவதும் என நடை தள்ளாடி, பேச்சு தடுமாறி புற அழகு காணாமல் தொலைந்து போகும். ஆனால் அக அழகோ எப்போதும் என்றும் இளமையாக இருக்கும்.
ஒருவருக்கு அழகாக தெரிவது மற்றொருவருக்கு அழகாகத் தெரியாமல் போகலாம். மனிதர்களுக்கு வெவ்வேறு ரசனைகள் உண்டு. வெளிப்புற தோற்றம் மட்டுமே உண்மையான அழகு கிடையாது. அழகான உடலும் முகமும் முதல் தோற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும்.
ஆனால் உண்மையான அழகு என்பது வாழ்நாள் முழுவதும் பிறரிடம் நம்பிக்கையையும் அன்பையும் உருவாக்கும். பிறரால் மதிக்கவும் பாராட்டவும் படுவோம். நல்ல பண்பட்ட நடத்தையும், பிறரின் வலியை உணர்ந்து செயலாற்றுவதும் பிரதானமாக இருந்தால் வெளிப்புறத் தோற்றம் எதுவாக இருந்தாலும் அது உண்மையான அழகு என்றே அழைக்கப்படும்.