கடலுக்கு எல்லையே கிடையாது! ஆனால், 'கடல் எல்லை' உண்டு! என்னாது?!

Sea border
Sea border

கடற்பரப்பின் மீது நிலவியல் மற்றும் அரசியல் சார்ந்து, மனிதனால் உருவாக்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான பிரிவாக, கடல் எல்லை (Maritime Boundary) இருக்கிறது. கடல் எல்லை ஒரு நாட்டின் கடல்சார் உயிர் மற்றும் கனிம வளங்களின் மீதும், கடற்பரப்பின் மீதான சட்டங்களுக்கும் உரிய அந்நாட்டின் உரிமையை நிலை நாட்டுகிறது. கடல் எல்லையானது ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்டக் கடற்பரப்பு, அண்மைக் கடற்பரப்பு, பொருளாதாரத் தனியுரிமை பகுதி மற்றும் கண்டத் திட்டு என்று நான்கு பகுதிகளாக வரையறுக்கப்படுகிறது.

1. ஆளுகைக்குட்பட்டக் கடற்பரப்பு (Territorial Seas)

1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் குறித்த மாநாட்டு வரையறையின் படி, ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு (Territorial Waters) என்பது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2 கிமீ அல்லது 13.8 மைல்) வரை உள்ள கடற்பரப்பாகும். ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும். மேலும் ஒரு நாட்டின் இறையாண்மை ஆளுகைக்குட்பட்டக் கடற்பரப்பு உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்படுகைக்கும் பொருந்தும்.

2. அண்மைக் கடற்பரப்பு (Contiguous Zones)

அண்மைக் கடற்பரப்பு (Contiguous Zone) என்பது ஆளுகைக்குட்பட்டக் கடற்பரப்பின் வெளிப்புறத்திலிருந்து அடுத்த 12 கடல் மைல் (அதாவது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 24 கடல் மைல்) உள்ள கடல் நீர்ப்பரப்பாகும். அண்மைக் கடற்பரப்பில் ஒரு நாடு அதன் சுங்க, நிதி வரவு, குடியமர்தல் மற்றும் சுகாதாரச் சட்ட மற்றும் விதிமுறை மீறல்களைத் தடுக்கவும், கண்காணிக்கும் வரையறைகளைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகில் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தால் என்ன ஆகும்? 
Sea border

3. பொருளாதாரத் தனியுரிமை பகுதி (Exclusive Economic Zones)

பொருளாதாரத் தனியுரிமை பகுதி என்பது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து அதிகபட்சமாக 200 கடல் மைல் தூரம் வரை பரவியுள்ள கடற்பரப்பாகும். இது அண்மைக் கடற்பரப்பையும் உள்ளடக்கியுள்ளது. இப்பகுதியின் மீன் வளம், கனிம வளம், பெட்ரோலிய ஆய்வு போன்ற அனைத்து வளங்கள் மீதான உரிமைகளையும் மற்றும் இவ்வளங்கள் சார்ந்த கழிவு மேலாண்மையையும் அந்த நாடேக் கட்டுப்படுத்துகிறது. எனினும், இப்பகுதியின் வழியாக வேறு நாட்டின் கப்பல்கள் பயணிக்கவோ அல்லது ஐக்கிய நாடுகளின் விதிகளுக்குட்பட்டு இக்கடற்பரப்பில் வேறு நாடுகள் கழிவுகளைக் கொட்டாவோ தடை செய்யும் அதிகாரம் இல்லை.

4. கண்டத்திட்டு (Continental Shelf)

இது நீரின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள மண்ணையும், நீட்டிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் பகுதியின் நிலத்தடிக் கடற்பரப்பையும் கொண்ட பகுதியாகும். இது குறிப்பிட்ட மாநிலம் அல்லது நாட்டின் கடல் எல்லையில் இருந்து இருநூறு கடல் மைல் நீளம் வரை நீண்டுள்ளது. இது நாடு அல்லது மாநிலத்தின் பிராந்தியக் கடல்களின் பகுதி முழுவதும், கடலில் உள்ள சர்வதேச எல்லை வரை, கண்டத்திட்டு விளிம்பின் முழுமையான வெளிப்புற விளிம்பு வரை நீடித்த பகுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com