
நடைப்பயிற்சி மற்றும் கடை, உறவினர், நண்பர்கள் வீடு என்று எங்கு சென்றாலும் ஒரே வழியில் செல்லாமல் புது புது வழியில் சென்றால் அங்கு பழகுவதற்கு நிறைய மனிதர்கள் கிடைப்பார்கள். வித்தியாசமான தாவர வகைகளை கண்டு களிக்கலாம். மேலும் புதிதாக தொடங்கப்பட்ட கடைகளோ, அலுவலகங்களோ, உடற்பயிற்சி மையங்களோ, தொழிற்பயிற்சி கூடங்களோ இருக்கலாம்.
சின்னச் சின்ன பள்ளிகள் கூட இருக்கும். அதில் குழந்தைகளை சேர்ப்பதற்கும், ஓய்வு நேரத்தில் நமக்கு பிடித்த வேலைகளை, கைத்தொழில்களை அங்கு சென்று கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். இதுபோன்ற பல அனுபவங்களை பெற ஒரே வழியில் செல்லாமல் பல்வேறு வழிகளில் செல்வது நல்லது.
அதேபோல் கட்ட வேண்டிய பில்கள், வாகன இன்ஷூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் ,பிரீமியம் உள்ளிட்ட எல்லாவற்றின் தேதிகளையும் டைரியில் குறித்து வைத்துக்கொண்டால் காலாவதி தேதிக்குள் எல்லாவற்றையும் அபராதம் இன்றி பணத்தை இழக்காமல் கட்டி முடிக்க உதவும்.
மேலும் சர்வீஸ் செய்ய வேண்டிய பொருட்களின் தேதியையும் குறித்து வைத்துக்கொண்டால், குழம்பி தடுமாறாமல் எல்லாவற்றையும் செவ்வனே சிறப்பாக செய்து முடிக்க முடியும். இந்த அனுபவத்தை நம் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல, அவர்களும் இதை கற்றுக்கொள்வார்கள். இதனால் காலதாமதம் இன்றி கடமையை செய்து முடிக்க வழிவகை செய்த அனுபவம் கிடைக்கும்.
புதிதாக திருமணமான உறவு, நட்பு, பிள்ளைகளிடம் நலம் விசாரிக்கலாம். நீண்ட நாட்கள் பேசாமல் இருந்த உறவினர்களை சமயம் கிடைக்கும்பொழுது சந்தித்து உறவாடலாம். முக்கிய தருணங்களில் வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சிகளை பரிமாறலாம். இதனால் உறவும் நட்பும் புத்துயிர் பெறும். இப்படி உறவாடும் பொழுது அவர்கள் கூறும் கருத்துக்கள் ஒரு புதிய அனுபவத்தின் தொடக்கமாக இருக்கும்.
அதேபோல் ஆண்டிற்கு ஒரு முறையாவது பயணங்களை மேற்கொண்டால் புத்துணர்ச்சி கிடைக்கும். வாழ்க்கையில் மேற்கொள்ளும் பயணங்களே பல்வேறு விஷயங்களை நல்ல அனுபவங்களை கற்றுத்தரும் ஆசான். அது ஆண்டு முழுவதும் உற்சாகத்துடன் இயங்குவதற்கு ஒத்துழைப்பைத்தரும்.
இதுபோன்ற அனுபவங்களே நம்மை எதிலும் முட்டுக்கட்டை போடாமல் இயல்பாக இயங்க வைக்கும் உபகரணங்கள். அதனால் இதனை இயல்பாக எளிமையாக கையாண்டு உற்சாகமுடன் நாட்களை இயக்குவோமாக!