மாற்றம் எங்கிருந்து துவங்க வேண்டும் தெரியுமா?

Motivation Image
Motivation Imagepixabay.com
Published on

நாம் அது தவறு, இது தவறு, அவன் தவறு செய்கிறான், இவன் தவறு இழைக்கிறான் என நாள் முழுவதும் குறை கூறிவிட்டு நாமும் அதையே செய்து வருகின்றோம்.

யார் செய்வது தவறு, யார் மாற வேண்டும் என்பதே கேள்வி...!
எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறிவிட முடியாது.. ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றால் முதலில் அதற்கான தகுதி நமக்கு வேண்டும்.

எந்தச் செயலிலும் நாம் முன் மாதிரியாக இருந்தால்தான் நம் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு பிரார்த்தனை செய்து கொண்டே, நிரம்பி வழியும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தான் மூன்று குழந்தைகளை பெற்ற தகப்பன்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு பரிதாபப்பட்டுக் கொண்டே 16 பள்ளி குழந்தைகளை தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்கிறார் இலகுரக வாகன ஓட்டுநர்.

ஆழ்துளைக் கிணற்றை மூடாதவர்களை திட்டிக் கொண்டே அலைபேசியில் பேசியபடி மகிழுந்தை ஓட்டிச் சென்றார் வாகன ஓட்டுனர்.

கையூட்டு வாங்கிக் கொண்டு தரமற்ற பள்ளிப் பேருந்துக்கு சான்றிதழ் கொடுத்துவிட்டு, துளை வழியே குழந்தை விழுந்தவுடன் தானே நடவடிக்கை எடுக்கக் கிளம்பி விட்டார் ஒரு வாகன ஆய்வு அதிகாரி. சீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக் கொண்டே பாதையின் அருகில் உள்ள உயர் மின்மாற்றியின் கீழ் அவசரத்திற்கு ஒதுங்கினான் ஒரு சாமானியன்.

மனிதாபிமானம் என்பதே இப்போது இல்லை என்று பேசிக்கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவனை காணொளி எடுத்து நிகழ்வினைப் பெரிதாக்கினார் ஒரு நல்லவர்.

மக்கள் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு வாக்கு செலுத்தும் வரை இப்படித்தான் இருக்கும் என்று திட்டிவிட்டு, 50,000 ஆயிரம் ரூபாய் கையூட்டு கொடுத்து பணியிட மாற்றம் வாங்குகிறான் ஒருவன்.

நாட்டின் பொருளாதாரம் சரிந்து போனதால் மனம் உடைந்து, தினமும் 500 ரூபாய் அரசின் சாராயக் கடைக்கு தண்டச் செலவு செய்கிறான் ஒரு குடிமகன்.


குடிநீர் வாங்கவும், 'குடி'நீர் வாங்கவும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டே, தொழிற்சாலைகளால்தான் காற்று மாசு ஏற்படுகிறது என்கிறான் மற்றொருவன். 

அடுத்தவர் முதுகைப் பார்த்து சிரிக்கும் யாரும் தன் முதுகை சுத்தமாக வைத்து கொள்வதில்லை...!

இதையும் படியுங்கள்:
சுற்றுலா வருமானத்தைப் பல மடங்காக்கும் ‘டோல்கியன் டூரிஸம்’ – ஆக்கமா? அச்சுறுத்தலா?
Motivation Image

முன்னெச்சரிக்கை (என்ற வார்த்தை) இருக்கிறதா...? என்ற கேள்வி எழுகிறது. சில சம்பவங்களைக் காணும்போது...

இதுவும் கடந்து போகும். இதைவிட பெரிய நிகழ்வு நடந்தால் நாம் அதை விமர்சனம் செய்யத் தயாராகி விடுவோம். தனிமனித ஒழுக்கம் போற்றப்படும் வரை நமக்கும் பொழுதுபோக்கிற்கும் பஞ்சம் என்றும் இருக்காது. மாற்றத்தை உருவாக்க விரும்புபவர்கள் தங்களிடம் இருந்து தொடங்க வேண்டும்.

நாம் மாறினால் மொத்தமும் மாற வாய்ப்பு உருவாகும். ஆமாம் முதலில் நாம் மாறுவோம். தானாகவே மக்கள் மாறுவார்கள். மாற்றம் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com