
எப்போதும் ஒரே விஷயங்களில் ஒரே மாதிரி செய்வது நமக்கு பிடிப்பதில்லை. எங்கும் எதிலும் மாறுதல் தேவைப்படுகிறது. எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறோம். துன்பம் என்றால் என்ன விலை, மனக்கவலை என்றால் என்ன என்று நினைக்கும் அளவிற்கு எப்போதும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். நமக்கு மகிழ்ச்சி தராத விஷயங்களை விட்டு ஒதுங்க நினைக்கிறோம்.
சிலருக்கு ஆடம்பரமாக இருப்பதில் மகிழ்ச்சி. சொகுசு காரில் பயணம், விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் உடுத்துவதில் ஆர்வம், விதவிதமான உணவுகளை உண்பதில் அலாதிப்பிரியம், அடிக்கடி நண்பர்களுடன் வெளியில் சுற்றித் திரியவேண்டும் என்ற எண்ணம் என்று எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறோம். உண்மையில் இதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது என்றும் நம்புகிறோம்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியை வளர்க்க நேர்மறையாக சிந்திக்கவும், எதிர்மறை எண்ணங்களை குறைத்துக் கொள்ளவும் பயிற்சி எடுக்க வேண்டும். மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன்கொண்டு விளங்க முயற்சிக்க வேண்டும். நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை பின்தொடர வேண்டும்.
சிலர் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருப்பார்கள் சின்ன சின்ன சந்தோஷங்களையும் கூட அனுபவிக்க நேரமில்லாமல். இது சரி இல்லை. தவறு. சின்ன சின்ன சந்தோஷங்களையும் நேரம் கிடைக்கும்வரை ஒதுக்கி வைக்காமல் கிடைக்கும் பொழுது அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது நம் வாழ்க்கையை நம்பிக்கையுடன் நகர்த்த உதவும்.
மகிழ்ச்சி என்பது ஒரு தொற்றுநோய். அது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. அத்துடன் நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் கொண்டுவரக்கூடிய மற்றவர்களை நம் பக்கம் ஈர்க்கக் கூடியது. மகிழ்ச்சியாக இருப்பது நம்மை மட்டும் அல்ல நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் தொற்றிக்கொள்ளும்.
நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம் என்றால் மகிழ்ச்சியாக இருப்பது நம் ஆன்மாவிற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதாக இருப்பது மட்டுமல்லாமல் நம் மனநிலையையும் நம் வாழ்நாள் ஆற்றலையும் அதிகரிக்க உதவும் என்பதால்தான். மகிழ்ச்சியான தருணங்கள் நாம் எதிர்கொள்ளும் கடினமான நேரங்களையும் கடந்து, நம் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்தும் சக்தியை நமக்கு வழங்குகிறது.
எனவே எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருப்பது என்பது சாத்தியமில்லை. அத்துடன் எப்போதுமே மகிழ்ச்சியாக இருந்தால் அதன் அருமை நமக்கு எப்படித் தெரியும்? எதுவுமே தொடர்ந்து கொண்டிருந்தால் அதன் அருமை நமக்கு தெரியாதல்லவா? மகிழ்ச்சி என்னும் அற்புதமான தருணங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டே இருக்க முடியாது. முயற்சி செய்ய செய்ய அதன் கால அளவு கூடலாமே தவிர நிரந்தரமாக நம்முடன் இருக்காது.
மனிதர்கள் அனைவருமே பலவிதமான உணர்ச்சிகளை அனுபவிப்பது இயல்பாகும். சோகம், வருத்தம், அழுகை, தோல்வி, சோர்வு என எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை. இவற்றை கடக்க முயற்சி செய்யலாம். எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மன அழுத்தம், மன வருத்தம் இல்லாத சூழலை உருவாக்க முயற்சி செய்யலாம். நம்மால் முடிந்த பொழுதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யலாம்.
நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால் நாம் ஏன் சாப்பிட வேண்டும் ஏன் குளிக்கவேண்டும் என்று என்றைக்காவது கேள்வி கேட்கிறோமா அதுபோல்தான் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க நினைப்பதும் அவசியமான ஒன்றுதான். உண்மையில் சந்தோஷமாக இருப்பதற்கு பெரிய காரணம் எதுவும் தேவையில்லை. எந்த காரணமும் இல்லாமல் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்றுமே மிகவும் எளிமையானதுதான்.
மகிழ்ச்சியாக இருக்க பழகுவோமா?