
நமக்கு இங்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே வாழ்க்கையை ஒரு பந்தயம்போல் பார்க்கவே கற்றுத்தரப்படுகிறது. வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று முடுக்கி விடுகிறார்கள். அவனைவிட நீ நல்ல தேர்ச்சி பெற்றுவிட வேண்டும்; இவனைவிட நீ முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்றெல்லாம் விரட்டுகிறார்கள்.
சுயமுன்னேற்ற நூல்கள் என்ற பெயரில் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ எல்லா நூல்களுமே வாழ்வை ஒரு பந்தயக்களமாகச் சித்தரித்து அக்களத்தில் உங்களை இறக்கிவிடும் வேலையைத்தான் செய்கின்றன. 'முடியும்' முடியும்! உங்களால் முடியும்! முட்டுங்கள், மோதுங்கள்! போராடுங்கள்' என்று அப்புத்தகங்கள் உங்களை உசுப்பி விடுகின்றன.
அந்த நூல்களை எழுதுவோரும் சரி, அவற்றை வாசிப்போரும் சரி, ஒன்றை மறந்துவிடுகிறார்கள். எல்லோரும் முதல் இடத்திற்கு வந்துவிட முடியாது. அப்படி வந்துவிட்டால், வரமுடிந்தால், 'முதல் இடம்' என்பதற்கே மதிப்பு இல்லாமல் ஆகிவிடும். இயற்கை, தன் மாயத் தன்மையால் 'முதலிடம்' என்பதற்கு ஏற்படுத்தி வைத் திருக்கின்ற கவர்ச்சி காணாமல் போய்விடும்.
இன்னொன்று, முதலிடத்துக்கு வந்தவர்களெல்லாம் அந்த இடத்தைப் பெறவேண்டும் என்று முயன்றவர்களுமல்ல: அதற்காக முயன்றவர்களெல்லாம் அந்த இடத்தைப் பெறவுமில்லை.
வாழ்க்கை மிகவும் சிக்கல் நிறைந்தது. நீங்கள் ஒரு பாதை வகுத்தால் அதில் ஆயிரம் பேரின் பாதைகள் வந்து குறுக்கிடும். அவை, நீங்கள் உங்கள் இலக்கை அடைய முடியாதபடி உங்களைத் தடைப்படுத்தலாம்; தடுமாற வைக்கலாம். எனவே, இப்படியொரு பாதை வகுத்தால் அப்படியொரு இலக்கை அடைந்துவிடலாம் என்று வரையறை எதும் செய்துவிட முடியாது. உங்களைத் திருப்பி விடுவதற்கும் திசை மாற்றுவதற்கும் பல நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கலாம். அவற்றை யெல்லாம் எதிர்த்து நீங்கள் போராடத் தொடங்கினால், அதன்பின் வாழ்வே நரகமாக மாறிவிடும்.
வாழ்வைப் புரிந்துகொள்ளுங்கள்; ஒருபோதும் அதன் போக்கை எதிர்த்துப் போராடாதீர்கள்.
முன்னோக்கிச் செல்வதுதான், முன்னேறுவதுதான் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டியது. பிறரை முந்துவது அல்ல. நீங்கள் இயல்பாக உங்கள் பயணத்தைத் தொடர்ந்தால் போதும். நீங்கள் முதல் நபராகக்கூட ஆகிவிடலாம். ஆனால், அந்த நேரத்தில் முதல் ஸ்தானத்தை அடைந்துவிட்டதைக் குறித்த கர்வம் உங்களுக்குள் துளியளவும் துளிர்விடாது. ஏனெனில், ஓர் இனிய பயணத்தில் நீங்கள் முதலாவதாகச் செல்கிறீர்களா, இரண்டாவதாகச் செல்கிறீர்களா என்பது முக்கியமானதல்ல. எந்த அளவு அந்தப் பயணம் உங்களுக்கு இனிய அனுபவங்களைக் கொடுத்தது என்பதுதான் முக்கியமானது.
வாழ்வில் எத்தகைய சூழ்நிலையிலும் இறுக்க மடையாமல் நெகிழ்வுத்தன்மையுடன் அமைதி நிலை பிறழாதவராகத் திகழ வேண்டுமானால், முதலில், வாழ்க்கை என்பது பந்தயமல்ல; அது ஒரு பயணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பந்தயத்தில் கலந்துகொண்டவன் பரபரப்போடும் வேகத்தோடும் வெறியோடும் செயல்படுகிறான். அவன் அவ்விதமே செயல்பட முடியும்.
ஆனால், இனிய பயணம் மேற்கொள்பவன், புனித யாத்திரை செல்பவன் அமைதியோடும் ஆனந்தத்தோடும் மேலும் மேலும் பொங்குகின்ற புத்துணர்வோடும் தன் இயல்பு கெடாமலிருக்கிறான்.