
ஊர் உலகம் நம்மை ரொம்ப நல்லவர் என்று புகழ வேண்டும் என்பதை அனைவருமே விரும்புகிறோம். அப்படி உங்களைப் புகழ வேண்டும் என்றால் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? வாங்க அதைப் பற்றிக் கொஞ்சம் இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம்.
1.எப்போதும் நேர்மறையான வார்த்தைகளையே பேசுங்கள். எதிர்மறைப் பேச்சு உங்களைச் சுற்றி உள்ளவர்களின் மனதில் உங்களைப் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடும். மேலும் எதிர்மறையாகப் பேசுவதால் ஒரு நன்மையும் இல்லை என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.
2.ஒருவருக்கு வாக்குறுதி கொடுக்கும் முன்னால் அதைப்பற்றி பலமுறை சிந்தியுங்கள். கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியுமா என்பதை உறுதி செய்துகொண்டு பிறருக்கு வாக்குறுதியைக் கொடுங்கள். அப்படி ஒருமுறை நீங்கள் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்கக் கூடாது. அப்படி நீங்கள் செய்தால் நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் என்ற எண்ணம் பிறர் மனதில் உருவாகிவிடும்.
3.ஒருவரைப் பற்றி பிறரிடம் தவறாகப் பேசாதீர்கள். குற்றம் குறை இல்லாதவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை. ஒருவர் தவறே செய்தாலும் அவர் அதைச் செய்துவிட்டார் இவர் இதைச் செய்துவிட்டார் என்று மூன்றாவது நபரிடம் குறை கூறாதீர்கள். அந்த மூன்றாவது நபர் நீங்கள் குறைகூறிய நபருக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். அல்லது உங்களை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக அவரிடம் போய் நீங்கள் இப்படிச் சொன்னீர்கள் என்று கூறலாம். நமக்கு எதற்கு வம்பு. நாம் சரியாக இருக்கிறோமா என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு நம் வேலைகளை மட்டும் பார்க்கப் பழகவேண்டும்.
4.எல்லோருக்கும் மரியாதை கொடுத்துப் பழகுங்கள். உங்களை விட சிறியவராக இருந்தாலும் அவர் நம்மைவிட வயதில் சிறியவர்தானே என்ற எண்ணத்தில் உரிமையில் மரியாதையின்றி ஒருமையில் பேசாதீர்கள். மரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமும் கூட. அதனால் யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்துப் பேசுங்கள். இது பிறருக்கு உங்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தும்.
5.உங்களுடைய கருத்தை பிறர்மீது திணிக்க முயற்சிக்காதீர்கள். பிறரிடம் வீண்விவாதங்கள் செய்யாதீர்கள். இதனால் உங்கள் மீது பிறருக்கு வெறுப்புதான் தோன்றும். வீண்விவாதங்கள் செய்யக்கூடிய சூழ்நிலை உருவானால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிடுங்கள். இது பலபிரச்னைகளைத் தவிர்க்கும்.
6.எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசாதீர்கள். இது உங்களுக்கு பல விதத்திலும் சிக்கலை ஏற்படுத்தும். ஒரு பொய்யைச் சொன்னால் அதை உண்மையாக்க நீங்கள் தொடர்ந்து பல பொய்களைச் சொல்ல வேண்டிவரும். நீங்கள் சொன்னது அனைத்தும் பொய் என்பது ஒருகட்டத்தில் பிறருக்குத் தெரியவந்தால் உங்கள் மீது பிறர் வைத்திருந்த மரியாதை காற்றில் பறக்கத் தொடங்கும்.
7.யாராவது உங்களை நாடி வந்து உதவிகேட்டால் அந்த உதவியை உங்களால் செய்ய முடிந்தால் மறுக்காமல் அவருக்கு உதவி செய்யுங்கள். ஏனெனில் அது போன்ற உதவி உங்களுக்கு பிற்காலத்தில் தேவைப்படலாம். நீங்கள் உதவினால்தால் பிறர் உங்களுக்கு உதவுவார்கள்.
8.பண விவகாரத்தில் சரியாக இருங்கள். ஒருவேளை உங்கள் சூழ்நிலையின் காரணமாக கடன் வாங்கக்கூடிய சூழல் ஏற்பட்டால் வாங்கிய கடனை எவ்வளவு சீக்கிரம் திருப்பித் தரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருப்பித் தந்து விடுங்கள். இது உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.
9.பிறரிடம் தேவையின்றி கோபப்படுவதை விட்டு விடுங்கள். எதையும் சுமூகமாக பேசித் தீர்க்கப் பாருங்கள். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டால் உங்கள் மீது பிறருக்கு வெறுப்புதான் ஏற்படும். மேலும் பகையும் உண்டாகும்.
10.எப்போதும் புன்னகைத்தபடியே வாழப்பழகுங்கள். புன்னகை பிறரைக் கவரும் ஒரு சிறந்த வழி. எப்போதும் புன்னகைத்தபடியே வலம் வருபவர்கள் அனைவரும் விரும்புவார்கள்.
இந்த எளிய பத்து வழிகளைப் பின்பற்றிப் பாருங்கள். பிறகு உங்களை எல்லோரும் உங்களை “இவர் ரொம்ப நல்லவர்” என்று சொல்லுவார்கள்.