
மனிதர்கள் இயல்பிலேயே நல்லவர்களா கெட்டவர்களா என்றால் அவர்கள் இருக்கும் சூழ்நிலையை பொருத்தும், வளர்ந்த விதத்தை பொருத்தும் இது அமையும். சிலர் இயல்பிலேயே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இயல்பான இந்த குணத்தை மாற்ற முடியாது.
இதற்கு புராணம் காட்டும் பாண்டவர்கள், கௌரவர்களை உதாரணமாக சொல்லலாம். ஒரே சூழ்நிலையில் வளரும் இவர்களில் பாண்டவர்கள் இயல்பாகவே நல்லவர்களாகவும், கௌரவர்கள் இயல்பாகவே கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
நல்லவராகவும் வல்லவராகவும் திகழ பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இயல்பாகவும், மற்றவர்களிடம் எப்போதும் உண்மையாகவும் இருந்தாலே போதும். அகம்பாவ பேச்சோ, ஆடம்பர போக்கோ இல்லாமல் இயல்பாக பழகுவதும், பொய் பிரட்டு என்று இல்லாமல் உண்மையாக இருப்பதுமே சிறந்தது. எளியவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவுவது சிறப்பு. பணத்தால் உதவ முடியவில்லையென்றால் பரவாயில்லை, உடலால் ஒத்தாசையாக இருக்கலாம். அதுவும் முடியவில்லை என்றால் நல்ல வார்த்தைகளை கூறி அவர்களை உற்சாகப்படுத்தலாம். அவர்களுக்கு ஆறுதலாக இருக்கலாம்.
மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் புரிந்துகொண்டு நடப்பது நம்மை பிறரிடம் நல்லவராக எடுத்துக்காட்டும். ஒருவர் மன கஷ்டத்தில் இருக்கிறார் என்றால் அவர்கள் ஆறுதல் அடையும் வகையில் அவர்களிடம் நல்ல வார்த்தைகள் பேசுவதும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பழகுவதும் நல்லது. எல்லா மனிதர்களிடமும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.
யாரையும் முழுமையாக நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முத்திரை குத்த முடியாது. நல்லவற்றை எடுத்துக் கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் தீயவற்றை விடுவதும்தான் ஒருவர் நல்லவராக இருக்க பின்பற்ற வேண்டிய சிறந்த வழிமுறை.
நாம் நடந்து கொள்ளும் முறையும், செய்யும் செயல்களுமே நம்மை யார் என்று வெளிப்படுத்தும். ஒருவர் செய்யும் செயல்களை கூர்ந்து கவனித்தால் இது நன்றாகப் புரியும். உள்ளத்தின் வெளிப்பாடுதான் நாம் பேசுவது என்பது போல் உள்ளத்தில் நல்லது இருந்தால் அவை சொல்லிலும் செயலிலும் கண்டிப்பாக வெளிப்படும். நம் எண்ணமே செயலாக வெளிப்படுகிறது. எனவே நல்லவற்றை நினைத்தால் நல்லதையே செய்வோம்.
எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஏதாவது வேண்டாத ஒரு சில குணம் இருக்கத்தான் செய்யும். அதுபோல் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஏதாவது நல்ல குணம் இல்லாமல் இருக்காது. மனிதன் என்பவன் நன்மையும் தீமையும் கலந்தவன்தான்.
ஆனால் அதில் எந்த குணம் கூடுதலாக இருக்கிறதோ அது நம்மை ஆட்கொள்கிறது என்பதை விட ஆட்டி படைக்கிறது என்று சொல்லலாம். எனவே நல்லவராகவும் வல்லவராகவும் திகழ வேண்டுமானால் அடிப்படையில் நாம் நல்ல குணத்துடனும், பிறருக்கு உதவும் மனநிலையுடனும், பிறரின் உணர்வுகளை புரிந்துகொண்டு புண்படுத்தாமல் இருக்கவும் பழக வேண்டும்.