
ஒருவன் எவ்வளவுதான் கவனத்தோடும், புத்திசாதுர்யத்துடனும், கடுமையாக உழைத்தாலும், அவனது நேர்மையான நடத்தை மீது அவனுக்கு முழுமையான நம்பிக்கை முதலில் தேவை. தன்மீது நம்பிக்கை இழந்தவனால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது.
ஒவ்வொரு செயலின்போதும் நமக்குள்ளிருந்து வரும் உள்ளுணர்வை மதிக்கவேண்டும். அந்த உணர்வு அந்தச் செயலை ஆமோதித்தால் மட்டுமே அதனைத் தொடர வேண்டும். இதனை நீங்கள் பழகிப்பாருங்கள். உங்களை அறியாமல் நீங்கள் தவறுகள் செய்கிறபோது உள்ளுக்குள் இருந்து ஒரு கண்டனக்குரல் ஒலிக்கும். அதனைப் புரிந்து உங்கள் செயலைத் திருத்திக்கொள்ள உங்களால் அப்போது முடியும்.
ஒரு உன்னதமான பணியைக் கவனமாகச் செய்து அதில் வெற்றியைப் பெறும்போது உங்கள் உள்ளம் அடையும் பெரு மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அதனால் உங்கள் செல்வாக்கு உயர்ந்தோங்கி, உயர்வான நிலையைத் தொடுகிறீர்கள்.
அதேநேரத்தில், அந்தப் பணியை உங்கள் உள்ளுணர்வின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 'ஏனோதானோ'வென்று செய்தால், பணியில் ஏராளமான குறைபாடுகள் ஏற்பட்டுவிடும். இதனால் உங்கள் முழுமை அங்கு தோல்வியை அடைகிறது. உங்கள் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.
ஆனால், காலத்திற்கேற்ப மாற்றம் வேண்டும் என்றே இப்படிச் செய்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியம்தான். ஆனால் உங்கள் கலையை மேலும் உயர்த்துவதான மாற்றங்களாக அவைகள் இருக்க வேண்டும்.
அதாவது நான்கு மாடிக்கட்டிடத்திலிருந்து கீழே குதித்து சாதிப்பவன், எட்டு மாடிக்கட்டிடத்திலிருந்து குதித்து சாதிக்க முயற்சிக்கலாம்.இது மாற்றம்.
ஆனால் முப்பது மாடிக்கட்டிடத்திலிருந்து பாரசூட் கட்டிக்கொண்டு குதித்தால் அது எப்படி சாதனையாக இருக்கும் உங்களைப் பொறுத்தமட்டில் நான்கு மாடி என்பது முப்பது மாடியாக மாறியிருக்கிறது. ஆனால் பார்வையாளர்களில் மனோநிலை எவ்வாறு இருக்கும் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
தங்களை நீங்கள் ஏமாற்றுவதாக அவர்கள் நினைக்க மாட்டார்களா? உங்கள் சாதனையைப் பார்க்க முதல்நாள் ஆர்வமாக வந்தவர்கள், 'ப்பூ, பாரசூட் அணிந்து கொண்டுதான் குதிக்கிறானா! என்று கேலிபேசுவார்கள். அத்துடன், அடுத்த முறை நீங்கள் இன்னொரு சாதனையை செய்து காண்பிக்கும்போது அதனைப் பார்க்க வருவதைத் தவிர்த்து விடுவார்கள் என்பதுதானே உண்மை!
ஆக, மாற்றங்கள் தேவைதான். ஆனால் அது உங்கள் செயலை மேலும் செதுக்குவதாக உள்ள மாற்றமாக இருக்க வேண்டுமே தவிர. மற்றவர்களை ஏமாற்றுவதான மாற்றமாக இருக்கக்கூடாது.
அதிக சிரத்தையும், கவனமும் இல்லாமல் செய்யும் எந்தவொரு செயலும் நம்மைப் பாதிக்காது என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள். அவை அப்படியே மறைந்து போய்விடுவதில்லை. திரும்பவும் ஒருநாள், நாம் சற்றும் எதிர்பாராத, தர்மசங்கடமான ஒரு சூழ்நிலையில் நம்முன் வந்து நின்று அவமானப்படுத்தும். இழிவுக்குள்ளாக்கும்.
ஆகவே, உங்கள் மீது நம்பிக்கை வைத்து எந்த ஒரு செயலையும் செய்து வெற்றி பெறுங்கள்.