

நாம் ஒரு த்ரில்லர் படத்தைப் பார்க்கும்போது இருக்கும் ஆர்வம், ஒரு சாதாரண குடும்பப் படத்தைப் பார்க்கும் போது இருக்காது. ஏன் தெரியுமா? அடுத்தது என்ன நடக்கும் என்ற அந்த 'மர்மம்' தான் நம்மை இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது. மனிதர்களுக்கும் இது நூறு சதவீதம் பொருந்தும். நம்மைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களிடம் பழகும் போது நமக்கு ஒருவித ஆர்வம் இருக்கும்.
ஆனால், எல்லாம் தெரிந்தவர்களை நாம் எளிதாகக் கடந்து விடுவோம். சமூகத்தில் தனித்துத் தெரியவும், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும் கொஞ்சம் 'மர்மமாக' இருப்பது அவசியம். அது பிறரை ஏமாற்றுவதற்கு அல்ல, நம் மீதான மதிப்பை உயர்த்துவதற்கு. அது எப்படி என்று பார்ப்போம்.
1. மௌனம்!
அதிகம் பேசுபவர்கள் பெரும்பாலும் தங்கள் பலவீனங்களை அறியாமலேயே உளறிவிடுவார்கள். ஆனால், மர்மமான மனிதர்களின் முதல் ஆயுதமே 'மௌனம்' தான். ஒரு குழுவில் இருக்கும்போது, முந்திக்கொண்டு கருத்து சொல்வதை நிறுத்துங்கள். உங்களின் மௌனம், மற்றவர்களுக்கு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். "இவர் என்ன நினைக்கிறார்?" என்று அவர்கள் யோசிக்க வைப்பதே உங்கள் முதல் வெற்றி. குறைவாகப் பேசுபவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் எடை அதிகம்.
2. சமூக வலைத்தளம்!
இன்று சாப்பிட்டது முதல், சண்டை போட்டது வரை அனைத்தையும் ஸ்டேட்டஸில் வைப்பது உங்கள் ஆளுமையைச் சிதைத்துவிடும். நீங்கள் எங்கே செல்கிறீர்கள், யாருடன் இருக்கிறீர்கள், உங்களின் அடுத்த திட்டம் என்ன என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். உங்களைப் பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிதாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை மற்றவர்களுக்கு உண்டாக்குங்கள். எல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிட்டால், மற்றவர்கள் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
3. கணிக்க முடியாதவராக இருங்கள்!
"இவன் இப்படித்தான் ரியாக்ட் செய்வான்" என்று உங்களை யாரும் எளிதாக எடைபோட்டு விடக்கூடாது. ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் பதறாமல், முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருப்பது உங்களை ஒரு புதிரான மனிதராகக் காட்டும். திடீரென ஒரு புதிய திறமையை வெளிப்படுத்துவது அல்லது எதிர்பாராத நேரத்தில் ஒரு சரியான முடிவை எடுப்பது உங்களைச் சுற்றி ஒரு மர்ம வலையைப் பின்னும்.
4. எப்போதும் கிடைக்காதீர்கள்!
யாராவது போன் செய்தவுடனேயே எடுத்துப் பேசுவது, கூப்பிட்ட உடனே செல்வது உங்களின் மதிப்பைத் குறைக்கும். நீங்கள் உங்களுக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள். உங்களைச் சந்திப்பது அல்லது உங்களுடன் பேசுவது என்பது ஒரு அரிய வாய்ப்பாக மற்றவர்கள் உணர வேண்டும்.
மர்மமாக இருப்பது, நம் சுயமரியாதையைக் காக்கும் ஒரு கேடயம். நாம் ஒரு திறந்த புத்தகமாக இருந்தால், படிப்பதற்கு எளிதாக இருக்கும்; ஆனால் சீக்கிரமே தூக்கி எறியப்படுவோம். அதுவே ஒரு பூட்டப்பட்ட பெட்டகமாக இருந்தால், உள்ளே என்ன இருக்கிறது என்ற தேடல் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் ஆழம் என்னவென்று யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆழமான நதிதான் அமைதியாக ஓடும், ஆனால் அதற்குத்தான் சக்தி அதிகம். நீங்களும் அந்த நதியைப் போல மாறுங்கள், உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்கும்.