
எளிமை என்பது தோற்றத்தில் மட்டுமல்ல மனதாலும் உயர்ந்த பண்பை வெளிப்படுத்துவதில் உள்ளது. எளிமை என்பது அடக்கத்துடன் கூடியது. அடக்கம் இருக்கும் இடத்தில் அமைதியும் இருக்கும். எளிமையாக வாழ்வது என்பது ஏழ்மை தன்மையை குறிப்பதல்ல. எளிமை தன்மைக்குள் சிக்கனமும் இருக்கும் சேமிப்பும் இருக்கும். ஆடம்பரமற்ற உயர்ந்த இடத்தை பெற்றிருக்கும். எனவே எளிமையான வாழ்க்கை வாழ்வது என்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும்.
எல்லோராலும் எளிமையாக இருந்து விட முடியாது. எளிமையாக இருப்பது வேறு, தன்னை எளிமையாக காட்டிக்கொள்வது என்பது வேறு. எளிமையாக இருப்பவர்களின் பேச்சில் பணிவும், செயலில் நிதானமும் இருக்கும். குறிப்பாக சுயநலம் என்பது சிறிதும் இருக்காது.
அத்துடன் எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வாழ்கின்ற வாழ்க்கைதான் மகிழ்ச்சியைத் தரும் என்பதில் தெளிவாக இருப்பார்கள். வாழ்வில் எதிர்ப்படும் சிறிய விஷயங்களில் கூட மகிழ்ச்சி காண்பார்கள். அத்துடன் தங்களிடம் உள்ளவற்றில் திருப்தி அடைவார்கள்.
எப்பொழுதுமே எளிமையான வாழ்க்கை என்பது மகிழ்ச்சியைத் தரும். ஆடம்பரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அடைவதற்காக பாடாய்ப் படுவதும் தேவையற்றது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்வது எப்பொழுதுமே மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும். தேவைகள் குறைந்தால் மன அழுத்தம் குறையும். அடிப்படை வசதிகள் தேவைதான். அதற்கு மேல் வேண்டும் என்ற பேராசையால் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தால் மன அமைதியும், சந்தோஷமும் போய்விடும்.
எளிமையான வாழ்க்கை என்பது மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து சூடு போட்டுக்கொள்ளாமல், அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக வாழ்வது. இப்படி எளிமையாக வாழ்வதுதான் மகிழ்ச்சியை தரும். ஆனால் மகிழ்ச்சி என்பது ஒருவரின் தனிப்பட்ட உணர்வு. சிலருக்கு ஆடம்பரமான வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரலாம். வேறு சிலருக்கோ எளிமையே இனிமையாகத் தோன்றலாம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம் தேவைதான். ஆனால் அவை அளவோடு இருந்தாலே போதும்! மற்றவர்களுக்கு பெருமை காட்ட வேண்டும் என்று நினைப்பவர் களுக்குத்தான் அதிகமான பணம் தேவைப்படும்.
எளிமையான வாழ்க்கை மன அழுத்தத்தை குறைக்கும். மற்றவர்களுடன் ஒப்பிடும் நோக்கத்தை குறைத்துக் கொள்வதால் போட்டி பொறாமை விலகி கவலைகளும், பிரச்சினைகளும் அதிகம் தோன்றாது. தேவையற்ற செலவுகளை விலக்குவதால் சேமிப்பும் தன்னம்பிக்கையும் அதிகமாகும்.
பணம் மட்டுமே வாழ்க்கையில் பிரதானமாக இருக்கக் கூடாது. பணத்தை வைத்து மகிழ்ச்சி, நிம்மதி, சந்தோஷம் போன்ற எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். பணமும், பொருளும் அதிகம் சேர சேர மனதில் திருப்தியின்மை மகிழ்ச்சியின்மை ஏற்படும்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. எளிமையே இனிமை என்பதை உணர்வோமா!