
உலகில் எந்தச் செலவும் செய்யாமல் கிடைப்பது விமர்சனம் ஒன்று மட்டும்தான். விமர்சனத்தால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.
நல்ல விமர்சனமாக இருந்தால், நம் செயல்களுக்கு அது டானிக்காக அமைந்து ஊக்கம் தரும். அதுவே தீமையான விமர்சனமாக இருந்தால், நம் ஊக்கம் குறைந்து செயலின் தீவிரமும் குறைந்து பயனற்ற தாகிவிடும்.
விமர்சனமும் ஒரு வகையில் நம்மைப் பற்றியும் நம் செயல் திறன் பற்றியும் அறிய முடிகிறது. என்றாலும் விமர்சனம் செய்யும் மனதை உடையவரும் உள்ளதை உள்ளபடி சொல்பவராகவும் இருக்க வேண்டும்.
இப்பொழுது தினசரிப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டால் போதும் அவரவருக்கு வேண்டியவர் களைப்போற்றியும், பிடிக்காதவர்களைத் தூற்றியும் செய்தியும் விமர்சனமும் வெளியிடுகின்றனர்.
இதுபோல்தான் தேவையில்லாத விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வேலையைப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களின் முழுக்கவனமும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றிபெறமுடியும்.
மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக விமர்சனம் செய்கிறார்களே, நாம் செய்வது சரியான செயல்தானா என்ற சந்தேகம் உங்கள் மனதுக்குள் வந்துவிடும்.
உங்களின் பெருமையான வளர்ச்சியைக் கண்டு, பொறாமையால் கூட தவறான விமர்சனங்களும் செய்வார்கள். தங்களுக்கு முன் இவர் வளர்ந்து விடக்கூடாது என்ற நினைப்பில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். முக்கியமாக ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் திறமை இருந்தால். நம்பிக்கையுடன் உழைத்தால் நேர்வழியில் உங்களுக்குக் கிடைக்கும் வெற்றியை யாராலும் தடுத்துவிடமுடியாது.
உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் முழுக்கவனம் செலுத்தப்பாருங்கள். வேண்டாத வேலையினால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. மேலும் உங்கள் முன்னேற்றத்தில் அக்கரை கொண்டவர்களிடம் மட்டுமே. உங்களின் முயற்சிகளைப்பற்றிக் கூறுங்கள். அதுபற்றியும் கலந்து ஆலோசியுங்கள். தேவையில்லாமல் சிலர் இதை ஏன் செய்கிறாய், அதை ஏன் செய்கிறாய் என்றெல்லாம் பேசி. உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. போடுவார்கள்.
தான் மட்டும் இதைச் செய்யலாம். பிறர் இதைச் செய்யக்கூடாது என்றெல்லாம் பேசும் முட்டாள்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முட்டாள்களின் கருத்தையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை இப்படிப்பட்டவர்களைத் தள்ளி வைப்பதே நலம் ஆகும்.ஏனென்றால் இவர்கள் நம் அருகிலேயே இருந்து கண்டு, எதையாவது விமர்சனம் செய்து கொண்டும் உழைப்பின் நம்பிக்கையைக் கெடுத்துவிடுவார்கள்.
ஒரு மாணவி ஏழ்மை நிலையில் தகப்பனின் ஆதரவும் இல்லாமல் படித்தவர். அவர் தாய் பால் மாட்டை வைத்துக்கொண்டு, தன் பிள்ளை எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என நினைத்தார்.
இது நடந்தது ஐம்பது வருடங்களுக்கு முன்னால். அம்மாணவியின் உறவினர்களில், பெண்கள் அதிகம் படிப்பதும் இல்லை. துவக்கப் பள்ளிவரைதான் படிப்பார்கள்.
ஆனால், அப்பெண் மனதில் வைராக்கியத்துடன், எத்தனை சிரமம் வந்தாலும் படித்தே தீருவேன் என்ற கொள்கையில் இருந்தார். அப்பெண் பள்ளிக்குச் செல்லும்போது, சுற்றத்தார் அவரைக் கேலி செய்தனர்.
நீயெல்லாம் படித்து என்ன சாதிக்கப் போகிறாய். பேசாமல் உன் அம்மாவிற்குத் துணையாய் இருந்து கொண்டு மாடுகளை மேய்த்துக் கொண்டும். சாணி தட்டலாமே" என்றனர். ஆனால் அந்தப் பெண் படித்து ஆசிரியை ஆனார்.
நீங்கள் சாதிக்கும்வரை சந்தனம் மனம் அறியாதவர்கள் சாக்கடை என்பார்கள். தொடர்ந்து வரும் விமர்சனக் குற்றச்சாட்டினை நன்மை என்றால் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தீமை உண்டென்றும் காழ்ப்புணர்ச்சி இருக்கிறதென்றால் விலக்கிவிடுங்கள்.
அறிவில்லாதவர் கூறும் அனைத்து விமர்சனங்களையும் எடுத்துக் கொள்ளவேண்டும் எனும் அவசியம் உங்களுக்கு இல்லை. அதே சமயம் உங்களின் உண்மையான செயலை விமர்சனம் செய்தால், நன்மைக்கென்று எடுத்துக் கொள்ளுங்கள்.
உண்மையான, நல்ல விமர்சனங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணை செய்யும்.