
பிரபல வரலாற்று ஆசிரியரான வால்டர் ராலே லண்டன் சிறையில் ஒரு முறை வைக்கப்பட்டிருந்தபோது, அங்கே உலக வரலாற்றை எழுதத் தொடங்கினார். ஒருநாள் சிறையின் ஜன்னல்களுக்குப்பால் ஒருவன் மற்றொருவனுடன் அடித்துச் சச்சரவு செய்து கொண்டிருந்தான். எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவருடைய சண்டைக்கான காரணத்தை மட்டும் அவரால் அறிய முடியவில்லை. விளைவு "ஜன்னலுக்கு வெளியே என் கண் எதிரே நடந்த சம்பவத்தின் உண்மையை அறிய முடியாதவனால் உலக வரலாற்றை எப்படித் தெரிந்துகொண்டு எழுத முடியும்" எனத் தாம் எழுதுவதையே நிறுத்திவிட்டார்.
உங்கள் சிலை ஏன் இல்லை
அயல்நாட்டு விருந்தினர் ஒருவர் அலெக்சாண்டரிடம்" பேரரசே, உங்கள் நகரிலுள்ள தோட்டங்கள் அழகாகவும், அமைதியாகவும் உள்ளது. அத் தோட்டத்தில் போரில் வீர மரணம் அடைந்த எண்ணற்ற வீரர்களின் சிலையை வைத்திருக்கிறீர்கள் ஆனால் தங்கள் உருவச்சிலையை ஏன் வைக்கவில்லை?" என்று கேட்டார்.
அதற்கு அலெக்சாண்டர் "என்னுடைய உருவச்சிலையை நான் அங்கு வைத்தால் எதிர்காலத்தில் என் பெயர் மறையும்போது, இது யாருடைய சிலை என்று என் சிலையைப் பார்த்து மக்கள் கேட்டாலும் கேட்கலாம். அதைக் காட்டிலும் என் சிலை நிறுவப்படாமல் இருந்து "இவ்வளவு சிலைகள் இருக்கும்போது அலெக்சாண்டரின் உருவச்சிலையை மட்டும் ஏன் வைக்கவில்லை?"என்று மக்கள் கேட்கட்டும் அதைத்தான் நான் எப்போதும் விரும்புகிறேன் "என்றார்.
நாசுக்கான தோல்வி
அமெரிக்க ஜனாதிபதி கென்னடி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு வருகை புரிந்தபோது ரஷ்ய அதிபர் குருசேவுடன் கோல்ஃப் விளையாடினார் .கென்னடி வெற்றி பெற்றார். அதனை ரஷ்யப் பத்திரிகைகள் இப்படி வெளியிடப்பட்டது. "நமது பிரதமர் குருசேவும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கென்னடியும் கோல்ஃப் விளையாடினர். அதில் நமது பிரதமர் இரண்டாவதாக விளங்கினார். மிஸ்டர் கென்னடி"லாஸ்ட் பட் ஒன்னாக"( கடைசிக்கு முந்தியவர்) விளங்கினார்".
கண்டிப்பான கரியப்பா:
இந்தியாவின் முதல் ராணுவ ஃபீல்டு மார்ஷல் கரியப்பா எதையும் ஒழுங்காக செய்யவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர், ஒரு சமயம் அவருடைய வீட்டிற்கு உறவினர் ஒருவர் கோட் சூட் அணிந்து வந்தார். வந்தவர் அவருடைய கோட்டில் சில பட்டன்களை போடாமல் விடிருந்தார்
கரியப்பாவிற்கு கோட் அணிந்தால் அதிலுள்ள எல்லா பட்டன்களையும் சரியாக போட்டிருக்க வேண்டும். தன் உறவினர் கோட்டில் பட்டன்கள் சரிவர போடாமல் இருப்பதை கண்ட கரியப்பா ஒரு கத்திரிக்கோலை கையில் எடுத்துக் கொண்டு நண்பர் அருகில் சென்று "உனக்கு தேவையில்லாத இந்த பட்டன்களை எடுத்துக் கொள்ளவா!" என்றாராம்.
உண்மைதான் ஆனால்...!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆப்ரகாம் லிங்கன் நிற்கும்போது கடுமையான போட்டி இருந்தது. அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் அவரை பார்த்து கடுமையாக சாடினார்.
"உங்களை எனக்கு தெரியாதா? நீங்கள் சாராய கடையில் விற்பனையாளராக வேலை பார்த்தவர் ஆயிற்றே! என்றார். இதற்கு ஆப்ரகாம் லிங்கன் பல்லாயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் பதட்டமில்லாமல் பதிலளித்தார்.
"நான் சாராயக் கடையில் வேலை பார்த்தது உண்மைதான் நண்பரே! நான் டோக்கன் வழங்கும் கவுண்டரின் உள் பக்கம் நிற்கும்போது, நீங்கள் கவுண்டரின் முன் பக்கம் நின்று கொண்டிருப்பீர்களே... அதை ஏன் மறந்து விட்டீர்கள்?" என்றார். ஆபிரகாம் லிங்கன் பதிலை கேட்டு மக்கள் கரகோஷம் இட்டனர். அத்துடன் அத்தேர்தலில் பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து ஜனாதிபதியாகவும் ஆனார்.