
நம்மில் பலர் நமக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என அங்கலாய்பதுண்டு.
சோதனை என்பது இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் நடக்கிறது. அதே சமயம் அந்த சோதனையை மாற்றி சாதனை புரிந்தவர்களும், சாதனை புரிபவர்களும் ஏராளமானோர் உள்ளனர்.
சிலருக்கு சோதனை ஏற்பட்டுவிட்டால் அப்படியே இடிந்துபோய் விடுகின்றனர். இதனால் அவற்றையே நினைத்துக் கொண்டிருப்பதால் சகிப்புதன்மை இல்லாமல் கவலை கொள்கிறார்கள். உதாரணமாக எழுத்தாளர்கள் முதலில் சிறு சிறு கதைகள், கடிதங்கள், என பத்திரிகைகளில் எழுதி முயற்சி செய்து பெரிய இடத்துக்கு சென்றவர்கள் உண்டு.
இதே மாதிரி, கவிதை, பாடல், இசை, திரைப்படங்கள், நடிப்பு என முதலில் கஷ்டப்பட்டு சோதனைகளை கடந்து சாதனை படைத்தவர்கள் இதில் ஏராளம். கரப்பான் பூச்சியை எடுத்துக்கொண்டால், அது தலைகிழாக புரண்டுவிட்டாலும், கால்களை அடித்து திரும்ப முயற்சித்து, முடியவில்லை என்றாலும், விட்டுவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எப்படியாவது எழுந்துவிடும்.
மனிதனும் அவ்வாறே முயன்று முடியவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்து மூலையில் அமராமல், எப்படியாவது சோதனைகளைப் பொருட்படுத்தாமல் சாதனை படைக்கவேண்டும்.
மிகப் பெரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் இவருக்கு இளமைப் பருவத்திலேயே உடலில் உள்ள கையும், காலும் செயல் இழந்தபோதும், அவர் மருத்துவர்களிடம் கேட்ட கேள்வி?
என் மூளைக்கு ஏதாவது பாதிப்புண்டா?
"மருத்துவர்கள் எவ்வித பாதிப்பும் இல்லை" எனக் கூறியவுடன் தனக்கு ஏற்பட்ட நோயையும் பொருட்படுத்தாமல், சோதனைகளை வென்று சாதனைகளாக மாற்றி உலகமே போற்றும் பெறும் விஞ்ஞானியாக மாறி வரலாறு படைத்தார்.
சோதனை என்பது நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்வதற்கான வாய்ப்பு. கொரோனா காலத்திலும் சோதனைகளை வென்று குணமாகி வந்தவர்களும் உண்டு.
நமது வாழ்க்கை என்பது சோதனைகள் நிறைந்தது. அதனை புரிந்துகொண்டு ஒரு மனிதன் அதனை சமாளிப்பதற்கு சக்தி பெறுவானா? துவண்டு விடுகிறானா? என்பதை அறிய முடியும்.
நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் எதிர்மறை எண்ணங்கள்தான் வாழ்வை அமைதியற்றதாக மாற்றிவிடுகிறது. நேர்மறை எண்ணங்கள் மனதில் சிந்தனையாய் உருவாகும்போது நம் வாழ்க்கை மகிழ்ச்சியாகும். இதனை புரிந்துகொண்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றிட வேண்டும்.
நமது புதிய முயற்சிகளுக்கு வெற்றியை அளித்து மனதை அமைதியாக்கி சிறப்பான முறையில் மாற்றத்திற்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கும் சாதனை வெற்றியைத் தரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.