
சரியான வாய்ப்புகளுக்காக நிறைய பேர் காத்திருப்பது வழக்கம். “எனக்கு மட்டும் நல்ல வாய்ப்புக் கிடைத்திருந்தால் நான் எப்போதோ வாழ்க்கையில் முன்னேறி இருப்பேன்” என்று சிலர் சொல்வார்கள். ஆனால் வாய்ப்புகளைத் தேடிச்செல்வதற்கு பதிலாக அல்லது வாய்ப்புகளுக்காக காத்திருப்பதற்கு பதிலாக அவற்றை உருவாக்கி அதன் மூலம் முன்னேறுபவர்கள் அதிபுத்திசாலிகள். இந்தப் பதிவில் வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
சுய மதிப்பிடல்;
புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும்போது சுயமதிப்பு என்பது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்திருப்பது மிகவும் அவசியம். தான் சிறந்து விளங்க கூடிய பகுதிகளை அடையாளம் கண்டுகொண்டால் அவற்றை மேலும் பலப்படுத்தி அது சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம் தன்னுடைய ஆர்வம் மற்றும் திறமை எதில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த விஷயத்தில் ஈடுபடலாம். தெளிவான பார்வையுடன் கூடிய மதிப்பீடு மிக எளிதாக வாய்ப்புகளை தேடித்தரும். அதே சமயம் பலவீனமான விஷயங்களில் கவனம் வைத்து அவற்றையும் சரி செய்துகொள்ள வேண்டும்.
புதிய திறன்களை கற்றுக்கொள்தல்;
வாய்ப்புகள் எல்லா இடங்களிலும் உள்ளது. நெறிப்படுத்தப்பட்ட பணியிடங்கள், தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சுறுசுறுப்பான பணியாளர்கள் ஒரு நிறுவனத்திற்கும் மிகவும் முக்கியம். சமரசம் செய்து கொண்டு மாற்றத்திற்கு ஏற்றவாறு தன்னை நேர்மறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உறவுகள்;
புதிய வாய்ப்புகள் பொதுவாக சக ஊழியர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் மூலம் உருவாகின்றன. தன்னுடைய வேலையை சிறப்பாக செய்யும் போது நல்ல தொடர்புகள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை பெற்றுத் தரும். சக ஊழியர்களுடன் உறுதியான உறவுகளை உருவாக்க வேண்டும்.
அனைவரையும் மரியாதையுடன் நடத்தவேண்டும். நன்றி சொல்லவேண்டும். பணிபுரியும் திட்டக்குழு மேலாளர் மற்றும் நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் மதிப்பு மரியாதையை வெளிக்காட்ட வேண்டும் இதனால் நல்ல ஆரோக்கியமான உறவுகள் பணியிடத்தில் ஏற்படும்.
முன்கூட்டியே செயல்படுதல்;
ஒரு புதிய சவாலை ஏற்கும்போது அதில் ஒரு புதிய வாய்ப்பைக்காண அதிக வாய்ப்புள்ளது. அதற்கான திட்டம் தீட்டுதல், சரியான குழுவை நிர்ணயித்தல், உடன் பணிபுரியும் ஊழியர்களுடன் அவற்றைப் பற்றி விவாதித்தல், பெட்டிக்கு வெளியே சிந்தித்தல் மற்றும் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க தேவையான சிறந்த தீர்வுகளை அமைத்தல் போன்ற பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எவ்வளவுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுகிறீர்களோ அதற்கேற்றவாறு நல்ல வாய்ப்புகளும் தேடிவரும்.
இலக்குகளை அமைத்தல்;
செய்யும் பணி சாதாரணமாக இருந்தாலும் அதில் இலக்குகளை அமைத்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், தொழில்துறை தலைவர்கள், உயர் சாதனையாளர்கள் எப்போதும் இலக்கு நிர்ணயம் செய்து கொள்கிறார்கள்.
நீங்கள் ஒரு சாதாரண பணியாளராக இருந்தாலும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தொலைநோக்கு பார்வையைப் பயன்படுத்தி இலக்குகளை நிர்ணயிக்கலாம். தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்குகளை நிர்ணயித்து அதற்கான அறிவைத் தேடிப்பெற்று செயல்படும்போது புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கும்.
தொடர்ந்து முயற்சி செய்தல்;
“வெற்றி பெறுவதற்கான மிகவும் உறுதியான வழி மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வதுதான்” என்று தாமஸ் ஆல்வா எடிசன் கூறினார். வாய்ப்பை அங்கீகரித்து கைப்பற்றுவதற்கு விடாமுயற்சி மிக முக்கியம். உறுதியும், நேர்மையான அணுகுமுறையும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் இலக்குகளைப் பற்றி உற்சாகமான மனநிலையுடன் அவற்றை அடைய பயிற்சி செய்து கடின உழைப்பு, நேர்மறையான கண்ணோட்டம் மற்றும் விடாமுயற்சியுடன் செயல்படும்போது நிறைய வாய்ப்புகள் வந்து அபரிமிதமான பலன்களைத்தரும்.