தூக்கம் என்பது உணவைப் போன்று மனித வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்று. நல்ல தூக்கம், உடலுக்கு ஓய்வையும் சக்தியையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. தூக்கம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் அத்தியாவசியத் தேவை. நிம்மதியான தூக்கம்தான் மனித மூளைக்குச் சிறந்த உணவு.
எந்தவிதமான இடையூறுகளும் இன்றி நமது உடல் இயங்க வேண்டுமென்றால், சிறிதளவும் இடையூறில்லாத தூக்கம் தேவை. தூக்கம் கிடைப்பது என்பது கடவுள் கொடுத்த வரம். உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது தூக்கம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையில்லாதவர்கள் வாழ்க்கையில் வெற்றியைச் சுவைப்பது நடினம். ஆகவே முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுபவர்கள் தூக்கத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
நாம் உறங்கும்போது, நமது உடல் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
1. நிம்மதியான, அளவான தூக்கம் உள்ள இளைஞர்களின் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
2. 90 வயதுக்குமேற்பட்ட பலமுதியவர்கள் தங்களது உடல்நலத்துக்கு முதன்மையான காரணம் தொடர்ந்து தாங்கள் கடைப்பிடித்து வரும் தூக்கப் பழக்கம்தான் என்று சொல்லியிருக்கிறார்கள்.
3. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஓர் ஆராய்ச்சியின் மூலம் சரியான தூக்க அளவு மனிதனின் படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
4. மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றைப் போக்கும் நல்மருந்து தூக்கம்தான். அதனால்தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனைகளில் குணமளிக்கும் மருந்துகளுடன் சேர்த்து இவைகளும் கொடுக்கப்படுகின்றன.
5. எல்லா இயக்கங்களும் சரிவர நடைபெற தூக்கம் ஒருஊக்கமருந்தாகச் செயல்படுகின்றது.
6. எந்த மருந்தாலும் மனிதனாலும் கொடுக்க முடியாத உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் ஓய்வையும் நல்ல தூக்கம் கொடுக்கும்.
7. ஆழ்ந்த தூக்கம் கிடைத்தவர்களுக்குக் கனவுகளும் நிறைய வருகின்றன. தீவிரமான மன உளைச்சல் களுக்கும். வன்முறை எண்ணங்களுக்கும் இத்தகைய கனவுகளே வடிகால்களாக அமைகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
8. உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்கள் போன்றவை சீக்கிரம் குணமடைய நல்ல தூக்கம் காரணமாக அமைகிறது என்று மருத்துவர் கள் கூறுகிறார்கள்.
தகுந்த பாதுகாப்பின்றி, இயற்கையாகவே குறைந்த அளவு தூங்கும் விலங்கினங்களை ஒப்பிடும்போது மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று நிறைவான தூக்கம் பெறுவதற்கான நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறான். உடல், உள்ளம் இரண்டுக்கும் நன்மை பயக்கும் இந்தத் தூக்கத்தை தழுவ விடுவது தவறாகும்.
இன்றைய இளைய தலைமுறை தூக்கத்துக்குச் சரியான மதிப்பு அளிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இரவு வெகுநேரம் வரை பார்ட்டிகளில் கலந்து கொள்வதும், படுக்கையில் படுத்துக் கொண்டே செல்போன்களை இயக்கி, எதையாவது பார்த்துக்கொண்டே விழித்துக் கிடப்பதும் இன்றைய இளைஞர்களின் பழக்கமாகி இருக்கிறது.
ஓர்இரவு சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் அது மறுநாளைய வேலைகளைப் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. பல சமயங்களில் வருப்பறையிலும் அலுவலகத்திலும் கவனத்தைச் சிதற விடுவதற்கும் அந்த சமயத்தில் தூங்கி வழிவதற்கும் காரணம் முந்தின இரவு சரியாக உறங்காததால்தான் என்பதை உணர்த்த இந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள்.
நேரம் கிடைக்கும்போது தூங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலை யைத் தவிர்த்துவிட்டு தூங்கும் பழக்கத்தை நெறிப்படுத்தி செயல் பட்டால் உடலுக்கும் உள்ளத்துக்கும் அது நீண்டகால பலனைக் கொடுக்கும்.
உறக்கத்தையும் இழக்காதீர்கள். வாழ்வின் உச்சங்களையும் இழக்காதீர்கள்.