
''கடந்த காலக் கவலைகளை மறந்துவிடு, இன்றைக்கு ஏற்றபடி வாழ்" -இது எபிக்யூரஸ் கூற்று.
மனதை மெல்லிய அனிச்சமலரைவிட மென்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய மனது எதனால் தாக்கப்பட்டு துன்பத்தால் துவண்டு போகின்றதோ, அதனைக் கண்டு கொள்வது முக்கியமான முதற்படி. எத்தகைய சூழலால் எத்தகைய செயலின் விளைவால் செய்த செயலுக்குத் தூண்டுகோலாக இருந்த எண்ணத்தை பிரித்து ஆய்ந்து பார்த்தால் நமது துன்பம் எந்த வழியாக வந்தது என்பது புரியும்.
வையகத்தில் வாழ்ந்து காட்டியவர்களது வரலாற்றைப் பாருங்கள். அவர்கள் தங்களது மனத்தின் ஆளுமையை உயர்த்திக்காட்டி வாழ்ந்ததாலேதான் அவர்களது வாழ்வு சோபிதமாக மணம் வீசியிருக்கிறது என்பது தெரியவரும்.
உடல் - மனம் - ஆன்மா இவற்றை எந்த வகையிலேயும் காயப்படாது காத்துக்கொள்ள வேண்டும்.
உடல் நிலையை இமயத்தின் முடியிலே இருக்கச் செய்யுங்கள். மனத்தை தெளிந்த நீரோடை போலே தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். ஆன்மாவை அன்னப் பட்சி போலே வளர்த்துக்கொள்ளுங்கள்.
உடல் உறுப்புகள் சோர்ந்து போகாது, சுகம் இழக்காது பாதுகாத்துக் கொள்வது அவசியம். இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், உடற் உறுப்புகளின் சீரான இயக்கம் இவற்றை உணவு, தேவையான பாதுகாத்திட வேண்டும். உண்ணுகின்ற உணவு உடற்பயிற்சி நிறைவான கலையாத உறக்கம் இவை உங்களது உடலை நிமிர்ந்து நிற்கச் செய்யும். உடலால் உயர்ந்து நிற்க முயன்றால்- உங்களது முதுமை கூட விலகிப்போகும். வயோதிகத்தின் உடற்சுவடுகள் உங்கள் உடலின் மேல்நிழலாகப் படுவதற்கு நாணிக் கூசித் தூரவே நிற்கும்.
உடல் பரிசுத்தமான உடனே உங்கள் உணர்வுகளுக்கு வயோதிகம் வரப்போவதில்லை. உங்களுக்குள் ஒரு கவர்ச்சி காந்தமாக வந்து ஒட்டிக் கொள்ளும். நிலைக்கண்ணாடியிலே நிழலாய்த் தெரிகின்ற உங்களது உருவம், உங்களுக்கு புதுத் தெம்பை பன்னீர் தெளித்து வாழ்த்தும். நரம்புகள் இறுக்கத்திலேயிருந்து இறங்கி வருகிறது. இரத்த ஓட்டம் சீராகிறது. மகிழ்வின் விரிவாக்கம் நமது சுவாசத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது.
மேற்கண்ட நடைமுறை பழக்கவழக்கங்களை வாழ்வில் மேற்கொள்வது எளிதான செயல்.
"நலமான உடல், ஆன்மாவுக்கு ஒரு விருந்தாகும். நலமற்ற உடல், ஒரு சிறை" என்று சொன்னான் மேலைநாட்டுக் கவிஞன் பேகன்.
உள்ளம் ஒரு கோயில், உடல் அதன் நுழைவாயில் என்று தானே இந்த மண்ணின் வேத மறைகளெல்லாம் வாய் ஓயாது சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
உடல் உறுப்புகள் ,உறுப்புகளின் செயல்பாடுகள் இவற்றைப் பற்றிய அறிவு ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதவை என்று சொன்னான் அமெரிக்கப் பெருநாட்டுத் திருமகன் ஜெபர்ஸன்.
உண்ணுகின்ற உணவு அரைவயிறு, உறக்கம் மூன்று மணி நேரம், புணர்ச்சி பதினாறு நாட்களுக்கு ஒரே ஒரு முறை. "அச்சத்தை தவிர்” என்பார் திருமூலர்.
தீண்டத்தகாத தீமைகள் எனச் சுட்டிக்காட்டிய வாழ்ந்து காட்டிய உத்தமர்களது வாசகங்களை நாம் நினைவில் நிறுத்திக் கவலைகளை மண்ணில் புதைத்து விடுங்கள்.