

மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பம். ஆனால் நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது தெரியாமல் தேவையற்ற கவலைகள் மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவற்றில் நாம் சிக்கிக் கொள்கிறோம்.
திட்டமிட்டு வாழ்ந்தால் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் மற்றும் சவால்களை விரட்டி அடித்து, நாம் இன்பமாக வாழ முடியும். நம் அன்றாட வாழ்க்கையில் சில எளிமையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடைக்கும். அதற்கு பயனுள்ள வகையில் எளிய வழிகளை பார்க்கலாம்.
சுற்றியுள்ளவரிடம் பழகுதல் வேண்டும்:
வீட்டில் உள்ள உறுப்பினர்கள், வீட்டுக்கு அருகாமையில் இருப்பவர்கள், நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மத்தியில் நல்லதொரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அனைவரிடமும் அன்பு செலுத்தி கருணைகாட்ட வேண்டும். அது நமக்கு பன்மடங்காக திரும்ப கிடைக்கும். உங்கள் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்தால் எப்போதுமே மகிழ்ச்சியான சூழல் மனதில் ஏற்படும்.
தியானம்:
நம் மனதை எப்போதுமே ஒருநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். குழப்பமான மன நிலையில் இருக்கக் கூடாது. தியானம் செய்வது மனதை ஒருநிலைப்படுத்த உதவும். மேலும் தேவையற்ற கவலையை மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவற்றை விரட்டி அடிக்க உதவும்.
விருப்பமான செயல்கள்:
நம் மனதுக்கு விருப்பமான செயல்களில் எப்போதும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் மனதை குதூகலமாக இது வைத்திருக்க உதவும். விளையாட்டு, தன்னார்வ சேவை, வாசித்தல் / தோட்டம் போன்ற நடவடிக்கைகளில் நம்மை ஈடுபடுத்திகொள்ள வேண்டும். இது நம் மனதில் மகிழ்ச்சிக்கான சிந்தனையை மேம்படுத்தும்.
தினசரி உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்வதால் நம் உடல் மட்டுமல்லாமல் மனமும் புத்துணர்ச்சியடையும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது மகிழ்ச்சிக்கான எண்டார் ஃபின்ஸ், ஹார்மோன்கள் நம் உடலில் சுரக்கும் தேவையற்ற பதட்டம் மற்றும் கவலைகள் ஆகியவை நீங்கும்.
நேர்மறை சிந்தனை:
எதிர்மறை சிந்தனைகள் குடியிருந்தால் அதுவே நம் நிம்மதியை கெடுத்துவிடும். எப்போதுமே நேர்மறையான சிந்தனையை கொண்டிருக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளிலும் கூட பதற்றம் அடைந்துவிடாமல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
மற்றவர்களுக்கும் திருப்பி செலுத்தவேண்டும்:
நாம் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் நாம் கொடுக்க வேண்டும். மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிட்டு நாம் இன்பமாக இருந்துவிடலாம் என்று எண்ணக்கூடாது. அதில் கிடைக்கும் மனநிறைவு நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பயணம்:
வெளியே சென்று இயற்கையை ரசிப்பது, பசுமையான இடங்கள் பறவைகள் ஒலி, உங்கள் மனதுக்கு அமைதி தரக்கூடிய இடங்களுக்குச் செல்லுங்கள். நாள் ஒன்று ஒருமுறையாவது வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். தெருவில் சில நிமிடங்கள் நடந்தாலே போதுமானது.
அன்பாக பேசுங்கள்:
உங்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்க எல்லோரிடமும் அன்பாக பேசுங்கள். உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள். காலையில் செல்லும்போது தினமும் ஒரு வருடன் புதிதாகப் பேசினால் சமூக அறிவை உங்களுக்கு பெற உதவும்.
செல்போன் பயன்பாட்டை குறையுங்கள்:
ஒருவரின் அதிகமான நேரத்தை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது செல்போன்தான். தகவல் தொடர்புக்காக மட்டும் பயன்படுத்தி வந்த மொபைல் போன் 24 மணிநேரமும் இப்போது பயன்படுத்துகிறோம். அதிகப்படியான மொபைல் பயன்பாடு உங்களின் மற்ற மகிழ்ச்சியான செயல்பாடுகளை தடுப்பதுடன் மன உளைச்சலை தருகிறது. எனவே மொபைல் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள்.
இறுதியாக மகிழ்ச்சிக்கு வரையறை இல்லை:
கஷ்டத்தை எல்லாம் விலக்கிவிட்டு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். மனதுக்கு எதிராக செயல்படும்போதுதான் பிரச்சனை ஏற்படும். யாருக்காகவும், எதற்காகவும் உங்கள் மனதிற்கு எதிரான ஒரு விஷயத்தை செய்யாதீர்கள். மகிழ்ச்சிக்கு இதுவே போதுமானது. இந்த எளிய வழிகளை பின்பற்றினால் மனது லேசாகும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் எனும் கோப்பை மகிழ்ச்சியால் நிரம்பி வழியும்.
தேவையற்ற கவலைகள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, அன்றாட வாழ்வில் சிறு மாற்றங்கள் மூலம் எப்போதும் மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான தெளிவான வழிகாட்டுதலைப் பெறலாம்.