முயற்சிகள் எடுக்கும்போது தோல்விகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. அதற்காக மனம் வருத்தப்பட்டு செயலற்று நின்று விடுவதில் பலன் ஏதுமில்லை. ஆனால் ஒருவர் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்திக்கும் போது அவரது மனம் துவண்டு போவது சகஜம் தானே? அந்த நிலையை மாற்றி மனதிற்கு உற்சாகத்தை தரும் வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வருத்தத்தை ஒப்புக்கொள்ளுங்கள்:
தோல்வியினால் மனம் துவண்டு வருத்தப்படும் நிலையை முதலில் ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு அதை ஒப்புக்கொள்ள வேண்டும். என்னுடைய தோல்விகள் எனக்கு வருத்தத்தைத் தருகின்றன என்பதை ஒப்புக் கொள்ளும் போது மனதில் இருக்கும் பாதி சுமை குறையும். மாறாக வருத்தத்தை அடக்கவோ அல்லது மறைக்கவோ முயற்சிக்கும் போது அது கடினமான மன அழுத்தத்தை தரும்.
தோல்விகள் இயல்பானவை:
தோல்விகள் வாழ்வின் இயல்பான ஒரு விஷயம். எல்லோருமே வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தில் தோல்வியை அனுபவிக்கிறார்கள். எனவே இதை நினைத்து வருத்தப்படவோ அல்லது மனமுடைந்து போகவோ தேவையில்லை என்கிற உண்மை புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே முதல்முறையாக தோல்வியடையவில்லை அல்லது உங்களுக்கு மட்டுமே தொடர் தோல்விகள் வரவில்லை என்பதை புரிந்து கொண்டால் தோல்விகள் சகஜம் என்கிற மனப்பான்மை உருவாகும்.
சுய இரக்கம்:
மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நண்பரிடம் காட்டும் அதே கருணை மற்றும் புரிதலை உங்களுக்கும் நீங்கள் காட்டுங்கள். ‘என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டேன். அதனால் என்னை நான் அன்புடனும் அக்கறையுடனும் பார்க்கிறேன்’ என்று மனதார உணர வேண்டும். நான் விரைவில் மீண்டும் விடுவேன் என்கிற தைரியமும் தன்னாலே வரும்.
பகுப்பாய்வு செய்தல்:
தோல்விகளுக்கு என்ன காரணம்? அவற்றில் உள்ள பொதுவான அம்சங்கள் என்ன? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். போதுமான தயாரிப்பின்மையா? திறமையின்மை அல்லது பிற காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை அலசி ஆராய வேண்டும். அப்போதுதான் எந்த இடத்தில் தவறு நேர்ந்திருக்கிறது என்பது புரிய வரும். உதாரணமாக தேர்வில் மிகக் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவன், "நான் தேர்வில் தோற்று விட்டேன்” என்று எண்ணுவதற்கு பதிலாக, "அந்தக் குறிப்பிட்ட பாடத்தின் எந்தப் பகுதியில் நான் மிகக் குறைவான மதிப்பெண் பெற்று இருக்கிறேன்?” என்று ஆய்வு செய்யும் போது அவனுடைய தவறு புரியவரும்.
புதிய யுக்திகள்:
பழைய பாணியை பின்பற்றி தொடர்ந்து ஒரு செயலை செய்யும் போது அது அவ்வளவு சிறப்பாக அமையாது. எனவே புதிய யுக்திகளை எப்படிப் புகுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். அணுகுமுறையை மாற்றினாலே பல சமயங்களில் வெற்றி கிடைத்துவிடும். வெற்றி பெற வேண்டும் என்கிற முடிவில் மட்டும் கவனம் செலுத்தாமல் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல பலனைத் தரும்.
இந்த தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. திறன்களும் புத்திசாலித்தனமும் நிலையானவை அல்ல என்ற கருத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
உடல், மன ஆரோக்கியம்:
தோல்விகள் தந்த மன அழுத்தத்தினால் உடல் ஆரோக்கியமும் சீர் கெட்டிருக்கும். போதுமான தூக்கமும் சத்தான உணவும் இன்றி உடலும் மனதைப் போலவே தளர்ந்து இருக்கும். எனவே முதலில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு, சத்தான உணவுகளையும் உண்டாலே உடல் ஆரோக்கியமாக மாறும். பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். தளர்வு நுட்பங்கள், சுவாசப் பயிற்சிகள் போன்றவையும் மனதை லேசாக்கும். எடுக்கும் காரியத்தையும் திறம்பட செய்து முடிக்கும் மனநிலை உருவாகும் .
இவற்றைத் தொடர்ந்து செய்து வரும்போது விரைவில் தோல்விகள் மறைந்து வெற்றிகள் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும்.