இந்த வசனத்தை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்...
அதாவது சில பேர் மற்றவர்களை இழிவாகக் கருதி இந்த வசனத்தை கூறுவார்கள்.
ஒருவர் தன் நிலையிலிருந்து உயர்வை அடைவதற்காக முயற்சி செய்யும் போது அவரை இவ்வாறு ஏளனத்தோடு சொல்வார்கள்.
அதாவது நீ என்னதான் முயற்சி செய்தாலும் உன்னால் எனக்கு சமமாக வர முடியுமா?? என்று கேலி செய்வார்கள்.
உயர பறந்ததாலும் குருவி பருந்தாகமுடியாது என்று கூறும் இவர்கள், இதை ஏன் நினைக்கவில்லை, பருந்தால் ஒரு நாள் குருவியாக இருக்க முடியுமா? என்று.
ஒருவர் உயர்வுக்காக முயற்சி செய்யும் போது நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் அல்லது தெரிந்த ஆலோசனையை கூறலாம். இல்லையென்றால் எதுவும் சொல்லாமல் இருக்கலாம். அதை விட்டுவிட்டு ஏளனமாக ஏன் பேச வேண்டும்????
உதாரணத்திற்கு ஒரு கதை கூறுகிறேன்:
கண் பார்வை தெரியாத ஒருவர் இருந்தார். அவருக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. ஆனால் அவர் அழகாக அடிக்கணக்கு போட்டு எல்லா இடத்திற்கும் சென்று வேலைகளை செவ்வென செய்து வந்தார். பக்கத்து வீட்டிலிருக்கும் இன்னொருவர் இவரிடம் இத்தனை வருடமாக நீயும் கழியை வைத்து கணக்கு போட்டு செல்கிறாய், என்னதான் அடிக்கணக்கில் சென்றாலும் உன்னால் என்னைப் போல் டக் டக் என்று செல்ல முடியுமா? உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா??கண் பார்வை இல்லாத நீ என்னதான் பண்ணினாலும் என்னை மாதிரி ஆக முடியுமா? என்று இவரை ஏளனம் செய்தார்.
இவர் அவரிடம் , ஐயா உங்களால் பார்க்க முடியும், என்னால் பார்க்க இயலாது. ஆகவே என்னதான் நான் கணக்கு போட்டு செய்தாலும் உங்களுக்கு சமமாக முடியாது, ஒத்துக் கொள்கிறேன், ஆனால் ஒரு வேண்டுகோள், அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
அந்த நபர், என்ன செய்ய வேண்டும்? சொல் என்றார்.
கண் தெரியாதவர், ஐயா உங்களுக்குதான் என்னைவிட எந்த சாமான் எங்கிருக்கிறது, சாலை எந்த பக்கம்? என்பதெல்லாம் அத்துபடி இல்லையா? என்றார்.
அதற்கு அவர், ஆமாம்!! என்றார்.
சரி ஐயா, நீங்கள் உங்கள் கண்களை பத்து நிமிடத்திற்கு கட்டிக் கொண்டு ரோட்டிற்கு சென்று விட்டு மறுபடியும் வீட்டிற்குள் வாருங்கள் என்றார்.
அவரும், கண் தெரியாத நீயே செல்லும் போது தினமும் பார்த்து பார்த்து மூளையில் மனப்பாடமாகி இருக்கிற என்னால் ஏன் முடியாது என்று கூறி விட்டு தன் மகனை அழைத்து போட்டியை பற்றி கூறி விட்டு கண்களை கட்ட சொன்னார்.
கண்களை கட்டியவுடன் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு முறை சுவரில் சென்று தலையை முட்டிக் கொண்டார். பிறகு முடியாமல் காலம் முடிவதற்குள் கண்களின் கட்டை அவிழ்க்க சொன்னார்.
பிறகு தான் அவருக்கு புரிந்தது அவரின் தவறு.
கண் பார்வை தெரியாதவரிடம் சென்று , என்னை மன்னித்து விடு, நீ என் நிலைமைக்கு வர முடியாது என்று நான் கூறியது தவறு, நீ பருந்தாக மாற முடியாவிட்டாலும் உன்னால் உயர பறக்க முடியும், ஆனால் நான் உயர உயரப் பறந்தாலும் உன்னைப் போல் நிச்சயமாக ஆக முடியாது என்று கூறினார்.
கீழே இருப்பவர்கள் மேலே வருவதில் அத்தனைப் பிரச்சினை இருக்காது. அனால் மேலே இருப்பவர்கள் கீழே இறங்கி விட்டால் மறுபடியும் மேலே ஏற முடியாது.
ஆகவே, தயவு செய்து ஒருவர் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலையை அடைவதற்கு முயற்சி செய்யும் போது அவரை கீழ்நோக்கி பேசாதீர்கள்.