
ஒவ்வொருவரும் அவர்களுக்கு எது சரியென்றுபடுகிறதோ அதைச் செய்கிறார்கள். ஒருவர் பார்வையில் சரியென்றுபடும் ஒரு விஷயம் மற்றவருக்குத் தவறாகப்படுகிறது. இதற்குக் காரணம் அவரவர் வாழ்க்கைச் சூழ்நிலை. தன் வாழ்க்கைச் சூழலை வைத்தே ஒருவர் ஒருவிஷயத்தை இப்படிச் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
தற்காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளை மனதில் வைத்து அதை அடைவதற்காக இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். குறிக்கோளை அடைவது ஒன்றே அவர்களுடைய இலக்காக உள்ளது. அப்படியிருக்கும் போது அந்த விஷயத்தில் பிறர் தலையிட்டால் அதை அவர்கள் விரும்புவதில்லை. இதுவே அடிப்படை விதியாகும்.
பிறர் செய்யும் ஒரு விஷயம் நமக்குத் தவறாகப் படுவதைப்போல நாம் சரியென்று நினைத்துச் செய்யும் விஷயம் பிறருக்குத் தவறாகப்படலாம். அதைப் பிறர் நமக்குச் சுட்டிக்காட்டும்போது அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அல்லவா? அதுபோலத்தான் நாம் சுட்டிக்காட்டும் விஷயங்களையும் பிறர் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த அடிப்படை விதியை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதை சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட்டால் பலவித மனஸ்தாபங்களைத் தவிர்த்துக்கொண்டு நிம்மதியாக வாழலாம். பிறருடன் நட்பையும் நாம் தொடரலாம்.
எனது நண்பர் ஒருவர் தன் முதல் மகனை பல லட்சங்கள் செலவு செய்து அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பி வைத்தார். தனது மற்றொரு மகனையும் அமெரிக்காவிற்கு அனுப்பப் போகிறேன் என்றபோது நான் அவரிடம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் “இரண்டாவது மகனை உன்னோடு வைத்துக்கொள். உன் எதிர்காலத்திற்கு நல்லது. இரண்டு மகன்களில் ஒருவன் உன்னோடு இருப்பது நல்லதல்லவா?” என்று கூற அவர் இதை ஏற்காததோடு மட்டுமின்றி என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார். அவர் செய்வது அவருக்குச் சரியென்றுபடுகிறது. அது எனக்குத் தவறாகப்படுகிறது. இரண்டு பேர்களின் செயல்களிலும் தவறில்லை. அவரவர் நியாயம் அவரவர்க்கு.
தேவையின்றி யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். அதனால் உங்களுக்கும் பிரயோஜனமில்லை. பிறருக்கும் பிரயோஜனமில்லை. யாராவது உங்களிடம் ஒரு விஷயத்தைக் கூறி அதைப்பற்றி கருத்து கேட்டால் மட்டுமே அதைப் பற்றிப் பேசுங்கள். நீங்களாகவே முந்திக்கொண்டு இவ்விஷயங்களில் செயல்படாதீர்கள்.
தற்காலத்தில் பள்ளிப்பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் எதிர்காலம் குறித்துத் தெளிவாக இருக்கிறார்கள். யாருடைய அறிவுரையும் யாருக்கும் தேவைப்படாத காலமிது.
கேட்பதற்கு விரை. பேசுவதற்கு நிதானி. கோபத்திற்கு சுணங்கு என்றொரு பழமொழி உண்டு.
யாராவது உங்களுக்கு அறிவுரை கூறினால் அவர் மீது கோபப்படாமல் அதை கேட்டுக்கொள்ளுங்கள். அறிவுரையை கேட்பதால் உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. அதை பின்பற்றுவதும் பின்பற்றாமல் போவதும் உங்கள் விருப்பம். அறிவுரையை கேட்டுக் கொள்ளுங்கள். அறிவுரை கூறிய நபர் மீது கோபப்படாமல் அவரிடம் நிதானமாக பேசி “தங்கள் அறிவுரைகளுக்கு நன்றி பின்பற்ற முயற்சிக்கிறேன்” என்று கூறி விடை பெறுங்கள். கோபப்பட்டு அவசரப்பட்டு உறவுகளை துண்டிப்பதால் ஒரு பலனும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எல்லோருடைய கொள்கைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எல்லோருடைய வாழ்க்கைச் சூழலும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பத் தங்கள் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். எல்லோரும் ஒரே கொள்கைளைப் பின்பற்ற முடியாது அல்லவா? அவரவர் வழி அவரவர்க்கு சரி இதுவே உலக நியதி என்பதை புரிந்துகொள்ளுங்கள்.