
கடின உழைப்பிற்கு மாற்று என்று எதுவுமே இல்லை. உழைக்காமல் இந்த உலகில் எந்த காரியத்திலும் வெற்றி அடைய முடியாது என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் ஏனோ அதை உணரும் பக்குவம் பலருக்கு இருப்பதில்லை. பெரும்பான்மையானவர்கள் மந்திரத்தில் மாங்காய் விழுந்து விடாதா என்று பார்ப்பவர்கள்தான்.
நாம் செய்யும் தொழிலின் மீது நமக்கு மிகுந்த ஈடுபாடு ஏன் காதல் என்று சொல்லும் அளவிற்கு ஈடுபாடு இருக்கவேண்டும். அந்தக் காதல் இல்லை என்றால் நாம் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் ஒரு தோல்வி அடைந்தவராகவே இருப்போம்.
ஒரு பிரபல எழுத்தாளரின் தாயார் அவரிடம் இவ்வாறு சொன்னாராம். "நீ எந்தத் துறையில் வேண்டுமானால் நுழைந்துகொள். ஏன் அது தெருவில் குப்பை கூட்டும் தொழிலாகக்கூட இருக்கலாம். ஆனால் அதிலும் நீதான் மிகச் சிறந்தவன் என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற வார்த்தைகளில் பொதிந்துள்ள அர்த்தம்தான் எவ்வளவு ஆழமானது. நடிப்பு, எழுத்து போன்ற துறைகளில் உள்ளவர்கள் அதில் ஓர் அதீத ஈடுபாடு இல்லாமல் நிச்சயமாக ஒளிர முடியாது.
காரணம் இரண்டிலுமே தனி மனிதர்களின் அவரது சாதனைகளும் திறமைகளுமே வெற்றிக்கு வழி வகுக்கின்றன. அதனால்தான் இந்தத் துறைகளில் தனிப்பட்ட விருப்பம் ஆர்வம் இல்லாதவர்கள் நுழையவே முடிவதில்லை.
ஒருவர் ஈடுபடுவதற்கு முன் தனக்கு அந்தத்துறையில் எந்தளவு ஈடுபாடு உள்ளது என்பதைப் பார்த்துவிட்டு பின் தன்னைப் பற்றி சுய விமர்சனம் செய்து கொண்டு தன்னால் அந்தத் துறையில் பிரகாசிக்க முடியுமா என்று முடிவு செய்த பின்பு அவரவருக்குத் தகுந்த துறையைத் தேர்ந்தெடுத்தால் பிரச்னைகள் வராது.
விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து அதில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும்போது கடிகாரத்தில் நேரம் பார்க்கத் தோன்றாது. அந்த வேலை அவருக்கு சுமையாக இல்லாமல் சுகமான அனுபவமாகவே இருக்கும்.
சிலர் சிறு வயதில் விளையாட்டுத்தனமாக இருந்துவிட்டு பின் திருந்தி வாழ்கையில் முன்னேற விரும்புவார்கள். அவர்களிடம் பார்த்தோமானால் ஒரு சராசரியான நபரிடம் இருப்பதைவிட பல மடங்கு அதிகமான உழைப்பும் தன்னிம்பிக்கை ஜெயிக்கவேண்டும் என்ற வெறி எல்லாமே இருக்கும்.
மற்றவர்களுக்கு இருப்பதைவிட வெற்றிபெற தேவையான இந்தக் குணாதிசயங்கள் அனைத்தும் பல மடங்குகள் அதிகம் இருக்கும். காரணம் ஏற்கனவே இவர்கள் தோல்வியின் சுமையைச் சந்தித்தவர்கள் அந்த வேதனையை அனுபவித்தவர்கள், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பதுபோல் தோல்வியையும் அது தரும் மன உளைச்சலையும் அந்த ரணத்தின் வேதனையையும் அனுபவித்தவர்கள்.
எனவே அவர்களிடம் எப்பாடுபட்டாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஆக்ரோஷம் கலந்த ஒரு வெறி இருக்கும். அப்படி இருப்பவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கத் தயங்க மாட்டார்கள். உழைப்பதற்கு தயாராக உள்ளவர்கள் வீட்டின் வாயிலினுள் நுழைய வெற்றி மகள் தயாராக இருப்பாள்.