
ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கும். சிலருக்கு குடும்பத்தினர் முகத்தில் புன்னகை கண்டால் மகிழ்ச்சி. சிலருக்கு மற்றவர்கள் தன்னை வணங்கினால் மகிழ்ச்சி. சிலருக்கு வசதிகளைத்தேடி அடைவது மகிழ்ச்சி. சிலருக்கு விருந்து சாப்பிட்டால் மகிழ்ச்சி. சிலருக்கு பத்து ரூபாய் வருமானம் கிடைப்பது கூட மகிழ்ச்சி. ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி கிடைப்பதற்கான காரணங்கள் மாறுபடும். ஆனால் எல்லோரும் அடைய நினைப்பது மகிழ்ச்சியைத்தான்!
தேர்வு செய்தல் வேண்டும்
உங்கள் வாழ்வின் மகிழ்ச்சி வேறு யாரோ சிலரால் கிடைப்பது இல்லை.அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. எத்தனையோ உணவுகள் இருந்தாலும் நமக்கு பிடித்தமான சுவையான உணவுகளை மட்டுமே தேடிப்பிடித்து சாப்பிடுகிறோம். உணவு போலவே உணர்விலும் சரியாக தேர்வு செய்ய வேண்டும். நம்மை சுற்றி என்ன நிகழ்ந்தாலும் மகிழ்ச்சியை மட்டுமே மனதுக்குள் அனுப்புவேன் என்று உறுதி எடுக்க வேண்டும்.
யாசகமாக கேட்க வேண்டாம்
சோகத்தை தேடித்தேடி தங்கள் மீது போர்த்திக் கொள்வது ஒருவித நோய். வாழ்க்கை முழுக்க மகிழ்ச்சியாக இருந்தவர்கள் யாரும் இல்லை. வாழ்க்கை முழுக்க சோகமாக இருந்தவர்களும் யாரும் இல்லை. இப்படிப்பட்ட சூழலிலும் மகிழ்ச்சியாக இருக்க ஒரே ஒரு காரணத்தை கண்டுபிடித்துவிட்டால் போதும்.அடுத்தவர்களிடம் எதையும் யாசகம் கேட்க நாம் ரொம்பவே கூச்சப்படுவோம். நமக்கான மகிழ்ச்சியை யாரிடமும் யாசகமாக கேட்கவேண்டாம்.
இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
எக்காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க பழகும் மனிதர்களுக்கு மகிழ்ச்சி தேடவேண்டிய அவசியமே கிடையாது. எது நடந்தாலும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனம் இருந்தால் மன உளைச்சல் ஏற்படாது. நல்லது நடந்தால் மகிழ்ச்சி கிடைக்கும். தவறாக நடந்தால் திருத்திக்கொள்வதற்கான வழியும் கிடைக்கும்.
ஒவ்வொருவரின் பயணமும் மகிழ்ச்சியை தேடுவதாகவே இருக்கிறது. தேர்வில் நல்ல மார்க் வாங்கினால், நல்ல கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தால், பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால், வசதியான வாழ்க்கை துணை கிடைத்தால், இப்படி மகிழ்ச்சி கிடைப்பதற்கான காரணங்களை பலரும் வாழ்வில் அடுக்குவார்கள். ஏதோ ஒரு பொருளோ, யாரோ ஒரு நபரோதான் தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
தள்ளிப் போடாதீர்கள்
கிரிக்கெட் விளையாட ஆசையா? வயதைப் பற்றிய கூச்சம் இல்லாமல் முயற்சி செய்து விடுங்கள். ஓவியம் வரையத் தோன்றுகிறதா! இன்றே வரையப்பாருங்கள் எழுத வேண்டும் என்று ஆர்வமா?அதையும் செய்து பாருங்கள்.
வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஓய்வு பெற்ற பிறகோ மட்டுமே சில விஷயங்களை செய்து மகிழமுடியும் என பலர் நம்புகிறார்கள். ஆனால் மகிழ்ச்சி தரும் எந்த செயலையும் தள்ளி போடக்கூடாது. நமக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும் இந்த முடிவு சிறப்பாக இருந்தால் மகிழ்ச்சி நிரந்தரமாகும்.
அமைதியாக நிறைவேற்றல்
மகிழ்ச்சி என்பது பறந்து செல்லும் ஒரு பட்டாம்பூச்சி போன்றது. நீங்கள் அதை பிடிப்பதற்கு ஓடினால் அது விலகிப் பறந்துகொண்டே இருக்கும் அமைதியாக அதை வரவேற்றால் உங்கள் தோள்களில் வந்து அமர்ந்து கொள்ளும்.
மகிழ்ச்சி என்பது தேடி அடைய வேண்டிய இலக்கு அல்ல. அந்தத் தேடல் பயணமே மகிழ்ச்சியானதுதான். இடைப்பட்ட காலம் முழுக்க மகிழ்ச்சியே இருக்கிறது. நாம்தான் அதை அறிவதில்லை.