மாசம் 10 லட்சம் சம்பளம் வாங்குறவன் கூட நிம்மதியா இல்லையாம்! அப்போ நாம? - அதிர்ச்சி ரிப்போர்ட்!
சமீபகாலமாக நம்மில் பலருக்கும் இருக்கிற ஒரு பொதுவான, "வயசு மட்டும் ஏறிக்கிட்டே போகுது, ஆனா வாழ்க்கை இன்னும் ஒரு இடத்துல கூட செட்டில் ஆகாத மாதிரியே இருக்கு. எதை நோக்கி ஓடுறோம்னே தெரியலையே?" என்ற ஒரு விதமான விரக்திதான். காலையில் எழுந்தால் அதே வேலை, அதே கஷ்டம், இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்ற பயம் உங்களை ஆட்டிப்படைக்கிறதா?
கவலைப்படாதீர்கள், உங்களுக்கு மட்டுமில்லை அனைவருக்குமே இத்தகைய பயம் இருக்கிறது. இந்த உணர்வுக்குப் பெயர்தான் 'எக்ஸிஸ்டென்ஷியல் கிரைசிஸ்' (Existential Crisis). இந்த மனநிலை குறித்தும், இதிலிருந்து மிக எளிமையாக வெளியேறுவது எப்படி என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன் இந்த வெறுமை?
உண்மையைச் சொல்லப்போனால், நம் தாத்தா பாட்டி வாழ்ந்த 1970-களை விட, நாம் வாழும் இந்த காலம் வசதிகளில் எவ்வளவோ சிறந்தது. அன்று கையில் காசு இருந்தாலும் அரிசி வாங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று? அடிப்படைத் தேவைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனாலும், ஏன் நமக்கு நிம்மதி இல்லை? காரணம் - ஒப்பீடு.
பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கிட்டான், சொந்தக்காரன் வீடு கட்டிட்டான், இன்ஸ்டாகிராமில் நண்பன் வெளிநாடு போய் போட்டோ போடுறான் - இதையெல்லாம் பார்த்து பார்த்து, "நம்ம வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கு?" என்று நம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம். இது ஒரு போட்டி உலகம். இங்கே 10 ரூபாய் சம்பாதிக்கிறவனுக்கும் பயம் இருக்கு, மாதம் 10 லட்சம் சம்பளம் வாங்குறவனுக்கும் "நாளைக்கு இந்த வேலை இருக்குமா?" என்ற பயம் இருக்கும். ஆக, பிரச்சனை பணத்தில் இல்லை, நம் மனநிலையில் தான் இருக்கிறது.
எதிர்கால பயம் Vs AI தொழில்நுட்பம்:
நிறைய பேருக்கு இருக்கும் இன்னொரு பெரிய பயம், "எதிர்காலத்தில் என் வேலை இருக்குமா? AI வந்து என் வேலையைப் பறித்துவிடுமா?" என்பதுதான். இதற்கு எளிதாக பதில் சொல்ல வேண்டும் என்றால், வாஷிங் மெஷின் வந்தபோது, துணி துவைக்கும் நேரம் மிச்சமானது. மிக்ஸி வந்தபோது மாவாட்டும் வேலை குறைந்தது. அதேபோலத்தான் தொழில்நுட்ப மாற்றங்களும்.
AI வந்தாலும் அதை இயக்க ஒரு மனிதன் தேவைப்படுவான். ஒரு இன்ஜினியரோ, டாக்டரோ அல்லது ஒரு ப்ரொபசரோ யாராக இருந்தாலும், புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவனுக்கு அழிவே இல்லை. நாம் சோம்பேறியாக இருந்துகொண்டு, பழைய காலத்தையே நினைத்து பயந்து கொண்டிருந்தால் தான் ஆபத்து.
பஜ்ஜி கடை தத்துவம்!
நீங்கள் ஒரு பஜ்ஜி கடை போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். "இன்னைக்கு எவ்வளவு கல்லா கட்டும்?" என்று யோசிப்பதை விட, "என் கடைக்கு வருபவர்களுக்கு எவ்வளவு ருசியான, தரமான பஜ்ஜியை என்னால் கொடுக்க முடியும்?" என்று யோசித்துப் பாருங்கள். எப்போதெல்லாம் நீங்கள் மதிப்பை கொடுக்கிறீர்களோ, அப்போதெல்லாம் உலகம் உங்களைத் தேடி வரும். அது பஜ்ஜி கடையோ, சாஃப்ட்வேர் கம்பெனியோ - தத்துவம் ஒன்றுதான்.
கடன் வாங்கி கல்யாணம் செய்வது, EMI கட்டி கார் வாங்குவது என சமூகத்திற்காக வாழ்வதை நிறுத்துங்கள். யார் என்ன சொன்னாலும், என் நிம்மதி என் கையில் என்று இருக்கவேண்டும்.
வாழ்க்கை என்பது பயந்து பயந்து வாழ்வதற்கல்ல; ரசித்து வாழ்வதற்கு. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால், இன்று நம்மால் முடிந்த ஒரு நல்ல விஷயத்தை, முழு ஈடுபாட்டுடன் செய்தால், வாழ்க்கை தானாகவே எளிதாகும்.
நாம் எல்லோருமே ஒருவித ஓட்டத்தில் இருக்கிறோம். அந்த ஓட்டம் நமக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவனை முந்துவதற்காக இருக்கக்கூடாது. எனவே, பயத்தை தூக்கிப் போட்டுவிட்டு, உங்கள் வேலையை முழு மனதோடு செய்யத் தொடங்குங்கள். நீங்கள் கொடுக்கும் உழைப்புக்கான பலனை இந்த உலகம் நிச்சயம் திருப்பிக் கொடுக்கும்.
சிம்பிளா சொல்லணும்னா, சந்தோஷமா இருங்க, லைஃப் ரொம்ப ஈஸி.
