வெற்றியை எதிர்பார்க்கின்ற மனதுக்கு தோல்வி என்பது ஒரு விரும்பத்தகாத நிகழ்வே! ஆனாலும் தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றியே என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்து நடந்து கற்றுக்கொண்ட பிறகு தான் ஒரு குழந்தையால் தைரியமாக தன்னம்பிக்கையுடன் நடக்க முடிகிறது . அதைப்போல் தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு, தோல்வி என்பது ஒரு ஆரம்ப நிலை தடுமாற்றமே தவிர, அவர் மீண்டும் வெற்றி பெற விடாமல் தடுக்கின்ற தடை அல்ல. தோல்வி என்பது தற்காலிகமானது என்று உணராமல், அதுவே நிரந்தரமானது என்று நினைத்து வருந்துவதும், தொடர்ந்து வெற்றிபெற முயற்சிக்காமல் முடங்கி விடுவதும் தவறு!
நாம் பயணம் செய்யும் சாலைகளில், வேக தடைகளை வைப்பது உங்கள் பயணத்தை தாமதபடுத்த அல்ல! நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக சென்று சேருவதற்காகவே உருவாக்கியது என்று எடுத்து கொள்ள வேண்டும்.
ஆகவே, தோல்வியால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி தாமதமானாலும், தோல்வியின் மூலமாக, ஒரு முழுமையான வெற்றிக்கு உங்களுடைய பாதையை அமைத்துக்கொள்ள முடிகிறது.
தோல்விகளில் துவண்டு போனால் தொலைந்து போவோம்! தோல்வி குறித்து தெளிவாக சிந்தித்து செயல்பட்டால் நாம் தேடுவதை கண்டிப்பாக அடைய முடியும்.! நமது உண்மையான பலத்தை அறிந்து கொள்ள, நமது பலவீனத்தை புரிந்து கொள்ள, தோல்வி துணை செய்கிறது.!
முயற்சி செய்து கொண்டே இருப்பவருக்கு… தோல்வி ஒரு முடிவு அல்ல. மறுபடியும் முயற்சி செய்யாமல் நிறுத்தி விடுவது தான் தோல்வி.!
வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்தும் , சளைக்காமல் வெற்றியை தொட்ட வரலாறுகள் நிறைய உண்டு.
ஃபோர்டு மோட்டார் என்கிற பிரபல கார் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திய ஹென்றி ஃபோர்டு, அதற்கு முன்பு தொழிலில் ஏற்பட்ட தோல்விகளால் திவாலானவர் என்கிறார்கள்.
தாமஸ் எடிசன் மின்சார விளக்கு - லைட் பல்பை உருவாக்கும் முன் ஆயிரக்கணக்கான பொருட்களை சோதித்து தோல்வி கண்டவர் என்று நீங்கள் படித்து அறிந்து இருக்கலாம்.
'ஹாரி பாட்டர்' என்கிற புகழ் பெற்ற புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பு, அதை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங், பல இடங்களில் நிறைய நிராகரிப்புகளை சந்தித்தவர். ஆனால் அவரது தொடர்ந்த முயற்சி தான் உலகத்துக்கு அவரை ஒரு புகழ் பெற்ற எழுத்தாளராக அடையாளம் காட்டியது..
நமது நாட்டிலும் அம்பானி அவர்கள் ஏழ்மையில் இருந்து, கஷ்டப்பட்டு தொழில் செய்து அதற்கு பின்பு தான் மிக பெரிய தொழில் அதிபர் ஆனார். இன்று அவருடைய வாரிசுகள் தான் இந்தியாவில் ,ஏன் உலக அளவில் அதிக வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
நமது பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்களும் ஏழ்மை நிலைமையில் இருந்தவர். பேப்பர் போடும் பையனாக இருந்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை படித்துப்பார்த்தால், அவர் எத்தனை தடைகளை , தோல்விகளை தாண்டி வந்து அவரது இலட்சியத்தை அடைந்தார் என்பது புரியும். அதனால் தான் அவர் நாடு போற்றும் விஞ்ஞானி ஆகி, ஜனாதிபதி ஆகவும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.!
"அனைவரும் தங்கள் வாழ்வில் துன்பங்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும். ஆனால் எல்லா துன்பங்களுக்கும் ‘காலம்’, ‘மவுனம்’ என்று இரண்டு மருந்துகள் இருக்கின்றன." என்று அவர் சொல்லி இருக்கிறார்..
இன்று உலகம் முழுவதும் போற்றும் இந்திய சாதனையாக சொல்லப்படுகின்ற சந்திராயன் 3... எப்படி சாத்தியமானது.?! இதற்கு முன்பு நடந்த சந்திராயன் 2 தோல்வியில் இருந்து நமது விஞ்ஞானிகள் எப்படி மீண்டார்கள்.!?
இது போல எழுத்து, படிப்பு, மருத்துவம், திரைப்படம், விளையாட்டு, விஞ்ஞானம் என்று எல்லா துறைகளிலும் சாதித்தவர்கள் இந்த உலகம் முழுவதிலும் உண்டு. ஆனால் அவர்கள் தோல்வியை அனைவரும் சந்திக்காமல் வெற்றியை அடைந்தவர்கள் என்று சொல்ல முடியாது.
நாம் பலருடைய வெற்றிக்கதைகளை கேட்கிறோம். படிக்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் அந்த வெற்றியை அடைய அவர்கள் கொடுத்த விலை என்னவென்று நமக்கு தெரிவதில்லை. அவர்களுடைய இலக்கை அடைய, அவர்களுக்கு விடாமுயற்சி, தோல்வி கண்டு துவளாத நெஞ்சம் தேவைப்பட்டிருக்கிறது. உணவு, உறக்கம் குறைத்து... பல துன்பங்களை தாண்டி, மன உறுதியோடு போராடிதான் அந்த வெற்றியை அவர்கள் பெற்று இருப்பார்கள்.
இவர்களை போல பல தன்னம்பிக்கை மற்றும் வெற்றியாளர்களின் வாழ்க்கையை பற்றி படித்து தெரிந்து கொண்டு, அவர்களின் மன உறுதியை உதாரணமாக எடுத்துக்கொண்டு… தோல்வி வந்தால் துவண்டு போகாமல்… தொடர்ந்து முயற்சி செய்தால், நாம் வெற்றியை அடைவது நிச்சயமே !