
சுப்த வஜ்ராசனம் ஸ்லீப்பிங் தண்டர்போல்ட் போஸ் (Sleeping Thunderbolt Pose) என்றும் அழைக்கப்படுகிறது.
செய்முறை :
யோகா பாயில் உங்கள் குதிகால் மீது உட்கார்ந்து, உங்கள் முழங்கால்களை ஒன்றாக வைக்கவும். உங்கள் முதுகெலும்பை நேராகவும், தோள்களை தளர்வாகவும் வைத்து கொண்டு, உங்கள் உடற்பகுதியை மெதுவாக இடுப்பிலிருந்து பின்னோக்கி வளைத்து, இடுப்பு முதல் தலை வரை தரையில் இருக்கும் படி பின்புறமாக (படத்தில் உள்ளபடி) படுத்துக்கொள்ளவும். இந்த நிலையில் இருக்கும் போது உங்கள் முழங்கால்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் ஒன்றாக இருக்கும் படி வைக்கவும். கைகளை தலைக்கும் பின்னால் கொண்டு சென்று வலது கையால் இடது கை முட்டியையும், இடது கையால் வலது கை முட்டியை பிடித்து கொள்ளவும்.
இந்நிலையில் கண்களை மூடிக்கொண்டு உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். மெதுவாக, ஆழமான சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வசதி மற்றும் வலிமையைப் பொறுத்து 30 வினாடிகள் முதல் 5 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் சுப்த வஜ்ராசனத்தில் இருக்கலாம். தொடக்கநிலையாளர்கள் 30 வினாடிகளில் தொடங்கி படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம். பின்னர் மெதுவாக எழுந்து ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும்.
நன்மைகள் :
* சுப்த வஜ்ராசனம் செய்வதன் மூலம் முதுகெலும்பு நரம்புகள், தோள்கள் மற்றும் முதுகின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க முடியும்.
* கடுமையான முதுகுவலி அல்லது பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் பெற இந்த ஆசனத்தை செய்யலாம்.
* இந்த ஆசனம் வயிற்று உறுப்புகளை மசாஜ் செய்து செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை அல்லது வாயு தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது.
* ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நுரையீரல் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆசனம் ஒரு வரப்பிரசாதமாகும்.
* இந்த ஆசனம் செய்யும் போது இடுப்புப் பகுதி நன்கு வேலை செய்வதால், ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான எந்தக் கோளாறுகளும் வராமல் தடுக்கிறது.
எச்சரிக்கை :
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனை உள்ளவர்கள் சுப்த வஜ்ராசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதைச் செய்யும்போது கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் பயிற்சி பெற்ற யோகா வல்லூநர்களின் ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும்.
* முழங்கால்கள், இடுப்பு, பாதங்கள், கணுக்கால், கால்கள், கீழ் முதுகு, முழங்கைகள், கைகள், தோள்கள், கழுத்து, முதுகெலும்பு அல்லது விலா எலும்புக் கூண்டில் காயம் உள்ளவர்கள் அல்லது அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* கர்ப்பிணிகள் மற்றும் மாதவிடாய் காலங்களில் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
* மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும். பலவீனமான முழங்கால்கள் அல்லது கீல்வாதம், பலவீனமான மூட்டுகள் அல்லது தசைகள் அல்லது பொதுவான உடல் பலவீனம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
* உயர் இரத்த அழுத்தம் அல்லது தலைச்சுற்றல் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
* சமீபத்தில் ஆஸ்துமா தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
* உணவு சாப்பிட்டு 4 முதல் 6 மணி நேரம் ஆன பின்னர் தான் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
* இந்த ஆசனத்தை அதிகாலை அல்லது மாலையில் செய்தால் நல்ல பலன்களை பெறலாம்.
* முதல் முறையாக இந்த ஆசனத்தை முயற்சிக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக யோகா பயிற்சியாளர் அல்லது நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் தான் செய்ய வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.