
இந்தியாவா? ஹிந்தியவா?
ஹிந்தியோ சம்ஸ்கிருதமோ இல்லை, ஏதேனும் டிம்பக்டூவோ.. ஒரு மொழி என்கிற அளவில் தமிழர்கள் தாமே விரும்பிக் கற்றுக்கொள்வதை யாரும் தடுக்கவில்லை. அழகான குழந்தைக்கு விளக்கெண்ணெய் புகட்டுகிறமாதிரி வலிந்து தந்தால் வெறுப்போடு காறி உமிழத்தான் செய்யும் தமிழகம்.
தமிழ்நாடு போன்ற முழு வளர்ச்சியடைந்த முன்மாதிரியான ஒரு மாநிலத்துக்கு மூன்றாம் மொழி என்கிற போர்வையில் ஹிந்தி எதற்கு?
ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்புக்கள் கூறுகட்டிக் கிடைக்கும் என்றால் ஹிந்தி 'படித்த' அல்லது எதுவும் படிக்கவே வாய்ப்பில்லாத வடமாநிலத் தொழிலாளர்கள் வரிசைகட்டி இங்கே ஏன் வரவேண்டும்?
அமரர் கல்கி அவர்கள் 07.05.1950 நாளைய கல்கி இதழில் 'தமிழ்மகன்' என்னும் புனைபெயரில் 'ஹிந்தி ஏகாதிபத்தியம்' என்ற தலைப்பிட்டே எழுதிய கட்டுரை இந்த 'அனல்' தகிக்கும் நேரத்தில் சிந்திக்க மிகவும் பயனுள்ளது. - சுப்ர.பாலன்
"மெள்ள மெள்ள வந்தானாம் - மிளகு என்றானாம் சுக்கு என்றானாம்" என்பதாக ஒரு பழமொழி உண்டு. "இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கினான்" என்பதாக இன்னொரு பழமொழியும் கேட்டிருக்கிறோம்.
ஹிந்தி பாஷையைத் தேசிய பாஷையாக்கும் விஷயம் ஏறக்குறைய அம்மாதிரி நிலைமைக்கு இப்போது வந்திருக்கிறது.
அதிகார ஆசையும் ஏகாதிபத்திய வெறியும் ஒரு தேசத்தார் - ஒரு இனத்தாருக்குத்தான் உண்டு என்பது இல்லை. உலகமெங்கும் சர்வ வியாபகமாக நிறைந்திருக்கின்றன. அந்த ஆசையும் வெறியும் இப்போது வடநாட்டிலுள்ள ஹிந்தி பாஷைப் பண்டிதர்களையும் அரசியல் வாதிகளையும் பிடித்து ஆட்டுகின்றன.
ஹிந்தி பாஷை இந்தியாவின் தேசீய பாஷையாவதோடு அவர்கள் திருப்தியடையத் தயாராயில்லை.
இந்தியாவில் ஹிந்தி ஏகாதிபத்தியத்தையே நிலை நாட்டிவிடப் பிரியப்படுகிறார்கள். மற்ற பாஷைகளையும் மற்ற பாஷைக்காரர்களையும் ஹிந்தி பாஷைக்கு அடிமையாக்கிவிடவே எண்ணுகிறார்கள்.
இதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது. தாய் மொழிப் பற்றுள்ள யாருமே ஒப்புக்கொள்ள முடியாதுதான்.
* * *
சில நாளைக்கு முன்பு தினப்பத்திரிகைகளில் திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாயிற்று, அகில இந்தியக் கல்வி மகாநாடு ஒன்று கூடியதாம். அதில் இந்தியாவின் பற்பல மாகாணங்களையும் சேர்ந்த கல்வி மந்திரிகளும் சர்வகலாசாலை வைஸ்சான்ஸ்லர்களும் வந்திருந்தார்களாம். பற்பல யோசனைகள் சொல்லப்பட்டனவாம்; பற்பல விஷயங்களைப் பற்றி விவாதித்தார்களாம்.
அந்த அபூர்வமான யோசனைகளில் ஒன்று,- மகாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று,- இந்தியாவில் உள்ள எல்லாக் காலேஜ் வகுப்புகளிலும் எல்லா விஷயங்களையும் ஹிந்தி பாஷையில் போதிக்க வேண்டும் என்பதுதான்!
எப்படி இருக்கிறது கதை? "அதாவது இத்தனை நாளும் நமது கல்வி முறையில் இங்கிலீஷ் வகித்த ஸ்தானத்தை இனிமேல் ஹிந்தி வகிக்கட்டும்!" என்கிறார்களிய ஹிந்தி ஏகாதிபத்தியவாதிகள்.
"இவ்வளவு நாளும் கழுத்தில் புல்லைக் கட்டிக்கொண்டு மென்று தின்றீர்களே! அதற்குப் பதிலாக இனிமேல் கல்லை கட்டிக்கொள்ளுங்கள் !" என்கிறார்கள்.
சென்னை மாகாணத்துக் கல்வி மந்திரி கனம் மாதவமேனன் மேற்படி யோசனையை எதிர்த்தாராம். இப்படி நீங்கள் விதி செய்தால் அதை எங்கள் மாகாணத்தில் மீறும்படியாகவே இருக்கும்" என்று எச்சரித்தாராம்.
அத்துடன் மேற்படி யோசனை கைவிடப்பட்டதாம். "முடிவாகக் கைவிடப் பட்டது" என்று சொல்லுவதற்கில்லை. மறுபடியும் சந்தர்ப்பம் வரும்போது அதே யோசனையை ஹிந்தி ஏகாதிபத்திய வாதிகள் கிளப்பிக் கொண்டுதானிருப்பார்கள். மற்ற பாஷைக்காரர்கள் விழிப்புடனிருந்து அத்தகைய முயற்சிகளை எதிர்க்கும்படிதானிருக்கும்.
ஏன் இப்படிச் சொல்கிறோமென்றால், மேற்கண்ட யோசனையானது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல; ஒரு பெரிய ஹிந்தி ஏகாதிபத்தியப் பிரசார திட்டத்தின் சிறிய அறிகுறியே யாகும்.
ஹிந்தி ஏகாதிபத்தியப் பிரயத்தனம் தற்சமயம் பல இடங்களில் பல உருவங்களில் தலை தூக்கித் திருவிளையாடல் புரிவதைப் பார்த்து வருகிறோம்.
காசி சர்வகலாசாலையில் முன்னெல்லாம் வெளி மாகாணங்களிலிருந்து வரும் மாணாக்கர்களுக்கு இடங் கொடுத்து வந்தார்கள். வகுப்புகளுக்குரிய தகுதியை மட்டும் கவனித்தார்கள்.
பிறகு. ஹிந்தி தெரிந்த மாணாக்கர்களை மட்டும் எடுத்துக்கொள்வோம் என்று சொன்னார்கள்.
அதற்குப் பிறகு, ஹிந்தியை நன்றாய்ப் படித்துத் தேறியவர்களையே எடுத்துக்கொள்வோம் என்றார்கள்.
இப்போது, ஹிந்தியைத் தாய் பாஷையாகக் கொண்டவர்களையே சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லத் தொடங்கி யிருக்கிறார்கள்.
இன்னும் சில தினங்கள் போனால், "போன ஜன்மத்திலும் ஹிந்தியைத் தாய் பாஷையாகக் கொண்டவர்களையே எடுத்துக்கொள்வோம்!" என்று நிபந்தனை போடுவார்கள் போலும்.
இம்மாதிரி வடநாட்டுக் கல்வி ஸ்தாபனங்களில் ஏற்படும் முட்டுக்கட்டைகள் ஒருபுறமிருக்க, இந்திய சர்க்கார் உத்தியோகங்களிலும் ஹிந்தியின் ஏகாதிபத்தியம் கொடுமையுடன் ஆட்சி செலுத்தத் தொடங்கி யிருக்கிறது.
எவ்வளவு நன்றாகத் தென்னிந்தியர்கள் ஹிந்தியைக் கற்றுக்கொண்டாலும் ஹிந்தியைத் தாய்பாஷையாகக் கொண்டவர்களைப்போல் அந்தப் பாஷையை லாகவமாக வழங்க முடியுமா?
ஏதோ ஆங்கிலேயர்களாவது. "இண்டியன் இங்கிலீஷ்" என்று தங்களுக்குள் சிரித்துவிட்டு, ஏதோ காரியம் நடந்தால் சரி என்று இருந்தார்கள். ஆனால் ஹிந்தி ஏகாதிபத்தியவாதிகளோ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மற்ற பாஷைக்காரர்களை மட்டந்தட்டவும், அதைக் காரணமாகக் கொண்டு கீழே அமுக்கிவைக்கவும் பார்க்கிறார்கள். இந்த நிலைமை கொஞ்சமும் நல்லதல்ல; நியாயமும் அல்ல.
* * *
தாய் மொழியையன்றி வேறொரு மொழியின் உதவி நமக்கு அவசியம் என்று ஏற்படும் பட்சத்தில், ஹிந்தியைக் காட்டிலும் ஆங்கிலத்தையே நாம் ஒப்புக்கொள்ளலாம். ஆங்கிலத்தை ஒப்புக்கொள்வதில் பலன் அதிகம் உண்டு. காலேஜு வகுப்புகளில் தமிழ் மொழியில் பாடங்கள் கற்பிப்பதற்குக் காலம் வரும் வரையில் ஆங்கிலத்தில் கற்பிப்பதே உண்மையில் பயனுள்ளதாயிருக்கும்.
ஆங்கில மொழியிலுள்ள அறிவுக் களஞ்சியங்களுக்கு அளவு சொல்ல முடியாது. ஆங்கில மொழியில் உள்ள இலக்கியச் செல்வம் ஏழு சமுத்திரங்களையும் விடப் பெரியது. அந்தப் பாஷையிலேயே எழுதப்படும் நூல்களையல்லாமல் உலகில் எந்த மூலையில் எந்தப் பாஷையில் ஒரு உபயோகமுள்ள புதிய நூல் எழுதப்பட்டாலும் அது அக்கணமே ஆங்கிலத்தில் வந்துவிடுகிறது.
தமிழ்நாட்டைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் புத்தகங்கள் தமிழில் உள்ளவற்றைக் காட்டிலும் ஆங்கிலத்தில் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
எழும்பூரில் மியூஸியத்தை அடுத்துள்ள கனிமரா லைப்ரரி' என்று சொல்லப்படுகிற புத்தக சாலைக்குச் சென்று பாருங்கள். அதில் தமிழ்நாட்டுப் பிராணிகள், பட்சிகள், விருட்சங்கள் முதலியவற்றைக் குறித்து எழுதப் பட்டிருக்கும் ஆங்கிலப் புத்தகங்களைக் கேட்டு வாங்கிக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.
தமிழ்நாட்டில் எத்தனைவிதமான மரங்களும் செடி கொடிகளும் இருக்கின்றன, அவற்றிற்குத் தமிழ்ப் பெயர் என்ன. தெலுங்கு, கன்னடம்; மலையாளம், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிப் பெயர்கள் என்ன ஆகிய விவரங்கள் அப்புத்தகங்களில் அடங்கியிருக்கின்றன. ஆகா! இத்தனை ஆயிரம் வகை மரஞ்செடி கொடிகளும் பிராணிகளும் பறவைகளும் நம் தென்னாட்டில் இருக்கின்றன என்று ஆச்சரியப்பட்டுப் போவோம். ஒவ்வொரு வகை மரஞ் செடி கொடிக்கும் இலை எப்படி யிருக்கும் என்று சித்திரம் போட்டும் காட்டி யிருக்கிறது.
இவ்வாறே உலகத்தில் எந்த மூலையில் எந்தப் பகுதியில் எந்தவிதமான விசேஷம் இருந்தாலும் அதைப்பற்றி ஆங்கில பாஷை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஆஸ்திரேலியா தேசத்தையடுத்த கடல்களில் எத்தனை ஆயிரம் வகை மீன்கள் இருக்கின்றன என்பதைப் படங்களுடன் விவரமாகக் கூறும் பெரிய புத்தகங்கள் ஒன்பது இருக்கின்றன.
இன்னும், ஆங்கில பாஷையில் இதுவரை அச்சாகி வெளியாகியிருக்கும் புத்தகங்களைப் பற்றி ஒரு கணக்குச் சொல்லுகிறார்கள். இரண்டு (2) என்னும் இலக்கத்தைப் போடுங்கள். அதற்குப் பின்னால் இருபது பூஜ்யங்களைப் போடுங்கள். இப்படிப் போட்ட எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்வதற்குச் சாதனம் ஒன்றும் கிடையாது. கற்பனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்! அத்தனை புத்தகங்கள் ஆங்கில பாஷையில் வெளி வந்திருக்கின்றன! வேறொரு பாஷையின் மூலம் நமது பிள்ளைகள் காலேஜுப் படிப்புக் கற்றுக்கொள்வது என்று ஏற்பட்டால், அதற்குரிய பாஷை உலக பாஷையாகிய ஆங்கிலமேயாகும்.
ஹிந்தி பாஷையை வளர்ப்பதற்கென்று இன்றைக்கு ஆரம்பித்துப் பெரும் பிரயத்தனம் செய்தால் ஒருவேளை இன்னும் நூறு வருஷங்களில் ஆங்கில பாஷைக்கு நிகரான அறிவுச் செல்வங்களையும் இலக்கியச் செல்வங்களையும் உண்டாக்கலாம். ஆனால் அதற்குள்ளே ஆங்கில பாஷை இன்னும் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்குமோ தெரியாது!
நம்முடைய காலேஜுகளில் ஆங்கில மொழியை அகற்றிவிட்டுத் தமிழைக் கொண்டு வருவதென்றால், தாய்மொழி அபிமானங் காரணமாக அதை நாம் ஒப்புக்கொள்ளலாம். தமிழை வளர்ப்பதற்கு அது ஒரு சாதனமாகும் என்று எண்ணித் திருப்தி யடையலாம்.
ஆனால் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஹிந்தியை உபயோகிப்பது என்பது முழு மடமையேயாகும்.
* * *
இந்தியாவுக்கு ஒரு தேசீய பாஷை வேண்டும் என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். அந்தத் தேசீய பாஷை ஹிந்தி பாஷையாகத்தான் இருக்கமுடியும் என்பதையும் ஒத்துக்கொள்கிறோம்.
தேசீய பாஷை எந்தெந்தக் காரியத்துக்கு அவசியமோ அந்தக் காரியங்களுக்கு மட்டுமே அதை வைத்துக்கொள்வோம். அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும். இந்திய சர்க்காரில் உத்தியோகம் பார்ப்பதற்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும். வியாபாரிகளுக்கும் யாத்திரீகர்களுக்கும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும். சில சமயம் வரும் நல்ல ஹிந்தி சினிமாக்களைப் பார்ப்பதற்கும் ஹிந்தி தெரிந்திருக்கலாம். இதற்கெல்லாம் தெரிந்திருக்க வேண்டிய ஹிந்தி மிகவும் சொற்பம்.
மற்றப்படி அறிவைத் தேடுவதற்கோ இலக்கியச் சுவையை அநுபவிப்பதற்கோ பண்பாட்டை வளர்ப்பதற்கோ ஹிந்தி பாஷையினால் பயன் ஒன்றும் இல்லை.
தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் உள்ளவை போன்ற பழம் பெரும் இலக்கியங்களை ஹிந்தியில் காணமுடியாது.
தற்காலத்தில் வெளியாகும் சுமாரான ஹிந்தி இலக்கியங்கள் தமிழில் வெகு சீக்கிரத்திலேயே வந்துவிடுகின்றன.
* * *
ஹிந்தி பாஷைக்காரர்கள் அந்தப் பாஷையின் ஏகாதிபத்தியத்தை ஸ்தாபிக்க விரும்புகிறார்கள் என்று நாம் சொல்லுவது விளையாட்டல்ல; வெறும் பயமுறுத்தலும் அல்ல, வடநாட்டு அரசியல்வாதிகள் - ஹிந்தி பண்டிதர்களுக்கிடையே இத்தகைய ஏகாதிபத்திய வெறி வளர்ந்து வருகிற தென்பதற்குப் பல அறிகுறிகள் காணப்பட்டு வருகின்றன. வடநாட்டுக்குச் சென்று வரும் தமிழ் நாட்டுப் பிரதிநிதிகள் பலரும், வடநாட்டில் வாழ்க்கை நடத்திவரும் தமிழர்கள் பலரும் ஏற்கெனவே இதைப் பற்றி புகார் செய்து வந்திருக்கிறார்கள்.
அதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல, "காலேஜுகளில் ஹிந்தி மூலம் பாடம் போதிக்க வேண்டும்" யோசனை வெளியாகியிருக்கிறது, என்ற யோசனை வெளியாகி யிருக்கிறது.
எனவே, ஹிந்தி பாஷையின் ஏகாதிபத்தியத்தை ஸ்தாபிக்கும் முயற்சி வெறும் பூச்சாண்டி அல்ல; நமக்கு ஏற்பட்டுள்ள உண்மையான அபாயம் என்றே முடிவு கட்டவேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தார் சில காலத்துக்கு முன்பு "ஹிந்தி ஒழிக!" என்ற கூச்சலைக் கிளப்பினார்கள். இந்தக் குறுகிய துவேஷ மனப்பான்மை கொண்ட கூச்சலைத் தமிழ்ப் பெருமக்கள் எதிர்த்து ஒழித்துக்கட்டினார்கள்.
அதுபோலவே ஹிந்தி பாஷையின் ஏகாதிபத்தியத்தை ஸ்தாபிக்கும் முயற்சியையும் தமிழ்ப் பெருமக்கள் எதிர்த்து ஒழிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
* * *
"இந்தியாவின் தேசிய பாஷையாக ஹிந்தியைக் கொள்ளுங்கள்" என்று காந்தி மகாத்மா கூறிய உபதேசத்தை நாம் என்றும் சிரமேற்கொண்டு நடக்கச் சித்தமாயிருக்கிறோம்.
அதேமாதிரி, "தாய் மொழியைப் போற்றி வளருங்கள்" என்று காந்தி மகான் அருளிய உபதேசத்தையும் நமது இதயத்தில் பதித்து வைத்துக்கொண்டு அதன்படியே நடப்போம்.