
இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்களுக்கு கவனச்சிதறலும் கவனக்குறைவும் முக்கியமான பிரச்னைகளாக மாறி வருகின்றன. பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடங்கள் என எங்கு சென்றாலும், ஏதேனும் ஒரு தருணத்தில் ஏற்படும் கவனக்குறைவால் தடுமாறி, சில சமயங்களில் சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர். இந்த நிலை அவர்களின் அன்றாட வாழ்க்கையையும், செயல்திறனையும் பெரிதும் பாதிக்கிறது. இந்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் கவனச்சிதறலுக்கான காரணங்களையும், அதனை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் இங்கே வாசிக்கலாம்.
கவனச்சிதறலுக்கான சில முக்கிய காரணங்கள்
டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு:
ஸ்மார்ட்போன்கள், சமூக வலைத்தளங்கள், வீடியோ கேம்கள் போன்றவை இளைஞர்களின் நேரத்தை பெருமளவு பாதித்து, அவர்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. தொடர்ந்து வரும் அறிவிப்புகள், குறுஞ்செய்திகள், தகவல்கள் போன்றவை ஒரு பணியில் முழுமையாக ஈடுபட முடியாமல் தடுக்கின்றன.
மன அழுத்தம் மற்றும் பதட்டம்:
படிப்பு, வேலை, எதிர்காலம் குறித்த கவலைகள், தனிப்பட்ட பிரச்னைகள் போன்றவை மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் உருவாக்குகின்றன. இதுவும் கவனச்சிதறலுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
தூக்கமின்மை:
போதிய தூக்கமின்மை மூளையின் செயல்பாட்டை பாதித்து, கவனம் செலுத்தும் திறனை குறைக்கிறது.
சமச்சீரற்ற உணவு:
ஆரோக்கியமற்ற உணவுகள், குறிப்பாக பாஸ்ட் புட்கள் அதிகமாக உட்கொள்வது, மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கிடைக்க விடாமல் செய்து, கவனக்குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
செயலில் தெளிவின்மை:
என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான இலக்கு இல்லாத நிலையில், இளைஞர்கள் எளிதில் கவனச்சிதறலுக்கு ஆளாகின்றனர்.
கவனச்சிதறலை சமாளிப்பது எப்படி?
டிஜிட்டல் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள்:
ஸ்மார்ட்போனில் அறிவிப்புகளை அணைத்து வையுங்கள்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு செயலிகளுக்கு சிறிய நேரம் மட்டுமே ஒதுக்கி பயன்படுத்துங்கள்.
தூங்கும் முன் மற்றும் கண் விழித்த உடனடியாக மொபைலை தவிர்த்து, சிறிது நேரம் வேறு பணிகளில் கவனம் செலுத்துங்கள்.
ஓர் இலக்கை நிர்ணயித்து செயல்படுங்கள்:
ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுங்கள்.
முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை .
சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள்.
ஒரு பணியில் கவனம் செலுத்துங்கள்
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முயற்சிப்பதை தவிருங்கள்.
ஒரு பணியை முடிக்கும் வரை, வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த வேண்டாம். ஒரே பணியில் முழு கவனத்துடன் ஈடுபடுவது உங்கள் செயல்திறனை மேம்படுத்துகிறது.
தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள்:
தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
யோகா பயிற்சி மனதையும் உடலையும் சமநிலைப்படுத்தி, கவனத்தை மேம்படுத்தும்.
போதுமான தூக்கம் அவசியம்:
தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். இது மூளையின் செயல்பாட்டை சீராக்கி, கவனத்தை மேம்படுத்தும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:
சத்தான, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ், கீரைகள் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுங்கள்:
தொடர்ந்து ஒரு வேலையை செய்யாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை சிறு சிறு இடைவெளிகள் எடுத்துக்கொள்ளுங்கள்.
இது சோர்வை குறைத்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்.
கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்:
புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது, புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வது போன்றவை மூளையை சுறுசுறுப்பாக வைத்து, கவனத்தை மேம்படுத்தும்.
கவனச்சிதறல் என்பது பலருக்கும் ஏற்படும் இயல்பு நிலை. ஆனால் அதை சரியான முறையில் அணுகினால் கட்டுப்படுத்த முடியும். மேற்படி கூறிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால், உங்கள் கவனத்தை உயர்த்தி, தெளிவாக சிந்திக்கவும் முடிவுகளை நன்கு எடுக்கவும் உதவும். தெளிவான சிந்தனை இருந்தால், நீங்கள் எதை செய்தாலும் சிறப்பாக செய்யலாம். எனவே, நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தெளிவான சிந்தனை இருந்தால் வெற்றி நிச்சயமாக உங்களுக்கே.