இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் அனைவரும் பிஸியாக வாழ்ந்து வருகிறோம். படிப்பு, வேலை, சரியான உணவும் தூக்கமும் இல்லாமல் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். இதனால் தலைவலி, உடல் சோர்வு, செரிமானக் கோளாறு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் பலருக்கும் தொடர்ந்து ஏற்படுகின்றன.
இதை சரி செய்ய வாயு முத்ரா ஒரு எளிய வழியாக திகழ்கிறது.
இந்த முத்ராவை தினமும் 5 நிமிடங்கள் மட்டும் செய்து வந்தாலே, உடலுக்குள் இருக்கும் காற்று சக்தி சமநிலையாகி, நம்முடைய உடலும் மனமும் சீராக இயங்க தொடங்கும். மருந்துகளுக்கு மாற்றாக, நம் கைகளால் செய்வதற்கான எளிய பயிற்சிதான் முத்திரை.
வாயு முத்ரா என்றால் என்ன?
நம் உடலில் உள்ள காற்று சக்தியை சமநிலைப்படுத்தும் சிறந்த முத்திரையாக வாயு முத்ரா விளங்குகிறது. பிராண சக்தியை நிலைப்படுத்துவதால் மன அமைதியையும், உடல் நலத்தையும் மேம்படுத்தும் தன்மையுடன் உள்ளது. குறிப்பாக, வாயு சார்ந்த கோளாறுகளால் அவதிப்படுவோருக்கு இம்முத்திரை பெரும் நன்மைகளை தருகிறது.
வாயு முத்ரா செய்வது எப்படி?
• முதுகெலும்பை நேராக வைத்துக்கொண்டு அமைதியாக அமரவும்.
• மூச்சை ஆழமாக இழுத்து மெதுவாக விடவும்.
• ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையின் அடியில் தொடும்படி வைக்கவும்.
• கட்டைவிரலை, ஆள்காட்டி விரலின் மேல் வைக்கவும்.
• இந்த நிலையை குறைந்தபட்சம் 5 நிமிடங்கள், இடைவெளிகளில் தொடர்ந்து செய்யவும்.
• முத்திரையைச் செய்யும் போது, குறைந்தபட்சம் 60 முறை ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும்.
இந்த முத்திரையை உட்கார்ந்தும், நின்றும், நடக்கும்போதும், வேலை இடைவெளிகளிலும் செய்யலாம்.
வாயு முத்ராவின் நன்மைகள்
• உடலின் நரம்பியல் அமைப்பை சீராக்குகிறது.
• காற்று சார்ந்த உறுப்புகளின் செயல்பாடுகளை சமநிலைப்படுத்துகிறது.
• வாயு தொந்தரவு காரணமாக ஏற்படும் மலச்சிக்கல், சிறுநீரக கோளாறுகள், மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.
• வாயுவை சமநிலையில் வைத்தால், முகம் பொலிவடைந்து, உடல் புத்துணர்வாக இருக்க உதவுகிறது.
• நுரையீரல், பெருங்குடல் மற்றும் பிராண சக்தி சமநிலை அடைந்து இயல்பாக செயல்பட உதவுகிறது.
வாயு முத்ரா என்பது எளிமையாக பயிற்சி செய்யக்கூடிய மருத்துவ முறையாகும். தினசரி வாழ்க்கையில் நேரமில்லாமல் இருந்தாலும் கூட, சில நிமிடங்கள் ஒதுக்கி நீங்களும் இம்முத்திரையை செய்வதன் மூலம் மனதளவிலும், உடல் நிலையிலும் உணரத்தக்க மாற்றங்களை காணமுடியும். இயற்கையின் சக்தியை நம் உள்ளேயே அறிந்துகொண்டு, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வாயு முத்ரா ஒரு சிறந்த பயிற்சி என்றே சொல்லலாம்..