
வெற்றி என்பது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் அந்த சின்ன விஷயத்தில் அடைவதற்காக நாம் எத்தனை தடைகளை கடந்து செல்ல வேண்டி இருக்கும் தெரியுமா? நாம் கடந்து செல்லும் விஷயங்கள்தான் பெரிது ஆனால் வெற்றி என்னவோ சின்னது தான்.
வெற்றி என்று இலக்கு வேண்டுமானால் சின்னதாக இருக்கலாம் ஆனால் அதை அடைவதற்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. எந்த ஒரு மனிதனும் சரி அனுபவம் இல்லாமல் எந்த ஒரு இலக்கையும் அடையவே முடியாது. அதற்கு மிகப்பெரிய உதாரணம் கணித மேதை வில்லியம் டஃபீல்ட் வாழ்வில் நடந்த சம்பவமே அதைப்பற்றி பதிவில் பார்ப்போம்.
1897 வில்லியம் டஃபீல்ட் என்ற கணிதமேதை 25 வருடங்களாக லாகரிதங்கள் என்னும் துறையில் ஆராய்ச்சி செய்து வந்தார். தன் கண்டுபிடிப்புகளை 5000 பக்கக் குறிப்புகளாக எழுதி வைத்து, ஒரு பெட்டியில் பத்திரமாகப் பூட்டி வைத்திருந்தார்.
ஒரு நாள் அவரது வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்தார்கள். பெட்டியில் பணமும், நகைகளும் இருக்கும் என்று அதை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். அது அவர்களுக்குக் குப்பை. ஆனால், டஃபீல்டுக்கு அது விலை மதிப்பில்லாப் பொக்கிஷம்.
தன் ஆராய்ச்சிக் குறிப்புகள் திருட்டுப்போனதை உணர்ந்த டஃபீல்ட் திடுக்கிட்டார். என்ன செய்தார்? விதியை நொந்தபடி அழுதாரா? இல்லை.
மீண்டும் ஆராய்ச்சியை முதலில் இருந்து தொடங்கினார். முடித்தவுடன், உலகுக்கே பயன்படும் நூல் அது என்று உணர்ந்த அமெரிக்க அரசு 800 பக்கப் புத்தகமாக வெளியிட்டது. இன்றும், ஆயுதப் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் அடிக்கடி பயன்படுத்தும் புத்தகமாக இருக்கிறது டஃபீல்டின் படைப்பு!'
விளையாட்டு, எழுத்து, இசை, அறிவியல், ஆட்சி என எந்தத் துறையிலும் ஜெயிப்பவர்களின் மேல் புகழ் வெளிச்சம் விழுகிறது. நாம் பிரமித்துப் போகிறோம். இந்த பிரமிப்பில், நம்பிக்கை தளராத உழைப்பே அவர்களுக்கு வெற்றியைக் கொண்டு வந்தது என்பதை உணரத் தவறுகிறோம்.
பரங்கிமலை மேல் ஏறுகிறவன் சுலபமாக உச்சியை எட்டிவிடுகிறான். எவரெஸ்ட் சிகரத்தைத்தொட விரும்புகிறவன் ஒவ்வொர் அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய கட்டாயம். ஓர் அடி சறுக்கினாலும் அதல பாதாள மரணம், சில்லிட வைக்கும் குளிர், மூச்சுத்திணற வைக்கும் காற்றுத் தட்டுப்பாடு. சாதிக்க ஆசைப்படும் எல்லா மனிதர்களும் ஆயிரமாயிரம் சோதனைகளை எதிர்நோக்கியே ஆகவேண்டும்.
சாதித்த அத்தனை பேரிடமும் கேட்டுப் பாருங்கள். வெற்றி என்பது இலக்கை எட்டுவது மட்டுமல்ல. அது வெற்றியின் மிகச் சிறிய அம்சம்தான். வெற்றி ஒரு பயணம். அந்தப் பயணத்தில் அடிக்கடி கீழே விழுவோம், அடிபடும், முட்டி உடையும்.
இந்த வலிகள், இந்த ரணங்கள், இவற்றையெல்லாம் மீறி. கீழே விழுந்தவர்கள் எழுந்து நிற்கிறோமே, அதுதான் நிஜமான வெற்றி. இலக்கைத் தொட்டாலும், தொடாவிட்டாலும் நாம் ஜெயித்தவர்கள்.
நாம் எடுக்கும் முயற்சிகளில் தோல்விக்கு மேல் தோல்விகள் வருகின்றனவா? ஆண்டவன் நம்மைச் சோதிக்கவில்லை, நாம் தொடவேண்டிய உயரங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன என்று நம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறான், புடம் போட்டுக் கொண்டிருக்கிறான், நமக்கு வாழ்வுப் பயிற்சி தந்து கொண்டிருக்கிறான். நாம் புள்ளிகளை வைக்கிறோம். ஆண்டவன் கோலங்களைப் போடுகிறான். முயற்சி நம்முடையது; முடிவு அவனுடையது.