

பெரியோர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில், நம்மையறியாமல் சிக்கனமாக இருக்கக் கற்றுக்கொண்டோம். அந்த வாழ்க்கை முறையே நமக்கு அனுபவப் பாடமாக இருந்தது. தேவைக்கு அதிகமாக பொருள் வாங்குவது, ஆடம்பரமாக செலவு செய்வது என ஏதுமே அறிந்து கொள்ளவில்லை. மாறாக, பணம், நேரம் போன்றவற்றை நன்கு சேமிக்க கற்றுக்கொள்ள உதவியது.
இன்றைய காலகட்டத்தில், சிக்கனம் என்று சொன்னாலே கஞ்சத்தனம் என்று புரிந்து கொள்கிறார்கள். நம் வாழ்க்கைக்கு, அத்தியாவசிய தேவைக்குக் கூட செலவு செய்யாமல், கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் கஞ்சத்தனம். நாம் சம்பாதிக்கும் பணம் நம் தேவைக்குத்தானே என்று எண்ணிக்கொண்டு அளவுக்கு அதிகமாக வீண்செலவு செய்வது ஆடம்பரம்.
சிலர் தங்கள் அந்தஸ்தை, வெளிக்காட்ட ஏராளமான பொருட்செலவில் தங்கள் வீட்டுத் திருமணத்தை நடத்துவதை நாம் பார்க்கலாம். அவர்களின் பணத்தை செலவழிக்கும்போது, எல்லோருக்கும் பொதுவான நீர், மின்சாரம், உணவுப்பொருட்கள் என அனைத்தையும் அளவுக்கும் அதிகமாக செலவழிப்பதும் ஆடம்பரமே.
பகட்டு, ஆடம்பரம் போன்றவை மின்மினி பூச்சிகள் போன்றது. அப்போது மகிழ்ச்சி தரும். ஆனால் எளிமை, சிக்கனம், சேமிப்பு போன்றவை நமக்கு மனநிறைவை எப்போதும் தரும்.
"சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, தனிமனிதனின் சிக்கனம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றது என நாம் அறிவோம். சிக்கனத்திற்கு எடுத்துக்காட்டாக, இன்றும் காந்திஜியின் பழக்கத்தை நினைவு கூறுவார்கள். தான் பல்துலக்க உபயோகிக்கும் வேப்பங்குச்சியை கூட இருபுறமும் வெட்டி உபயோகிப்பார். அவரது எளிமை, சிக்கனம் இரண்டையுமே இதனால் அறிய முடிகிறது.
சேமிப்பு என்பது, பணம் மட்டுமல்லாது, நம் நாட்டின் இயற்கையான வளங்களையும் குறிக்கும். இந்த வளங்களே ஒரு நாட்டின் பொக்கிஷம். அவற்றை தக்க முறையில், சிக்கனமாக உபயோகிக்க வேண்டும்.
ரகு, மேற்படிப்புக்காக ஜெர்மனி சென்று இருந்தான். ஒருநாள், நண்பர்களோடு சாப்பிட ஒரு உணவகத்துக்குச் சென்றபோது மிகச்சிலரே இருந்தனர். நண்பர்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தனர். ஆர்டர் செய்த உணவுகள் அனைத்தையும் முழுமையாக சாப்பிட முடியாதலால், பாதிக்கும் மேல் தட்டிலேயே மிச்சம் வைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.
அப்போது, வயதான பெண்மணி இவர்களைப் பற்றி மேனேஜரிடம் ஏதோ சொல்ல, அவரும், அவர்களிடம் வந்து, "உணவை வீணாக்கியது தவறு. மீண்டும் இந்தத் தவறை செய்யாதீர்கள்" என கூறினார். உடனே ஒரு நண்பர், "நாங்கள் பணம் கொடுத்துதானே வாங்கினோம்" என்று சொன்னார்.
அதைக் கேட்டதும் அவர் சிரித்துக்கொண்டே, " இப்போது நான், சோஷியல் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு போன் செய்து, அவர்கள் இங்குவந்துப் பார்த்தால் உணவை வீணாக்கியதற்காக உங்களுக்கு அபராதம் விதிப்பார்கள். உங்களுக்கு இந்த நடைமுறை தெரியவில்லை என்று எண்ணுகிறேன். பணம் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால், நாட்டின் இயற்கை வளம் அனைவருக்கும் பொதுவானது. அதை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை. புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்" என்றதும், அனைவரும் நன்றி எனக் கூறியதோடு, நல்ல பழக்கத்த்தையும் கற்றுக்கொண்டனர். சில நாட்டு சட்டத்திட்டங்களே இயற்கை வளத்தை பாதுகாக்கிறது.
நமக்குக் கிடைக்காத சில வசதிகள், நம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கித் தருவதற்குப் பதிலாக, சிறு சிறு சேமிப்பு பழக்கத்தை கற்றுத்தந்தால் சிறப்பாக இருக்கும். அவர்களும், இளம்வயதிலேயே நல்ல பண்புகளையும் கற்றுக்கொள்வார்கள்.
பணம் கையில் இருக்கிறது என்பதற்காக எதையும் வீணடிக்கலாமா என்ற கேள்விக்கு விடை தேடும் அதேவேளையில், நமது இயற்கை வளம் அடுத்த தலைமுறைக்கு பொக்கிஷமாக சேமித்து வைப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது.