

பிறந்தது முதல் ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக, தந்தையாக எனப் பல வேடங்களில் ஆண்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். "எல்லாம் என் குடும்பத்துக்குத் தான்" என்று சொல்லிச் சொல்லியே தன்னைத் தொலைத்த ஆண்கள் இங்கு ஏராளம்.
குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது கடமைதான், ஆனால் உங்களை நீங்களே பார்த்துக்கொள்வது அதைவிட முக்கியம். ஒரு ஆண், தன் சுயமரியாதையையும், நிம்மதியையும் இழக்காமல் வெற்றியாளனாக வலம் வரச் சில கசப்பான உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் பர்ஸ் கனமாக இருக்கட்டும்!
நீங்கள் மாதம் ஐந்தாயிரம் சம்பாதித்தாலும் சரி, ஐந்து லட்சம் சம்பாதித்தாலும் சரி, சம்பளம் வந்தவுடன் அதில் ஒரு சிறு பகுதியை 'எனக்காக' என்று தனியாக எடுத்து வையுங்கள். "என் சம்பாத்தியம் முழுவதும் குடும்பச் செலவுக்கும், எதிர்காலச் சேமிப்புக்கும்தான்" என்று நீங்கள் நினைத்தால், அது மிகப்பெரிய தவறு.
நாளை உங்களுக்கு ஒரு ஆசை வரும்போதோ அல்லது அவசரத் தேவைக்கோ குடும்பத்தைக் கையேந்திக் கொண்டிருக்க முடியாது. சிக்ஸ் பேக் உடம்பையோ, விலை உயர்ந்த ஆடைகளையோ விட, ஒரு ஆணுக்கு உண்மையான கம்பீரத்தைத் தருவது அவனது வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்புதான். அது தரும் தைரியம் வேறெப்படியும் வராது.
அடையாளத்தை மாற்றாதீர்கள்!
மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவோ, குறிப்பாகப் பெண்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவோ உங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளாதீர்கள். நீங்கள் ஜீன்ஸ் போட்டால் அவர்களுக்கு வேட்டி பிடிக்கும், வேட்டி கட்டினால் ஜீன்ஸ் பிடிக்கும். அடுத்தவர்களின் ரசனைக்காக நாம் ஆடை மாற்றுவதும், குணத்தை மாற்றுவதும் முட்டாள்தனம். உங்கள் வேலையிலும், செயலிலும் வீரனாக இருந்தால், உலகம் தானாகவே உங்களைத் திரும்பிப் பார்க்கும்.
சொல் குறைவு, செயல் அதிகம்!
ஒரு ஆண் எப்போதுமே குறைவாகப் பேச வேண்டும். "யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே வைக்க வேண்டும்" என்பது பேச்சிற்கும் பொருந்தும். தேவையற்ற இடங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்வதை விட, மௌனமாக இருந்து காரியத்தைச் சாதிப்பவதே புத்திசாலித்தனம். உங்கள் பேச்சு நாணயமாகவும், உண்மையாகவும் இருக்கட்டும். அதேசமயம், பாசத்திற்கு அடிமையாகிவிடாதீர்கள். பாசமோ, நட்போ ஒரு எல்லைக்கு மேல் போனால் அது உங்களை பலவீனமாக்கிவிடும். பற்றற்ற நிலையில் இருப்பது உங்களை எந்தச் சூழலிலும் கலங்க விடாது.
உடல்நலமே மூலதனம்!
"எனக்கு ஒன்னும் ஆகாது" என்ற மிதப்பில் இருக்காதீர்கள். உங்கள் தந்தைக்கோ, தாத்தாவுக்கோ என்ன வியாதி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பரம்பரையாக வரக்கூடிய நோய்களை முன்கூட்டியே கணித்து, அதற்கு ஏற்றார் போல உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
இன்றைய காலத்தில் பெண்களும் சம்பாதிக்கிறார்கள், குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியே. ஆனாலும், ஒரு குடும்பம் என்று வரும்போது, இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும் தைரியம் ஆணுக்குத்தான் அதிகம் இருக்க வேண்டும். எத்தனை பேர் ஆலோசனை சொன்னாலும், கப்பலின் கேப்டன் நீங்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வாழ்க்கை என்பது கடந்து போவது அல்ல, வாழ்ந்து தீர்ப்பது. கஷ்டங்களும், தோல்விகளும் வரும்போது "இதுவும் கடந்து போகும்" என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்திற்காக உழைக்கும் அதே வேளையில், உங்களுக்கான தனிப்பட்ட சுதந்திரத்தையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ளுங்கள். சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து வாழுங்கள்!